அதிக மழை பெய்தால் எச்சரிக்கும் கருவி!

இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதோடு, அவற்றை எதிர்கொள்வதும்  சவாலானது.
அதிக மழை பெய்தால் எச்சரிக்கும் கருவி!
Updated on
2 min read

இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதோடு, அவற்றை எதிர்கொள்வதும்
 சவாலானது.
 அமெரிக்காவில் அவ்வப்போது ஏற்படும் சூறாவளி, வெள்ளம் போன்றவற்றைக் கண்காணித்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக அண்மையில் புதிதாக ஒரு விமானமே உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பேரிடர் ஏற்படக்கூடிய இடங்கள் மற்றும் பாதிப்பின் தன்மை குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமென அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு முன்பாகவே இது நீலகிரி மாவட்டத்தில் நிரூபிக்கப்
 பட்டுள்ளது.
 மலை மாவட்டமான நீலகிரியில் பருவமழைக் காலங்களில் நிலச்சரிவு என்பது தவிர்க்க முடியாததாகும். ஆனால், இத்தகைய நேரங்களில் பேரிடர் இன்னல்கள் ஏற்படக்கூடிய இடங்களை முன்கூட்டியே அறிந்து அப்பகுதி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முடியுமென்பது சாத்தியமானதே எனக்கூறுகிறார், பேரிடர் மேலாண்மை ஆலோசனை மற்றும் ஆய்வு மைய செயல் இயக்குநரும், நீலகிரி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆலோசகருமான எம்.பிராங்க்ளின்.
 நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இவரது கண்டுபிடிப்பு குறித்து அறிந்த உத்தரகாண்ட் மாநில அதிகாரிகளும், உதகைக்கு வந்து இத்தகைய முறையை அங்கும் செயல்படுத்த முடியுமா என்பது குறித்து விவாதித்து சென்றுள்ளனர். உஹழ்ப்ஹ் ரஹழ்ய்ண்ய்ஞ் நஹ்ள்ற்ங்ம் என்ற இவரது அந்த புதிய கண்டுபிடிப்புக் கருவி இன்று நாடு முழுதும் விவாதிக்கப்படும் பொருளாகிவிட்டது. இதுகுறித்து பிராங்க்ளின் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
 ""வானிலை ஆய்வு மையங்களால் அடுத்த 24 மணி நேரத்தில் இன்ன இடங்களில் கன மழை பெய்யும் எனவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் மட்டும் கூற முடியும். ஆனால், எங்கு, எப்போது மழை வரும், அவர்கள் எப்பகுதிக்கு இடம் பெயர வேண்டுமென்பதை அவர்களால் கூற முடியாது. ஆனால் இக்கருவியைக்கொண்டு நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியை முன்கூட்டியே கணிக்க முடியும்.
 அதாவது குறிப்பிட்ட ஆபத்தான இடங்களில் மழை மானிகள் பொருத்தப்படும். அங்கு அதிக அளவில் பதிவாகும் மழை விவரம் கம்ப்யூட்டர் கிராப்பில் பதிவாகும். அபாய அளவுக்கும் மேலாக மழை பெய்வது தெரிந்தவுடன் உடனடியாக அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலுள்ள கையடக்க கருவிக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும். இக்கருவி சம்பந்தப்பட்டவரின் குரலை உறுதி செய்து கொண்டு தானாகவே அங்குள்ள ஆம்பிளிபயரை ஆன் செய்து விடும். அதையடுத்து அப்பகுதியின் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் மழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு கேட்கும். இதனால், பாதிப்பு ஏற்படுமெனக் கருதப்படும் இடத்திலுள்ள மக்களை உடனடியாகப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த முடியும்.
 இத்தகைய சேவையை 24 மணி நேரமும் அனுப்பலாம். மின்சாரம் இல்லாத நேரத்திலும் பேட்டரியைக் கொண்டு இயங்கும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 இதில் முக்கியமான தகவல்களைத் தெரிவிக்கும் நபர்களின் குரல்கள் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுவிடும். அவர்கள் மட்டுமே இத்தகவல்களை அனுப்ப முடியும். அறிவிப்பின் நம்பக்கத்தன்மைக்காக இந்த முறை கையாளப்பட்டுள்ளது. உதாரணமாக, நீலகிரியில் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மை ஆலோசகர் போன்றோரது குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை ஆட்சியர் உள்ளூரில் இல்லாமல் உலகின் வேறு பகுதியிலிருந்தாலும் செல்போன் மூலம் அவர் அனுப்பும் தகவல்கள் உடனடியாக ஒலிபரப்பாகும்.
 நீலகிரியில் பயன்படுத்தப்பட்ட இக்கருவியை உருவாக்க ஓராண்டு உழைப்பும், ரூ.1 லட்சமும் செலவானது. எதிர்காலத்தில் இந்தத் தொகை குறையலாம். ஒருமுறை மட்டும் செலவிடப்படும் இத்தொகை வாழ்நாள் முழுக்க சம்பந்தப்பட்ட பகுதி மக்களை பாதுகாக்கும் அம்சமாகும்'' என்றார் பிராங்க்ளின்.
 இக்கருவியைக்கொண்டு பேரிடர் காலங்களில் மட்டுமல்லாமல், அரசின் முக்கிய அறிவிப்புகள், குறைதீர்க்கும் முகாம்கள், மருத்துவ முகாம்கள், போலியோ சொட்டு மருந்து போன்ற தகவல்களைக்கூட கிராம மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
 அதனால்தான் அண்மையில் உதகையின் வனப்பகுதிகளில் ஆள்கொல்லி புலி சுற்றித் திரிந்தபோது அதன் நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காக தானியங்கி கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தன. அந்த கேமராக்களுடன் இந்தக் கருவியும் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த கேமராவில் பதிவான விவரங்கள் உடனடியாகச் சம்பந்தப்பட்ட செல்போன் எண்களுக்கு "ஆப்ஜெக்ட் கிராஸ்டு அலெர்ட்', என்ற வாசகமாக குறுஞ்செய்தியாக வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த புலியின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ள இதுவும் துணையாக
 இருந்தது.
 இக்கருவியைக் குறித்து கேட்டறிந்த இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம், தேசிய பேரிடர் மேலாண்மை மையம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இதன் செயல்பாட்டை நேரில் அறிந்துகொண்ட பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்திலும் இத்தகைய கருவியை அமைப்பதைக் குறித்து பரிந்துரைத்துள்ளனர். இதன்மூலம் பேரிடர் மேலாண்மையில் நாட்டிற்கே நீலகிரி மாவட்டம் வழிகாட்டியுள்ளது எனலாம்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com