

நாளுக்கு நாள் மாறிவரும் பெட்ரோல் விலை, சுற்றுச்சூழல் பாதிப்பு, இயந்திரமயமான வாழ்க்கையில் நடக்கக்கூட நேரமில்லாமல் பறக்கும் மக்கள்,
இவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள வலியுறுத்தி ஆண்டுதோறும் மலை மாவட்டமான
நீலகிரியில் சைக்கிள் விழிப்புணர்வுப் பயணம் நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் "டூர் டி பிரான்ஸ்' என்பது மிகப் பிரபலமான சைக்கிள் பயணமாகும். அதற்கடுத்தாற்போல மட்டுமின்றி, அதற்கிணையாகவும்
இந்தியாவில் "ரைட் எ சைக்கிள் பவுண்டேஷன்' அமைப்பின் சார்பில், "மாண்ட்ரா டூர் ஆஃப் நீல்கிரிஸ்' என்ற பெயரில் கடந்த 6 ஆண்டுகளாக இத்தகைய
சைக்கிள் பயணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சைக்கிள் பயணங்களின் தாய் எனவும் இப்பயணம் அழைக்கப்படுகிறது.
நடப்பாண்டில் நடத்தப்பட்ட சைக்கிள் சுற்றுலாப் பயணம் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தொடங்கி மைசூர், தமிழகத்தில் உதகைக்கு வந்து
இங்கிருந்து கேரள மாநிலத்தின் சுல்தான்பத்தேரிக்குச் சென்று அங்கிருந்து மீண்டும் கர்நாடக மாநிலத்திற்குள் மடிக்கேரியில் நுழைந்து மைசூரிலேயே
நிறைவு பெற்றது. கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை உள்ளடக்கிய இந்தப் பயணத்தில் மொத்தம் 890 கி.மீ. தூரத்திற்கான இந்தப்
பயணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 103 சைக்கிள் வீரர்கள் பங்கேற்றனர். நாட்டின் முன்னணி வீரர்கள் பலரும் இதில் பங்கேற்று வருவதால்
சர்வதேச அளவிலும் இந்தப் பயணம் பிரபலமடைந்து வருகிறது.
மைசூரிலிருந்து உதகைக்கு தொடங்கும் இப்பயணத்திற்கு "த வால் கிளிப்' என்ற பெயரில் 136 கி.மீ. தூரத்திற்கு நடத்தப்படும் இப்பயணத்தில் 30 கி.மீ.
தூரப் போட்டிப் பிரிவாகும். அதற்கடுத்து "கிங் ஆஃப் மவுண்டன்ஸ் கிளைம்ப்' என்ற போட்டியும் நடத்தப்படுகிறது. அதாவது சமவெளிப் பகுதியான
மசினகுடியிலிருந்து 36 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப் பகுதியான கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு சைக்கிளிலேயே
வருவதாகும். கல்லட்டி மலைப்பாதையில் இயந்திர வாகனங்களே ஏறுவதற்குச் சிரமப்படும் சூழலில் 12 கி.மீ. தூரத்திற்கு சரிவான சாலையில் சைக்கிள்
ஓட்டி வருவது சவாலானதாகும்.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நீல்ஸ் பிராட்பெர்க்கும், பெண்கள் பிரிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
நிக்கோல்சனும் சாம்பியன் பட்டம் பெற்றனர். 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் கிறிஸ்டோபர் ஹே, கிங் ஆஃப் கல்லட்டி பிரிவில் ஹேரி
வில்ட்யூ, குயின் ஆஃப் கல்லட்டி பிரிவில் லிண்ட இவான் ஆகியோர் சாம்பியன் பட்டங்களைப் பெற்றனர். இவர்கள் மூவருமே இங்கிலாந்து நாட்டைச்
சேர்ந்தவர்களாவர்.
நாட்டிலேயே முன்னோடியும், முதன்மையானதுமான இந்த சைக்கிள் பயணத்தைக் குறித்து ரைட் எ சைக்கிள் பவுண்டேஷன் அமைப்பின் இணை
நிறுவனர் ஸ்ரீதர் பாபி ஷெட்டி நம்மிடம் தெரிவித்
ததாவது:
""சைக்கிள் கலாசாரத்தைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் இத்தகைய சைக்கிள் டூர் எனப்படும் பயணம் சாகச விளையாட்டாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
சைக்கிள் ஓட்டுவதிலுள்ள நன்மைகளையும், சமூக, சுகாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலா மேம்பாடு, போக்குவரத்து நெரிசல், நகர்ப்புறப்
போக்குவரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இப்பயணம் நடத்தப்பட்டு வருகிறது. இதை இளைஞர்களின் ஒரு சமூக சேவையாகவும்
எடுத்துக் கொள்ளலாம்.
சர்வதேச அளவிலான சைக்கிள் வீரர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனாலேயே ஆண்டுதோறும்
இந்நிகழ்வுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. பாரத ஸ்டேட் வங்கி, வோல்க்ஸ்வேகன், மோட்டார் ஸ்போர்ட், சைக்கிள் பிரிசிசன், ஹிமாலயா
போன்ற பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பைத் தருவதால் டூர் டி பிரான்ஸ் போட்டிக்கும் இணையான நிகழ்வாகவே
இது வலம் வருகிறது'' என பெருமையுடன் குறிப்பிட்டார்.
ரைட் எ சைக்கிள் பவுண்டேசன் அமைப்பு லாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும். சைக்கிள் பயணத்தை சமூகத்தில் மீண்டும் பிரபலமாக்குதல்,
சுற்றுச்சூழல், பொதுப் போக்குவரத்தில் சிரமங்களைத் தவிர்த்தல், சமூக நலம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி
வரும் அமைப்பாகும். இதன் காரணமாகவே ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக சைக்கிள்களையும் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் டூர் ஆஃப்
நீல்கிரிஸ் நிகழ்வுடன் "நம்ம சைக்கிள் ரீ சைக்கிள்' என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி அலுவலகத்திற்கு காரில் செல்லாமல் பொதுப் போக்குவரத்தில் செல்லும் அமைச்சர்களும், தனியாகச்
செல்லாமல் ஒரே வாகனத்தில் குழுவாகச் செல்வதாகக் கூறும் அதிகாரிகளும் உள்ள சூழலில், எரிபொருள் சேமிப்பு மட்டுமின்றி, உடல் நலத்திற்கு
ஆதரவாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் நீலகிரி மலையில் நடத்தப்பட்டு வரும் டூர் ஆஃப் நீல்கிரிஸ் நிகழ்ச்சி
இயற்கை ஆர்வலர்களிடத்தில் மட்டுமின்றி பொதுமக்களிடத்திலும் வரவேற்பை பெற்று வருகிறது என்றால் மிகையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.