மனங்குமுறும் "மணிக்கொடி' எழுத்தாளர்

வரிசை வரிசையாய் செல்லும் வாகனங்களால் பரபரப்பாய் இருக்கிறது மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு. அதில் பிரியும் ஒரு தெரு, கான்கிரீட் கட்டடங்களுக்கு
மனங்குமுறும் "மணிக்கொடி' எழுத்தாளர்
Updated on
3 min read

வரிசை வரிசையாய் செல்லும் வாகனங்களால் பரபரப்பாய் இருக்கிறது மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு. அதில் பிரியும் ஒரு தெரு, கான்கிரீட் கட்டடங்களுக்கு மத்தியில் உடைந்துபோன ஓட்டு வீடு. வளர்ந்தவர்களையும் குனிந்து பணிய வைக்கும் நிலைக்கதவு. உள்ளே கிழிசலான துணிகளால் மூடப்பட்ட இரும்பு கட்டில், அதில் பரப்பியிருக்கும் புத்தகங்கள். தரையே தனக்கு வசதி என்பது போல அந்த 75 வயது மனிதர்!
 தொள...தொள வெள்ளைச் சட்டை. கறுப்பாகி அமுக்கிய அழுக்கினூடே வெள்ளை நிறம் மங்கிய வேட்டி. வயோதிகத்தால் மட்டுமல்ல...வறுமையாலும் சுருங்கிய முகம். நோய் பாதிப்பால் செயலிழந்த கால். அதையும் தாண்டி வெளிப்படும் எழுத்தாளன் என்ற கர்வத்தனமான பார்வை.
 தமிழ் இலக்கிய வாசிப்பாளர்களுக்கு எழுத்தாளராகவும், மற்றவர்க்கு தையல்காரராகவும் அடையாளப்படுத்தப்படுகிற ஜீவன். ஆம்...தமிழ் இலக்கிய வரலாற்றில் மணிக்கொடி கால எழுத்தாளர்களில் எஞ்சிய முதிர்ந்த இலையாக இருப்பவர் கர்ணன்.
 மணிக்கொடி தொடங்கி இன்றைய தமிழ் இலக்கியம் வரை மட்டுமல்ல...எழுத்தாளர்களின் போக்குகளை பேசும்போது, ஏக்கம், ஏமாற்றம், சோகம், ஆதங்கம் என எத்தனை..எத்தனை உணர்ச்சிகள்!...அத்தனையும் தமிழ் மீதான பற்றின் ஆதங்கங்களாய்..இதோ நமது கேள்விகளும், அவரின் பதில்களும்...

