பெண்களாலும் வாசிக்க முடியும்!

ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் நவராத்திரித் திருவிழா பல ஆண்டுகளாகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு
பெண்களாலும் வாசிக்க முடியும்!

ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் நவராத்திரித் திருவிழா பல ஆண்டுகளாகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 4 ஆம் நாள் திருவிழாவின் போது ஓர் இளம்பெண் சாக்ஸபோன் இசைக்கருவி மூலம் பக்தி இன்னிசைக் கச்சேரியை நடத்திக் காட்டினார்.
 ஆன்மீகம், தத்துவம், காதல் என பழைய,புதிய திரைப்படப் பாடல்களை சாக்ஸபோன் இசைக்கருவி மூலம் அந்தப் பெண் பாடியது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
 கடந்த 4 ஆண்டுகளில் மதுரை, திருச்சி, ராமநாதபுரம், காரைக்குடி என பல்வேறு ஊர்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட இன்னிசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கும் அந்தப் பெண், கோவை மாவட்டம் பேரூரைச் சேர்ந்தவர். பெயர் க.பாண்டிச்செல்வி.
 இனி அந்த இசைக்கலைஞரே பேசுகிறார்:
 ""அடால்ப் சாக்ஸ் என்ற மேலைநாட்டு இசைக்கலைஞர் ஒருவர் கடந்த 1840 இல் கண்டு பிடித்த இசைக்கருவி இது. அவரது பெயராலேயே சாக்ஸபோன் என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த என் தந்தை கருப்பையா ஒரு சிறந்த தவில் வித்வான். அவருக்கு இக்கருவி மிகவும் பிடிக்கும். தன்னைப் போல எல்லா ஊர்களுக்கும் சென்று பல்வேறு கச்சேரிகளை நான் நடத்த வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை. அவரைப் போல நானும் இசை உலகில் புக வேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது கனவை நிறைவேற்றவே நான் இக்கருவியை வாசிக்கப் பழகிக்
 கொண்டேன்.
 ஒரு வருடம் மட்டுமே பயிற்சி எடுத்துக் கொண்டேன். கோவை பேரூரில் உள்ள தஞ்சை.ரவிச்சந்திரன், நாதஸ்வர வித்வான் சக்திவேல், கிளாரினெட் வேணுகோபால் ஆகியோர் எனக்கு குருநாதர்களாக இருந்து இக்கருவியில் வாசிக்கும் நுட்பத்தை கற்றுத் தந்தனர். இக்கருவியை கோவையில் முதல் முதலில் வாசித்த பெண் நானாகத்தான்
 இருப்பேன்.
 திருமண விழாக்கள்,கோவில் திருவிழாக்கள் என எனது குழுவினரின் சிறப்பான ஒத்துழைப்பால் தான் பல ஊர்களுக்குச் செல்ல முடிகிறது. இக்கருவியை இசைக்க துணை இசைக்கருவிகளான தவில், மிருதங்கம், கீ போர்டு, வயலின், தபேலா ஆகியனவும் மிக அவசியம்.
 நாதஸ்வரத்தை நமது மூச்சுக்காற்றில் மட்டுமே வாசிக்க முடியும். ஆனால் சாக்ஸ போனில் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் ஒரு கீ உள்ளது. ஆனால் நாதஸ்வரத்துக்கு சுதி குறைவு. இரண்டரை சுதி தேவைப்படும். அதே நேரத்தில் சாக்ஸபோனில் அதிகமாகச் சுதி தர வேண்டும். அதிகபட்சமாக ஆறரை சுதி தேவைப்படும். இதனால் துவக்க காலத்தில் என்னால் அதிகமான சக்தி கொடுத்து பாட முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.
 ""பெண் பிள்ளையா இருக்கிற நீ ஊர், ஊராப் போயெல்லாம் வாசிக்க முடியாது. வேண்டாம்'' என்றார்கள். சக இசைக்கலைஞர்கள் கூட, ""உனக்கெதுக்கு இதெல்லாம்?'' என்றார்கள். ஆனால் நான் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அப்பாவின் கனவை,ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும். நாமும் ஒரு சிறந்த இசைக்கலைஞராக இசை உலகில் பவனி வர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. எனது விடாமுயற்சியின் காரணமாக இப்போது நான் ஓரளவு மட்டும் வெற்றி பெற்றிருப்பதாகவே கருதுகிறேன்.
 பார்வையாளர்கள் அதிகம் ரசிப்பது பழைய திரைப்படப் பாடல்களாக இருந்தால் காலங்களில் அவள் வசந்தம்,ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே,ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன். செந்தமிழ்த் தேன் மொழியாள் போன்ற பாடல்களுக்கு அதிகமான கைதட்டல்கள் கிடைக்கும். புதிய படங்களாக இருந்தால் சொல்லிட்டாளே அவ காதலை(கும்கி), வாங்கண்ணா,வணக்கம் அண்ணா(தலைவா), கண்கள் இரண்டால் (சுப்பிரமணியபுரம்), அய்யய்யோ ஆனந்தமே(கும்கி) போன்றவற்றைப் பாடும்போது கைதட்டல்கள் கிடைக்கும். புதிய படப்பாடல்களை விட பழைய பாடல்களைத் தான் கேட்க பலரும் ஆசைப்படுகின்றனர்'' என்றார்.

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com