சுண்டக்காபாறை சுற்றுலாத் தலமாகுமா? குடவாயில் பாலசுப்ரமணியன்

சுண்டக்காபாறை சுற்றுலாத் தலமாகுமா? குடவாயில் பாலசுப்ரமணியன்

கரூர் மாவட்டம், குளித்தலை- மணப்பாறை நெடுவழியில் குளித்தலையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் ஐயர்மலை என அழைக்கப்பெறும் திருவாட்போக்கி மலை உள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை- மணப்பாறை நெடுவழியில் குளித்தலையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் ஐயர்மலை என அழைக்கப்பெறும் திருவாட்போக்கி மலை உள்ளது. இம்மலை இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை என்றும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியிலுள்ள திருவாட்போக்கி மகாதேவர் திருக்கோயில் ஈசனை திருநாவுக்கரசர் ஒரு தேவாரப் பதிகம் பாடிப் போற்றியுள்ளார். மலைக்கோயில் மட்டுமின்றி அழகிய கற்றளி ஒன்றும் உள்ளது. அதனை ""சிவபுரீஸ்வரர் திருக்கோயில்'' என்று தற்காலத்தில் அழைப்பர். அங்குள்ள சோழர் கல்வெட்டுக்கள் அக்கோயிலினை திருவாலீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில் என்றே கூறுகின்றன.
 காலையில் கடம்பந்துறை எனப்பெறும் குளித்தலை (குளிர்த்தண்டலை) கடம்பர் கோயிலிலும், நண்பகல் மாணிக்கமாலை இரத்தினகிரீசர் கோயிலிலும், மாலை திருஈங்கோய் மலைக் கோயிலிலும் வழிபாடு செய்வதை சைவர்கள் புனிதமாகப் போற்றுவர். திருவாட்போக்கி ஈசனாரைத் தரிசிக்க மாணிக்கமலை மீது 1140 படிகளை ஏறிக் கடந்து செல்ல வேண்டும். சோழப் பேரரசர்கள் காலந்தொட்டு நண்பகலில் காவிரிப் பேராற்று நீரால் அபிஷேகம் காண்பவர் முடித்தழும்பராகிய மாணிக்க ஈசர்.
 இராசராசசோழன் காலத்தில் திருவாட்போக்கி மலை திகழும் அத்திருவூர் சிவபாத சேகரபுரம் என அழைக்கப்பெற்றது என்பதை அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. குறுநங்கை நாடு என்றும் குருநாகன் நாடு என்றும் சோழராட்சியில் அழைக்கப்பெற்ற கேரளாந்தக வளநாட்டு நாட்டுப் பகுதியில் சிவபாதசேகரபுரம் இருந்தது. இவ்வூரின் பெயர் காலப்போக்கில் சிவாயம் என மருவிவிட்டது. திருவாட்போக்கி மலையும் ஐயர் மலை என்ற பெயராலேயே நிலைத்துவிட்டது.
 ஐயர் மலைக்கு வடமேற்காக ஒரு கி.மீ. தொலைவில் "சுண்டக்காபாறை' என்றும் குண்டாங்கல் என்றும் மக்கள் வழக்கில் குறிப்பிடப்பெறும் முட்டை வடிவப் பாறை ஒன்று ஒரு சிறு குன்றின் முகட்டின் மீது அமைந்துள்ளது. ஏறத்தாழ 30 அடி உயரமுடைய அவ்வுருண்டை வடிவக்கல்லின் ஒரு சிறிய பகுதி மட்டுமே தாங்கு பாறையின் மேல் அழுந்தி நிற்கும் காட்சி நம்மை அதிசயிக்க வைக்கும். சுண்டக்காபாறையின் கிழக்கு முகத்தின் பக்கவாட்டில் ஒரு நீள சதுர பகுதி வெட்டுவிக்கப்பெற்று அதில் உன்னத சிற்பக்காட்சி ஒன்றினைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இச்சிற்பப் படைப்பு கி.பி. 4ஆம் நூற்றாண்டிலோ அல்லது அதற்கு முன்போ படைக்கப்பெற்றிருக்க வேண்டும்.