உங்களைப் பற்றிக் கூறுங்களேன்?
 எனது தந்தை பரஞ்சோதி. தாய் செல்லம்மாள். தந்தை பர்னிச்சர் தொழிலில் பார்ட்னராகி நஷ்டமடைந்து, பின் கடைகளுக்கு கணக்கெழுதி காலந் தள்ளியவர். அவரது 10 பிள்ளைகளில், 5 மகன்கள். நானே மூத்தவன். ஐந்தாம் வகுப்பைத் தாண்டாத நான் கல்கியைப் படித்தே எழுத்தாளனானேன். அனுபவத்தை எழுதி, அங்கீகாரம் பெற்றேன். மனைவி இறப்பு, மகன், மகள் குழந்தைகளுடன் பிரிந்து சென்ற ஏமாற்றம். ஆகவே தனிமையில், வாடகை வீட்டில், அரசு நிதியுதவியோடு..கடைசி மூச்சுவரை எழுத்தும்...நானுமாகவே...இருக்க விரும்புகிறேன்.
 நீங்கள் எழுதிய முதல் கதை எது?
 எனது மாமா முத்துக்கிருஷ்ணன் திருச்சியில் பதிப்பகம் நடத்தினார். கருணாநிதி முதல் பலரது நூல்களை தைரியமாகப் பதிப்பித்தவர். படிக்கும் போதே நாலு பேர் சேர்ந்து நாலணா தேத்தி (ஓர் அணா என்பது 6 பைசாவைக் குறிக்கும்) கல்கியை வாங்கிப் படிப்போம். 1958-இல் "நீறுபூத்த நெருப்பு' எனும் கதையை எழுதி கும்பகோணத்திலிருந்து வெளிவந்த ராமானுஜ அய்யங்காரின் "காவேரி' இதழுக்கு அனுப்பினேன். கதையும் வெளியானது. அதற்கான சன்மானமும் ரூ.15 வந்து சேர்ந்தது. அப்புறமென்ன? எழுத்தே என்றானேன்.
 எழுத்துலக ஜாம்பவான்களின் அறிமுகம் கிடைத்தது குறித்து?
 எனது முதல் சிறுகதை வெளியான "காவேரி' இதழில்தான் நா.பார்த்தசாரதி "மயிலாடும் பாறை' என்ற தொடர் எழுதிவந்தார். சுதந்திரப் போராட்டத் தியாகியான மதுரை சி.சு.செல்லப்பா பென்சனே வேண்டாம் எனக் கூறிவிட்டு, "எழுத்து' எனும் பத்திரிகை நடத்தினார். அதில் நான் எழுதினேன். எனது "கனவுப்பறவை' எனும் சிறுகதைத் தொகுப்புக்கு அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ந.பிச்சமூர்த்தி முன்னுரை எழுதினார். இப்படியே எனக்கு பி.எஸ்.ராமையா, சி.சுப்பிரமணியன், நா.சிதம்பர சுப்பிரமணியன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன், தி.க.சி., பிரபஞ்சன், அப்துல் ரஹ்மான், நா.காமராஜன், காளிமுத்து, மு.மேத்தா என அனைவரும் பழக்கமாயினர். ஏகலைவன் போல நான் குருவாக நினைப்பது புதுமைப்பித்தனைத்தான். அவருக்கே எனது முதல் சிறுகதைத் தொகுப்பையும் காணிக்கையாக்கியுள்ளேன்.
 உங்களது படைப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே?
 அப்படியல்ல. எனது முதல் சிறுகதையைப் படித்துவிட்டு நா.பார்த்தசாரதியே நான் வேலை பார்த்த கடைக்கு வந்து பாராட்டியுள்ளார். நான் எழுதிய "அவர்கள் எங்கே போனார்கள்' என்ற நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது. கடந்த 2005-இல் முதல்வர் ஜெயலலிதா விருதுடன் பரிசையும் அளித்தார். சுதந்திரப் போராட்ட வீரர்கள், குறிப்பாக பகத்சிங் குறித்து அதில் பல அரிய தகவல்களை எழுதியுள்ளேன். இதேபோல, பல அமைப்புகளின் விருதையும் பெற்றுள்ளேன். காலம் மாறிவிட்டது. வாழ்க்கைச் சூழல் மாறிவிட்டது. இதில் நானும் கவனிக்கப்படாமலேயே போய்விட்டேன்.
 நான் எனது அனுபவத்தில் பார்த்த, பழகிய எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களைப் பற்றி எழுதிய நூல்கள் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளன. அது தமிழ் இலக்கிய உலகில் சரியான பதிவாகவும் உள்ளது.
 தற்போதைய இலக்கிய உலகுக்கும், மணிக்கொடிக் காலத்துக்கும் உள்ள வேறுபாடு குறித்து?
 மணிக்கொடிக் கால எழுத்தாளர்கள் தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், தர்மத்தைக் காக்கவும் எழுதினார்கள். அவர்கள் சாதி, மத, பேதம் பார்க்காமல் இளம் எழுத்தாளர்களை ஆதரித்து ஊக்குவித்தனர். ஆனால், இன்று அப்படியல்ல. பணத்துக்காகவே பலரும் எழுதுகிறார்கள். எழுத்தாளர்கள் கூட புதிய எழுத்தாளரை சாதி, மதம் பார்த்தே ஆதரிக்கும் அவல நிலை உள்ளதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆம். தமிழின் பொற்காலம் மணிக்கொடிக் காலம் என்பதே சரியாக இருக்கும்.
 பல விருதுகளைப் பெற்ற நீங்கள் இப்போதும் எழுதி வருகிறீர்கள். வாழ்க்கை எப்படிப் போகிறது?
 எழுத்தாளன் வாழ்க்கை எப்போதும் வறுமையில்தான் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு. ஆரம்பத்தில் எழுதியபோது கிடைத்த வருவாய்கூட தற்போது கிடைப்பதில்லை. பதிப்பகத்தார் ஒரு புத்தகம் வெளியிட்டால் வெறும் ரூபாய் 4 ஆயிரமோ, 5 ஆயிரமோதான் தருகிறார்கள். அதற்கு மேலாக ஒரு பைசா கிடைப்பதில்லை. ஆகவே எழுத்தாளர், பல நூல்கள் எழுதியவர் என்ற பெருமை கிடைக்குமே தவிர, பெரிதாக பணம் கிடைக்கவில்லை.
 அகவை முதிர்ந்த தமிழறிஞர் நிதியுதவியில் வரும் ரூ.2 ஆயிரம் மற்றும் மதுரை விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சங்கர சீத்தாராமன் செய்யும் உதவியால் தற்போதும் பசியின்றி உணவுண்டு அதன் மூலம் எழுதிவருகிறேன்.
 முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் அளித்த வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்குக் கூட மாதந்தோறும் பணம் கட்ட முடியாமல் அவதியுற்று வருகிறேன். ஆமாம். எனது எழுத்துகளே என்னை வாழவைக்கின்றன. எனது தையல் தொழில் குறித்த வரலாற்று நூலை எழுதிடவே ஆசைப்படுகிறேன்.
 கலை இலக்கியப் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் உருவானபோது முக்கிய நபராகத் திகழ்ந்த எழுத்தாளர் கர்ணன் தற்போது தையல் தொழிலிலும் ஈடுபட முடியாத வயோதிகத்தை அடைந்துவிட்டார். அரசு தரும் நிதியுதவி, தொழிலதிபர்கள் உதவியையும் நம்பியுள்ள கர்ணன், "இன்று இவர்கள்' என்ற அரசியல் தலைவர்கள் குறித்த நூலை எழுதி வருகிறார். புதிய புதிய நூல்களை எழுதவே இவர் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் செலவிடுவதாகவும் கூறுகிறார். ஆம்..எழுத்தாற்றலை கொடையாகத் தரும் இந்த நவீன கர்ணனுக்கு சமூகம் அதற்குரிய மரியாதையை பரிசளிக்கவில்லை என்பதே அவரது ஆதங்கம். நியாயம்தானே!
 சந்திப்பு: வ.ஜெயபாண்டி.
 படங்கள்: ப.குமாரபாண்டியன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com