நகரத்துக்கு வந்த கிராமங்கள்!

சென்னை, அரசு கவின் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் ராஜேந்திரனின் ஓவியங்கள் கே.கே.நகரில் உள்ள "அசலம் ஆர்ட் கேலரி'யில் ""ரூரல் ஃபோக்ஸி'' என்ற தலைப்பில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
நகரத்துக்கு வந்த கிராமங்கள்!
Published on
Updated on
2 min read

சென்னை, அரசு கவின் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் ராஜேந்திரனின் ஓவியங்கள் கே.கே.நகரில் உள்ள "அசலம் ஆர்ட் கேலரி'யில் ""ரூரல் ஃபோக்ஸி'' என்ற தலைப்பில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. அந்த அரங்கத்திற்குள் நுழைந்த உடனேயே ராஜேந்திரனின் ஓவியங்களிலிருந்து கசிந்த கிராமத்து வாசனை நம்மைக் கட்டிப் போட்டுவிட்டது.
 ""நான் வேலூரில் பிறந்தவன். சிறிய வயதில் நான் கண்ட கிராமத்து சூழ்நிலைகள் எனது மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்துள்ளன. அவையே எனது ஓவியங்களின் சாராம்சம். மீன் விற்கும் பெண்மணி ஓவியத்திற்கு நான் கோவாவிற்கு சென்றிருந்தபோது பார்த்த பெண்மணியே இன்ஸ்பிரேஷனாக இருந்தார். என்ன ஒரு விஷயமென்றால், அங்கே மீன்கள் விற்பனை செய்யும் பெண்மணிகள் அப்போதுதான் குளித்துமுடித்து வந்ததுபோல் பளிச்சென்று இருப்பதைக் கண்ட போது அதிசயமாக இருந்தது. அவ்வளவு அழகாக இருந்தார்கள். மீன்தானே விற்பனை செய்கிறோம் என்ற எண்ணம் அவர்களின் தோற்றத்தில் இல்லை. அவர்களில் ஒரு பெண்மணியைத்தான் இந்த ஓவியத்தில் கொண்டு வந்தேன். மேலாடை விலகியிருப்பது கூடத் தெரியாமல் ஆடு மேய்க்கும் ஒரு பெண்மணியின் ஓவியத்தைப் பார்த்திருப்பீர்கள். இந்த 2013ஆம் ஆண்டிலும் தமிழகத்தின் பல பகுதிகளும் பின் தங்கியே உள்ளன. நான் ஒருமுறை நாட்றாம்பள்ளி சென்றிருந்தேன். அங்குள்ள பெண்கள் மேலாடை அணிவதில்லை. புடவையின் முந்தானையையே மேலாடையாகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பெண்மணியும் அவர்களில் ஒருத்திதான். அங்குள்ள ஜவ்வாது மலையில் அவர்கள் வரைந்து வைத்திருந்த ஓவியங்களும் ரசிக்க வைத்தன.
 பறையடிக்கும் ஒருவரையும், அவருக்கு அருகில் கட்டித் தழுவியபடி இருக்கும் ஒரு ஜோடியையும் கொண்ட ஓவியமும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. நான் சிறு வயதிலிருந்தே பறையடிப்பவர்களோடு பழகியிருக்கிறேன். சாவு வீடு மட்டுமல்ல, திருவிழா போன்ற சந்தோஷ நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பறையடிப்பார்கள். பறையடிக்கும் போது, பறையடிக்கும் ஒருவரின் மனதில், அவருடைய மனைவி ஞாபகத்துக்கு வருகிறாள். அதைப் பற்றிய அவருடைய நினைவுகளே இந்த ஓவியம்'' என்கிறார் ராஜேந்திரன்.
 இதுதவிர தாவணி அணிந்துகொண்டு கும்மியடிக்கும் இரண்டு பெண்கள், புடவை அணிந்தபடி கோலாட்டம் ஆடும் இரண்டு பெண்கள் - தற்போது சீரியல் கலாசாரத்தில் மூழ்கி மனச் சிக்கலை ஏற்படுத்திக்கொள்ளும் பெண்களையும், கும்மி - கோலாட்டம் ஆடி உடலையும் மனதையும் தெளிவாக வைத்திருந்த அக்காலப் பெண்களையும் இரண்டு ஓவியங்களும் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்கின்றன. ஆக்ரோஷமாக இரண்டு சேவல்கள் சண்டையிடும் ஓவியம். அவற்றின் இறகுகள் நான்கு புறமும் பறக்கும் விதத்தை வைத்தே அந்த சண்டையின் உக்கிரத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
 தொடர்ந்து நம்மிடம் பேசிய ராஜேந்திரன், ""அக்கரலிக், ஆயில் பெயிண்ட், பர்மணன்ட் மார்க்கர் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி வரையப்பட்டவையே எனது ஓவியங்கள். கடந்த 25 வருடங்களாக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் எனது ஓவியங்கள் அடங்கிய கண்காட்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளில் நடைபெற்ற கண்காட்சிகளிலும் எனது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் உள்ள கேலரிகளிலும் சென்னை மியூஸியத்திலும் எனது ஓவியங்களைப் பார்க்கலாம். நான் சென்னை ஓவியக் கல்லூரியில்தான் படித்தேன். பல முக்கியமான ஓவியப் போட்டிகளிலும் நடுவராகப் பங்கேற்றுள்ளேன். கிராமங்களில் இருந்த அற்புதமான பல விஷயங்கள் அழிந்துவிட்டன. இது வருத்தமளிக்கும் விஷயம். அதன் முக்கியத்துவத்தை, அந்தக் கலாச்சாரத்தை மக்களுக்கு உணர்த்துவதுதான் எனது ஓவியங்களின் குறிக்கோள்'' என்கிறார் சிரித்துக் கொண்டே ராஜேந்திரன்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com