ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...

நவீன மின்னணு ஊடகங்கள், இணையதளங்கள் பல வந்துவிட்ட இக்காலத்திலும் கூட செய்திகளை வானொலியில் கேட்பது என்பதே அலாதி தரும் அனுபவம்.
ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...

நவீன மின்னணு ஊடகங்கள், இணையதளங்கள் பல வந்துவிட்ட இக்காலத்திலும் கூட செய்திகளை வானொலியில் கேட்பது என்பதே அலாதி தரும் அனுபவம். அதிலும், ஆகாசவாணி செய்திகள் என்றால் அதன் உச்சரிப்பு, வார்த்தைப் பிரயோகம் யாவுமே தனித்துவமிக்கவை.
 தில்லியில் 1939-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது அகில இந்திய வானொலி எனும் ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவு. தற்போது பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் பவள விழா தொடக்க நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. வசீகரமான குரலால் நேயர்களைக் கட்டிப் போட்ட பழம்பெரும் செய்தி வாசிப்பாளர்கள் பலரும் அங்கு கூடினர்.
 குறிப்பாக முதுபெரும் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் ஆர்.எஸ். வெங்கட்ராமன், சரோஜ் நாராயணசாமி, ராஜாராம் உள்பட தெலுங்கு, குஜராத்தி, மராத்தி என பல்வேறு பிராந்திய மொழி செய்திவாசிப்பாளர்கள் இவ்விழாவில் கெüரவிக்கப்பட்டனர்.
 தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களாகப் பணியாற்றியபோது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆர்.எஸ். வெங்கட்ராமன், சரோஜ் நாராயணசாமி, காலம்சென்ற எம்.ஆர்.எம். சுந்தரம் குறித்து அவரது மகள் ரமாமணி சுந்தர் ஆகியோர் பகிர்ந்துகொண்டவை:
 ஆர்.எஸ். வெங்கட்ராமன்: எனது சொந்த ஊர் தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம். 1945-ஆம் ஆண்டு, பிப்ரவரி முதல் தேதி தில்லியில், ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் செய்தி வாசிக்கும் பணியைத் தொடங்கினேன். 1947-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்தபோது அதுகுறித்த செய்தியை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 5.30 மணிக்குத் தொடங்கிய செய்திநேரத்தில் நாடு சுதந்திரம் பெற்ற செய்தியை வாசித்தேன். இதற்காக அன்று அதிகாலை 3.30 மணிக்கே அலுவலகம் வந்துவிட்டேன். அந்த நிகழ்வு உணர்வுப்பூர்வமானது.
 ஆகாசவாணியில் இருந்து 1985-ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வுபெற்றேன். அதன்பிறகு 20 ஆண்டுகள் கேஷுவல் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றி 2007-ஆம் ஆண்டில் விடைபெற்றேன். தமிழ்ச் செய்திப் பிரிவின் பொறுப்பாளராக மட்டும் 20 ஆண்டுகள் பணி
 புரிந்துள்ளேன்.
 அப்போதெல்லாம் செய்தியின் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். பிற மொழிப் பெயர்கள் குறித்த உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள பல்வேறு மொழிகளின் செய்திப் பிரிவுகளுக்குச் சென்று அங்குள்ள வாசிப்பாளர்களிடம் உச்சரிப்பைக் கேட்டு வருவோம். உச்சரிப்புப் பிரிவு உண்டு. அங்கு முக்கியமான வார்த்தைகளுக்கு பெயர்கள் மற்ற செய்திப் பிரிவுகளுடன் பரிமாறிக் கொள்ளப்படும். கூடுமான வரை சரியான வார்த்தை உச்சரிப்பு பிரயோகிக்கப்படும். செய்தி வாசிப்பின்போது சார்புத் தன்மையோ, கோபதாபமோ இருத்தல் கூடாது. நான் செய்தி வாசித்தபோது இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தேன்.
 நான் பணியாற்றிய காலத்தில் தலைவர்கள் லால்பகதூர் சாஸ்திரி மரணம், அண்ணாதுரை மரணம் ஆகிய செய்திகளை எழுதித் தந்துள்ளேன். செய்தியை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்ய வேண்டும். அது முக்கியப் பணிகளில் ஒன்று.
 ஆகாசவாணி தமிழ்ச் செய்திப் பிரிவில் முதல்முதலில் நடேச விஸ்வநாதன் பொறுப்பாளராக இருந்தார். அவர்தான் காந்தி மரணம் குறித்த செய்தியை வாசித்தார். அவர்தான் என் குரு. என்னை உருவாக்கியவர். நான் கஜமுகன் என்ற பெயரில் நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளேன்
 சரோஜ் நாராயணசாமி : எங்களது பூர்விகம் தமிழகத்தின் தஞ்சை ஜில்லா. நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். எனது கணவர் நாராயணசாமியைத் திருமணம் செய்த பிறகு, தில்லிக்கு வந்தேன். வானிலை ஆய்வு மையத்தில் கணவர் பணியாற்றினார்.
