
இன்றைய நவீன காலத்திற்கேற்றவாறு குழந்தை
களின் அறிவு வளர்ச்சியைக் கூட்டவும், அவர்களது கல்வி கற்கும் முறையை எளிதாக்கவும், டிஜிட்டல் வடிவத்தில் கல்வி பயிற்சியை மாற்றியிருக்கிறார் இண்டியன்
அபாகஸ் (Indian Abacus) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பஷீர் அகமது. அதுமட்டுமின்றி முதன் முறையாக உலக அளவில் ஆன்லைன் மூலம் அபாகஸ் கல்வி பயிற்சி பெறும் முறையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இவரை
சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது தலைமை அலுவலகத்தில் சந்தித்தோம்:
அபாகஸ் என்றால் என்ன?
அபாகஸ் என்பது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கணித முறை. இதன் மூலம் கடினமான கணக்குகளுக்கும் எளிதாக விடை காண முடியும். இதில் மணிச்சட்டத்தில் பதின்மூன்று வரிசையில் வரிசைக்கு பத்து மணிகள் வீதமாக பார்ப்பதற்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள் போலவே காட்சி
தரும். அபாகûஸ சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எண்ணை காட்சி வழியாக பார்ப்பது, காட்சியை எண்ணாக மாற்றுவது. இது பாரம்பரிய முறை. இளம் சிறார்களின் அறிவு வளர்ச்சியை அதிகமாகத் தூண்டிவிடும் அதாவது முழு மூளை வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு புரோகிராம். 1999 இல் இந்தியாவில் நாங்கள் அபாகஸ் முறையை அறிமுகப்படுத்தினோம். 5வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த அபாகஸ் கல்விமுறையைக் கற்றுக்கொண்டால் அவர்களது கவனித்தல், கேட்டல், உணர்தல், ஞாபகசக்தி, ஒருமுகப்படுத்தல், வேகப்படுத்தல் (ஸ்பீட் அண்ட் அக்யூரசி) போன்ற திறன்கள் தற்போது இருப்பதை விட இரு மடங்கு அதிகரிக்கும்.
5வயது முதல் 13 வயதுவரை உள்ள சிறார்களை மட்டும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
குழந்தைகளின் மூளை வளர்ச்சி 5 வயது முதல் 13 வயது வரை அபரிதமாக இருக்கும். 80 சதவீத மூளை வளர்ச்சி இந்த பருவத்திலேயே நடக்கிறது. அதனால்தான் அபாகஸ் கற்பதற்கு சரியான வயதாக இதைத் தேர்ந்தெடுத்தோம். இந்த வயதில் அபாகஸ் கற்பதினால் குழந்தைகளின் கணிதத் திறமை வளர்வதோடு மனதை ஒருமுகப்படுத்தும் திறனும், மூளையின் செயல் திறனும் அதிகரிக்கும்.
பழைய முறைக்கும் தற்போது உருவாக்கியுள்ள புதிய முறைக்கும் என்ன வித்தியாசம்?
பழைய முறையில் மணிகள் அனைத்தும் ஒரே வண்ணத்திலிருக்கும். அதனால் சிறிய எண்களை வேகமாக கூட்டவும்,கழிக்கவும் முடிந்த குழந்தைகளுக்கு பெரிய எண்களை முயலும்போது கடினமாக இருக்கும். அதுவுமில்லாமல் குறிப்பிட்ட சட்டத்தை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருக்கும்போது அதன் அருகிலுள்ள மற்ற மணிகள் கவனத்தை சிதறடிக்கக் கூடியதாக இருக்கும். அதுவுமில்லாமல் சட்டத்தில் மணிகள் சில சமயம் தவறுதலாக கீழிறங்கும் வாய்ப்புமுள்ளது. சிறிது காலம் செல்ல செல்லதான் பழைய முறையில் உள்ள குறைபாடுகள் தெளிவாகத் தொடங்கியது. அதை எப்படி சரிசெய்வது என்று கடந்த ஏழு ஆண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கியதுதான் இந்த புதிய அபாகஸ் கருவிகள்.
இதில் எண்கள் அனைத்தும் மறைந்திருக்கும். சட்டத்திலுள்ள நகரும் பட்டை(Slider) யை நகர்த்தும் போது தேவையான வரிசையை மட்டுமே பார்க்கலாம். மேற்புறமுள்ள வரிசையும் கீழ் புறமுள்ள வரிசையும் வண்ணங்களில் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கும். இதனால் தேவையான வரிசையை மட்டுமே கவனிக்கலாம். நகரும் பட்டை தவறுதலாக நகரும் வாய்ப்பும் இல்லை. இதில் மற்றொரு சாதகமான அம்சம்,பாரம்பரிய முறையில் எண் அட்டைகள்(Flash Cards) மணிச்சட்டத்துடன் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும். ஆனால் நம்முடைய நவீன முறையில் அதற்கான தேவையே இல்லை. அதனையும் உள்ளடக்கியதே புதிய கருவி. அதாவது இதனை புரியவைக்க வேண்டும் என்றால் பழைய செல்போனுக்கும் தற்போது அறிமுகமாகியிருக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தயாசம் தான். இந்தப் புதிய முறையினால் காணும் காட்சியானது குழந்தைகளின் மனதில் மிக அழுத்தமாகப் பதியும்.
