சினி மினி

ஹிந்தியில் ரஜினி பாடும் முதல் பாடல் இதுதான். ஏற்கனவே ரஜினி "மன்னன்' படத்தில் "அடிக்குது குளிரு' என்ற பாடல் பாடி இருக்கிறார்.  
சினி மினி

ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் "கோச்சடையான்'. ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கும் இப்படத்தில் தீபிகாபடுகோனே ஹீரோயினாக நடிக்கிறார். சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். "மோஷன் கேப்சர்' என்ற புது வித தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. ரஜினியும் டப்பிங் பேசி முடித்திருக்கிறார். இந்நிலையில் இதன் ஹிந்தி பதிப்பிற்கு ரஜினி முதன் முறையாக சொந்த குரலில் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்பாடலை ரஜினி சமீபத்தில் பாடினார். ஹிந்தியில் ரஜினி பாடும் முதல் பாடல் இதுதான். ஏற்கனவே ரஜினி "மன்னன்' படத்தில் "அடிக்குது குளிரு' என்ற பாடல் பாடி இருக்கிறார்.
 
 "திருவாசகம்' என்ற பெயரில் உருவாகிவந்த படத்துக்கு தற்போது, "ஈர வெயில்' என பெயர் வைத்துள்ளனர். "ஆல்பம்' ஆர்யன் ராஜேஷ், சரண்யா நாக் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.கே.எம். ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டே நைட் பிக்சர்ஸ் சார்பில் உருவாகும் இப்படத்தை, புதுமுகம் ஏ.கே.மைக்கேல் இயக்குகிறார். இயக்குநரிடம் பேசுகையில், ""கதையில் காதல்தான் பிரதானம். சந்தர்ப்ப சூழலால் கைவிடப்படும் ஒரு காதல் எந்த மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பதே கதை'' என்றார்.
 
 சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் ஐந்து பேர் ஓர் அறையில் தங்குகின்றனர். அங்கு அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. மர்மமான முறையில் கொலைகளைச் செய்யும் கொலைகாரன் யார் என்பதே "கண்டனம்' படத்தின் கதை. விஷால் ராம், கார்த்திக் கட்டாக், கமலிஸ்ரீ, ஜிட்டா மரியா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை "சிக்கி முக்கி' படத்தை இயக்கிய சுப்ரமணிய ஜனார்தன் எழுதி இயக்குகிறார். ""திகில் கதை என்பதால் இடைவிடாது ஷூட்டிங் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதுதான் கதைக்கு பலமாகவும் அமைந்தது. இரவு, பகல் இடைவிடாது 25 நாள்களில் ஷூட்டிங் நடந்து முடிந்தது. படம் விரைவில் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர்.
 
 ஆஸ்கர் விருதுகள் பெற்ற பின்னர், தமிழ் சினிமாக்களில் கவனம் செலுத்தாமல் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது "ஐ', "மரியான்', "கோச்சடையான்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கச் சென்றபோது திரைக்கதை அமைப்பு விஷயத்திலும் ஆர்வம் காட்டினார். இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் முறைப்படி திரைக்கதை அமைப்பு பற்றிய படிப்பில் சேர்ந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சொந்தமாகத் திரைக்கதை எழுதத் தொடங்கினார். தற்போது இரண்டு கதைகளை முழுமையாக முடித்து விட்டார். அந்த கதைகளை கேட்ட பிரபல தயாரிப்பாளர் ஒருவரும் அப்படங்களைத் தயாரிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பேச்சுவார்த்தை முழுமையாக முற்று பெறாமல் இருப்பதால் ரஹ்மான் தரப்பிலிருந்து மௌனமே பதிலாக வருகிறது.
 
 ஸ்ரேயா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற "பவித்ரா', தமிழில் "பேரு மட்டும்தான் பவித்ரா' என்ற பெயரில் வெளியாகிறது. பரத் சினி மீடியா தயாரித்துள்ள இப்படத்தில், ஸ்ரேயா, சாய்குமார், நிழல்கள் ரவி, ரோஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எம்.ஸ்ரீலேகா இசையமைப்பில், கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் ஜனார்த்தன மகரிஷி. குடும்ப சூழலால் தவறான பாதையைத் தேடிப் போகும் ஒரு பெண்ணின் அனுபவங்களே இப்படத்தின் கதை. தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களிலேயே நடித்து வரும் ஸ்ரேயா, இப்படத்திலும் சர்ச்சைக்குரிய வேடம் ஏற்றிருக்கிறார். சாதாரண ஓர் இளம் பெண் ஆட்சி அதிகாரம் வரை செல்கிறார். ஒரு கணத்தில் மனம் மாறும் அந்த பெண், போலிச்சாமியார்கள் அரசியல்வாதிகளின் வேஷங்களையும் தேசத்தை விற்கும் அவர்களின் செயலையும் எப்படி எதிர்த்து போராடுகிறாள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com