 நாடாளுமன்றச் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை ஒட்டி இருந்த யூகோ வங்கியில் நான் பணியாற்றினேன். எனக்கு வானொலி செய்தி அறிவிப்புப் பணியில் சேர ஆர்வம் ஏற்பட்டது. முறைப்படி தேர்வெழுதி 1963-இல் பணியில் சேர்ந்தேன். 35 ஆண்டுகள் பணியாற்றினேன். அதன் பிறகு என்டிடிவி நிறுவனத்தில் பணியாற்றினேன்.
 அன்றைய காலத்தில் செய்தி வாசிக்கும்போது எனது குரலைக் கேட்டு பலரும் ஆகாசவாணிக்கு கடிதம் எழுதுவார்கள். குரலின் ஏற்ற இறக்கம், உச்சரிப்புமுறை, எடுத்துச்சொல்லும் விதம் ஆகியவை தனித்துவமாக இருப்பதாக நேயர்கள் கூறுவார்கள்.
 எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த அச்சமயத்தில் தில்லியில் திட்டக் குழு கூட்டத்திற்கு வருவார். அப்போது, கூட்டத்தில் அவரது உரையை அங்குள்ள மற்றவர்கள் அறியும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்குவேன். இதற்காக எம்.ஜி.ஆர். என்னிடம் ""பிரமாதம்'' என்று பாராட்டினார்.
 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டபோது, இரங்கல் செய்தியை தயாரித்து, வாசித்தேன். இது உருக்கமாக இருந்ததாகக் கூறி பலரும் கடிதம் மூலம் தெரிவித்தனர்.
 இந்திரா காந்தி அம்மையார் என முக்கிய வி.ஐ.பி.கள் பலரையும் பேட்டி கண்டு பத்திரிகைகளில் எழுதியுள்ளேன். 2009-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஆகாசவாணி வானொலியில் செய்தியில் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
 பவள விழாவில் பங்கேற்க வந்த என்னை நண்பகல் நேர செய்தி வாசிக்குமாறு வானொலி நிலையத்தினர் கேட்டுக் கொண்டனர். பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் செய்தி வாசித்தேன். இச்செய்தியைக் கேட்ட தமிழ் நேயர்கள் பலர் அடுத்த சில நிமிடங்களிலேயே நீங்கள் மீண்டும் வானொலிப் பணியில் சேர்ந்துவிட்டீர்களா என்று தொலைபேசி வழியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் ஆர்வத்துடன் வினவினர். 79 வயதாகிவிட்டபோதிலும் எனது குரலுக்குக் கிடைத்த வெகுமதியாக இதைக் கருதுகிறேன்.
 எம்.ஆர்.எம். சுந்தரம் குறித்து அவரது மகள் ரமாமணி சுந்தரின் நினைவலைகள்:
 இரண்டாவது உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம் அது. தில்லியில் ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவு தொடங்கப்பட்டது. இப்பணிக்காக திருச்சி வானொலியில் பணிபுரிந்த எனது தந்தை எம்.ஆர்.எம். சுந்தரம் தில்லிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
 சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ச் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். 1957-இல் பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக லண்டனுக்குச் சென்று இரண்டரை ஆண்டு காலம் அங்கு பணி புரிந்தார். அதன் பிறகு, மீண்டும் தில்லி அகில இந்திய வானொலிக்கு திரும்பி பணியைத் தொடர்ந்தார். 1971-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற அவர், "சுந்தா' என்ற புனைப்பெயரில் தமிழ் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.
 தில்லியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றிய காலத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்த பெருமை அவருக்கு உண்டு. ஆரம்ப காலத்தில் அவருடன் பணிபுரிந்தவர்களில் முக்கியமான நபர்களில் ஒருவர் நடேச விஸ்வநாதன் என்ற எம்.என்.விஸ்வநாதன். இவர், தீரர் சத்தியமூர்த்தியின் மருமகன். வானொலிச் செய்தியில் அக்காலக்கட்டத்தில் வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அச்சூழலில் வடமொழிச் சொற்களுக்குப் பதிலாக தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தந்தார். உதாரணமாக அஸ்திவாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு மாற்றாக அடிக்கல் நாட்டுதல் என்ற சொல் அவர் உருவாக்கியதுதான்.
 } வே. சுந்தரேஸ்வரன்
 படங்கள் -டி. ராமகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com