அபாகஸ் பயிற்சி எடுத்துக் கொண்ட குழந்தைக்கும் எடுத்துக் கொள்ளாத குழந்தைக்கும் என்ன மாதிரியான வித்தியாசம் இருக்கும்?
அபாகஸ் பயிற்சி எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கும் எடுத்துக்கொள்ளாத குழந்தைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். 4+ 3 எவ்வளவு என்று கேட்டால் குழந்தைகள் ஏழு என்று சொல்வதற்கு விரல்விட்டு எண்ணிப் பார்த்து விடை சொல்ல முயற்சி செய்யும்.
பயிற்சி பெற்ற குழந்தைகளின் மூளை அபாரமாக வேலை செய்யும். ஸ்கில் டெவலப் அதிகம் இருக்கும். ஞாபகத்திறனும் எளிதில் நினைத்துப் பார்க்கக்கூடிய திறனும் இருக்கும். மேலும் துல்லியமாக ஒரு விஷயத்தை சிந்திக்கும், உள்வாங்கும் திறனும் அதிகம் இருக்கும். ஞாபகசக்தியில் உள்ளதைத் தட்டி கிட்டதட்ட மிகச்சரியான பதிலை சொல்லிவிடும். குழந்தையின் மூளையில் இது ஏற்கெனவே படங்களாகப் பதிந்திருக்கும். இதற்கு காரணம் அபாகஸ் பயிற்சியின் போது அதில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த வண்ண மணிகளை குழந்தைகள் விரல்களால் சுண்டிவிடுவதால் அவர்களின் மூளையில் உள்ள நரம்புகள் எல்லாம் நன்கு வேலை செய்கிறது. அதாவது நமது விரல்களின் நுனியில் உள்ள நரம்புகள் அனைத்தும் நேரடியாக மூளைக்கு செல்வதால் அதை தூண்டிவிடும்போது மூளை நன்கு வேலை செய்கிறது.
இந்தப் பயிற்சிக்கு தற்போது வரவேற்பு எப்படி இருக்கிறது?
ஆரம்பத்தில் மக்களுக்கு அபாகஸ் என்றால் என்னவென்றே தெரியவில்லை. நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கான நோய் தீர்க்கும் மருத்துவ பயிற்சிமுறை என்று நினைத்தார்கள். அதனால் குறைந்த அளவிலேயே இதைக் கற்றுக்கொள்ள குழந்தைகள் முன்வந்தார்கள். இப்பொழுதும் கூட சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். பிறகு கல்வி நிலையங்கள் இதன் பயன்பாட்டை புரிந்துகொண்டு அபாகஸ் கற்பதை ஊக்கப்படுத்துவதனால் தற்போது பிரபலமாகத் தொடங்கியுள்ளது.
அபாகஸ் கற்றுக் கொள்ள எவ்வளவு செலவாகும்?
அபாகஸ் கற்றலில் 8 படிகள் உள்ளன. மூன்று மாதத்திற்கு ஒரு லெவல் என்ற முறையில் 24 மாதங்களில் முழுமையாகப் பயிற்சி பெறலாம். கட்டணம் மாதத்திற்கு 600, 450, 300 ரூபாய் வீதம் ஆகும்.
ஆன்-லைன் அபாகஸ் என்பது எந்த அளவிற்குச் சாத்தியப்படும்?
கற்றலை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த ஆன்- லைன் பயிற்சி. இது பயிற்சியின் தரத்தை உயர்த்துகிறது, இதனால் சிலைடர்களை நகர்த்தும் போது, மதிப்பீடு எண்களைத் திரையில் காணும் வசதி என்பது வியக்கத்தக்கது. இதை டிஜிட்டல் வடிவத்திலும் செய்திருக்கிறோம். ரிமோட் மூலமாகவும் இயக்கலாம்.
இதனை உலகம் முழுவதிலும் உள்ளவர்களும் படித்து பயன்பெறுவதற்காக அரசிடம் முறையான அனுமதிபெற்று முதன்முறையாக ஆன்லைன் மூலம் அபாகஸ் கல்விமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இதனால் அவரவர் வீட்டில் இருந்தபடியே அபாகஸ் கற்றுக்கொள்ளலாம். மேலும் கல்வி நிலையங்களுக்கும் இந்த புதிய அபாகஸ் முறையைப் பற்றியும் இதிலுள்ள சிறப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். அவர்களும் பெரும் வரவேற்பைக் கொடுக்கிறார்கள். நிச்சயமாக பெரிய மாற்றம் ஒன்றை கொண்டு வரும்.
}ஸ்ரீதேவி குமரேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.