மனிதனின் நணபர்கள்!

நாட்டின் முதலாவதும், முதன்மையானதுமான நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்திற்கு (Nilgiri Biosphere Reserve) தற்போது வயது 25.
மனிதனின் நணபர்கள்!
Updated on
2 min read

நாட்டின் முதலாவதும், முதன்மையானதுமான நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்திற்கு (Nilgiri Biosphere Reserve) தற்போது வயது 25. மனிதனும், பல்வேறு உயிர்களும் இணைந்து வாழும் ஒரே பெரிய நிலப்பரப்பு என்ற அடிப்படையில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 25 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதுதான் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம். இந்தியாவில் தற்போது இவ்வாறு 14 உயிர்ச்சூழல் மண்டலங்கள் உள்ளன. இதில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் வித்தியாசமானது; சிறப்புகள் பல பெற்றது. தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் என 3 மாநில எல்லைப் பகுதிகள் சந்திக்குமிடத்தில் 5,520 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியதாகும். இதில், தமிழகத்தில் அதிக அளவாக 2,538 சதுர கி.மீட்டரும், கர்நாடகத்தில் 1,524 சதுர கி.மீட்டரும், கேரளத்தில் 1,455 சதுர கி.மீட்டரும் உள்ளடங்கியுள்ளன.
இந்தப் பெருமைக்குரிய நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் குறித்து, உதகை அரசுக் கலைக் கல்லூரியில் வனவிலங்குத்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவரும், ஆசிய யானை ஆராய்ச்சியாளருமான டாக்டர் பி.ராமகிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
""இந்தியாவில் அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிய யானைகளும், புலிகளும் அதிக அளவிலான எண்ணிக்கையில் காணப்படுவது இந்த உயிர்ச்சூழல் மண்டலத்தில் மட்டுமே.
இவை நமது நாட்டிலுள்ள மொத்த யானைகள் மற்றும் புலிகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமாகவே உள்ளன. உலகில் ஆசிய யானைகள் வாழும் 13 நாடுகளில் இப்பகுதியில் மட்டும் சுமார் 6 ஆயிரம் யானைகள் இருக்
கின்றன.
இவற்றோடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் சுமார் 332 தாவர வகைகளில், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் மட்டும் 132 வகைகளிலான தாவர வகைகள் உள்ளன.
அதேபோல 100 வகைகளிலான பாலூட்டிகள், 350 வகைகளிலான பறவைகள், 80 வகைகளிலான ஊர்வன, 300 வகைகளிலான வண்ணத்துப் பூச்சிகள், 39 வகையிலான மீன்கள் போன்றவையும் இந்த உயிர்ச்சூழல் மண்டலத்தில் காணப்படுகின்றன.
இவற்றில், குறிப்பாக தமிழகத்தின் விலங்கான நீலகிரி வரையாடு, நீலகிரி மார்ட்டின், கருங்குரங்கு என அழைக்கப்படும் நீலகிரி லங்கூர் போன்றவையும், ஆர்கிட் மற்றும் பால்சம் வகைகளிலான மலர்களும், பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளிட்ட பல்வேறு கழுகு வகைகள், மரகதப்புறா, பீ ஈட்டர்ஸ் போன்றவையும், தூய்மையான நீரில் மட்டுமே வாழக்கூடிய டிரவுட் மீன்களும், பல்வேறு வகைகளிலான தாவரங்களும், மரங்களும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் பெருமைக்குரியவற்றின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவையாகும்.
தமிழகத்தின் தண்ணீர் தேவையைத் தீர்ப்பதிலும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் முக்கியப் பங்காற்றி வருகிறது. காவிரியின் உப நதிகளான பவானி மற்றும் மாயார் ஆறுகளிலிருந்து மட்டும் 50 சதவீதத் தண்ணீர் சமவெளிப் பகுதிகளுக்கு கிடைக்கிறது. இதைத்தவிர கபினி, சாளியார், புன்னம்புழா ஆறுகளுக்கும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலமே முக்கிய நீர் ஆதாரமாகும்''
என்றார்.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்துக்கு இந்த ஆண்டு வெள்ளிவிழா ஆண்டாகும். இதையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் உதகையில் நடத்தப்பட்டது. இதில், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் கடந்த 25 ஆண்டுகள் நிகழ்வுகளுடன் பூஞ்சைக் காளான், பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்கள், பூச்சிகள், மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் ஆகியவற்றுடன் சுற்றுச்சூழல் மாசுபாடு, பேரிடர் மேலாண்மை, பழங்குடியினர் மரபுகள் குறித்து 135 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த ஆய்வுக்கட்டுரைகள் முழுமையாக தொகுக்கப்பட்டு வெளியாகும்போது நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் முக்கியத்துவத்தை அனைவருமே அறிந்து கொள்ள முடியும்.




 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com