 முக்குடைகளுக்குக் கீழாக, தலைக்குப் பின் திகழும் ஒளிவட்டத்துடன், சிம்ம ஆசனத்தின்மேல் பத்மாசனத் தியான கோலத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். கையில் மலரேந்திய வண்ணம் தேவிமார் உடன் நிற்க, இருவர் இருபுறமும் மகாவீரரைப் போற்றி நிற்கின்றனர். மேலே யக்ஷர் இருவர் சாமரம் வீச இருவர் விண்ணில் மிதந்தவாறு மலர்தூவி வழிபாடு செய்கின்றனர். இச்சிற்பங்களின் உருவ அமைதியும், மகாவீரர் அமர்ந்துள்ள ஆசன அமைப்பும் அமராவதி கோலி ஆகிய இடங்களில் கிடைத்த பௌத்த, சிற்பங்களின் கலையமைதியை ஒத்தே திகழ்கின்றன. எப்படி நோக்கினும் தமிழகத்தில் கிடைத்துள்ள சமண சிற்பப் படைப்புகள் வரிசையில் மிகப் பழைமையானது இது என்பதில் ஐயமில்லை.
 எழிலார்ந்த இந்தச் சிற்பத்தைத் தாங்கி நிற்கும் சுண்டக்கா பாறையின் கீழ் சமண முனிவர்கள் படுப்பதற்காக செய்யப்பெற்ற ஐந்து கல் படுக்கைகள் உள்ளன. அந்தப் படுக்கைகளுக்கு அருகே தொல் பழங்கால எழுத்துக்களில் ""சீய மித்திரன்'', ""வீரமல்லன்'' என்ற இருவர் பெயர் பொறிப்புகள் காணப்பெறுகின்றன. இவை கி.பி. 2-3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பொறிப்புகளாக இருத்தல் கூடும். இந்தக் கல்வெட்டுப் பொறிப்புகளுக்கு அருகே அதே காலத்தைச் சார்ந்த""யாகரடு'' என்ற கல்வெட்டுப் பொறிப்பும் அருகே சில கற்படுக்கைகளும் காணப்பெறுகின்றன. இப்பொறிப்பால் சுண்டக்கா பாறை என்றும் குண்டாங்கல் என்றும் அழைக்கப்பெறும் அந்த உருண்டைப் பாறை இருக்கும் இடத்தின் பழம்பெயர் ""யாகரடு'' என்பதறிகிறோம். யாகரட்டில் இருந்து தென்கிழக்கே பார்த்தால், மாணிக்கமலையின் பேரெழிலைக் கண்டு மகிழலாம். இங்கு வட்ட கிணறு போன்ற இயற்கை மழைநீர் சேமிப்பு சுனை ஒன்றும் உள்ளது. அக்காலத்தில் இதனைச் சமணத் துறவிகள்
 குடிநீருக்காகப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் தலைசிறந்த சிற்பப் படைப்புகளுள் ஒன்றாகத் திகழும் ஐயர்மலை சுண்டக்கா பாறைச் சிற்பம் சுற்றுலா விரும்புவோர், கலை ரசிகர்கள் மற்றும் தல யாத்ரீகர்கள் பார்வையில் படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஓர் ஆண்டுக்குப் பத்து பேராவது இங்கு வருகை புரிந்து இக்கலைப் பேழையைக் கண்டு மகிழ்கிறார்களா என்பது கேள்விக்குறியே.
 திருச்சிராப்பள்ளி - கரூர் சாலையிலும், திருச்சிராப்பள்ளி - நாமக்கல் சாலையிலும் பயணம் செய்வோர் முறையே குளித்தலை, முசிரியிலிருந்து ஐயர் மலையை அடையலாம். திண்டுக்கல் - திருச்சி சாலையில் செல்வோர் மணப்பாறையிலிருந்து தோகைமலை வழியே ஐயர் மலைக்குச் செல்லலாம். தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையினர் தங்கள் சுற்றுலாக்களில் சுண்டக்கா பாறையையும் இணைத்தால் பயணிகள் பயன்பெறுவர். இந்தச் சின்னம் முறையாகப் பாதுகாக்கப் பெறாவிட்டாலும் இங்கு நடுவண் அரசின் தொல்லியல் பாதுகாப்புத் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னம் என்ற அறிவிப்புப் பலகை நின்று கொண்டிருப்பது ஆறுதலான செய்தியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com