

தில்லி இந்திரப் பிரஸ்தா எஸ்டேட்டில் உள்ள இந்திய கலாசார உறவுகள் மையத்தின் அரங்கில் பெண் ஓவியக் கலைஞர் அர்ச்சனா குப்தா (42) கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.
மனத்தின் உணர்வுகளைக் காட்சி மொழியாக வெளிப்படுத்தும் வலிமை ஓவியப் படைப்புகளுக்கு உண்டு. அந்த வகையில், பழமையான, செறிந்த வளமுடைய இந்திய தொன்மவியலைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்களைத் தீட்டி இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் "பாரம்பரியமும், வண்ணங்களும்' எனும் தலைப்பில் இந்த ஓவியக் கண்காட்சியை நடத்தினார் அவர்.
""அடிப்படையில் எனது தந்தை சுரேஷ் சந்த் ஜெயின், நுண்கலை ஓவியத்தில் நிபுணர். தில்லி லலித் கலா அகாதெமியில் தேசிய விருது பெற்றவர். எனக்கு 12 வயதாக இருக்கும்போதே ஓவியத்தில் ஈர்ப்பு ஏற்பட்டது. அவர்தான் ஓவியம் வரைய எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
பள்ளிப் படிப்புக்குப் பிறகு தில்லியில் உள்ள ஷர்தா உகில் கலைக் கல்லூரியில் ஓவியப் பிரிவில் சேர்ந்தேன். ஓவியத்தில் பல நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் ஓவியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். திருமணத்திற்குப் பிறகு, ஆடிட்டரான எனது கணவர் ரவி குப்தா ஓவியம் வரைவதில் எனக்கிருந்த ஈடுபாட்டைக் கண்டு ஊக்குவித்தார். கடந்த 30 ஆண்டுகளாக ஓவியம் வரைந்து வருகிறேன்.
தற்போது எனது இரு குழந்தைகள் பள்ளி, கல்லூரியில் படிக்கின்றனர். அவர்களைப் பராமரிக்க நேரம் ஒதுக்குவது போல, ஓவியம் வரைவதற்கும் நேரம் செலவழிக்கிறேன். பல இடங்களில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறேன். ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளேன். லக்னோவில் 1990-இல் நடைபெற்ற தேசியக் கண்காட்சிக்காக நான் வரைந்த படம் தேர்வு செய்யப்பட்டது.
தொடக்கத்தில் நீர் வண்ணம், தைல வண்ணங்களைப் பயன்படுத்தும் ஓவியங்களை வரைந்தேன். அதன் பிறகு கேன்வாஸ் மூலம் அக்ரிலிக் வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.
ஓவியத்தைப் பணம் ஈட்டும் நோக்கில் வரைவதில்லை. அதேசமயம் எனது கலையை மதித்து ஓவியத்தை கேட்கும் ஆர்வலர்களுக்கு விற்கவும் தயங்குவதில்லை.
நமது இந்திய தேசம் பாரம்பரியம், கலாசாரச் செறிவு மிக்கது. அதன் மீதான ஈர்ப்பு காரணமாக இந்திய தொன்மவியல் சார்ந்த ஓவியங்களை வரையும் ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக எல்லோரா, அஜந்தா, கஜுரஹோ உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்குள்ள பழமையான ஓவியங்களைக் கண்டறிந்தேன். இத்தகைய ஓவியங்களை வரைவதில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்.
தற்போது நடத்தப்படும் கண்காட்சியில் பிரபஞ்சம், வாழ்க்கையின் ரிதம், நித்தியம், சிருங்காரம், மோகினி, சக்தி, மகாராணி, ரிதம், பழக்குடியின மணப்பெண், தியானம் என இந்திய தொன்மவியலையும் கருப்பொருளாகக் கொண்டு ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளேன். இத்தகைய ஓவியங்கள் வரைந்ததை எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பணியாகக் கருதுகிறேன்'' என்கிறார் நெகிழ்வுடன் ஓவியக் கலைஞர் அர்ச்சனா குப்தா.
-வே. சுந்தரேஸ்வரன்
படம்: டி. ராமகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.