

ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் தனியொரு மனிதனுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கி விட்டன. வசதி வாய்ப்புகள், அநீதிகளும் பெருகி வரும் சூழலில் எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது? எவர் பின்னே செல்வது? என்ன செய்வது என்ற குழப்பமும் இந்த தலைமுறைக்கு சாபம் போல் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இது நேர்மையான குற்ற உணர்ச்சி என்று இப்போது யாரிடமும் சொல்வதற்கு இல்லை. நீ மட்டும் ஒழுங்கா? என விரல் நீட்டும் மனிதர் நம் பக்கத்திலேயேதான் இருக்கிறார். தனி மனித ஒழுக்கம்தான் இப்போதைய அத்தியாவசிய தேவை. அதை கடந்து போகிற ஒரு மனிதனுக்கு நேர்ந்தது என்ன? இதுதான் இந்தப் படம். பக்குவமாக கதை சொல்லத் தொடங்குகிறார் இயக்குநர் சோழ தேவன். இயக்குநர்கள் ரமணா, விஜியின் உதவியாளர். இப்போது "சண்டியர்' படத்தின் இயக்குநர்.
"சண்டியர்'.... எவ்வளவு முயன்றும் கமல் கைக்கே வந்து சேராத தலைப்பு.... மீண்டும் பிரச்னை வராதா...?
அதற்குதான் கதையைச் சொல்லி விட்டேன். தஞ்சாவூர் பக்கத்தில் பள்ளியூர் கிராமம் என் ஊர். டிகிரி படிப்புக்குப் பின் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து விட்டேன். முதன் முதலாக நான் பார்த்த பெருநகரம் சென்னைதான். நீண்ட போராட்டம், பொறுப்புகள், துயரங்கள், லட்சியவாதங்கள், அடுத்த நிமிடங்கள் பற்றி எந்த நிர்பந்தங்களும் இல்லாத, பரபரப்புகள் என கடந்து வந்த தருணங்கள் நிறைய. லட்சிய வேட்கையில் இங்கேயே சுழன்று, அழுது, சிரித்து எப்படி எப்படியோ ஆண்டுகள் பல ஓடி விட்டன. திடீரென்று கிராமத்தைப் பார்த்து வர ஆசை. கிளம்பி போனால், அப்படி மாறியிருந்தது அந்த ஊர்.
மனிதம், விவசாயம், சகோதரத்துவம், அரசியல் எல்லாவற்றிலும் அத்தனை மாற்றங்கள். அவர்களது திட்டங்களாலோ, மற்றவர்களின் திட்டங்களாலோ அவர்களின் நாள்கள் நிரம்பி கிடந்தன. நிறைய பேருக்கு கூடுகிற இடமாக ஒயின் ஷாப், பார்ட்டி என்றாகி விட்டது. அப்பாவித்தனம், அழகியல், அடுத்து என்ன என்பது பற்றி அறியாத சுவாரஸ்யம் இதெல்லாம் வேண்டும் இல்லையா? அதுதானே கிராம வாழ்க்கையின் அழகு. அது எல்லாமே தொலைந்திருந்தது. அங்கு இருந்து திரும்பும் போது சொல்ல முடியாத உணர்வு நிலை. தாய்மை... காதல்... நட்பு... சகோதரத்துவம் இதையெல்லாம் தேடித்தானே இங்கே அத்தனை பேரும் உழைக்கிறோம். தேடிப் போகும் போது இல்லை என்றால் எவ்வளவு பெரிய ஏமாற்றம். அந்த ஏமாற்றங்களுக்கு காரணத்தை தேடிப் பிடித்த போது, இந்த தலைமுறைக்கான பாடம் இருந்தது. அதுதான் இது. எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு தீர்க்கமான விளக்கம்.
அருமையான களம்.... நினைத்ததையெல்லாம் எடுத்து விட முடிந்ததா...?
அடுத்த தலைமுறைக்காக நாம் செய்யப்போவது என்ன? - செய்துகொண்டு இருப்பதும் என்ன? பசி தீர்க்கும் கருணையை பரிசளிப்பதற்கு பதிலாக, இரை தேடும் வித்தையை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்வது என்ன நியாயம்? பலர் பணம், அதிகாரம் என பெரிய இடத்தை அடைந்து விட்டதையும், நாம் ஆதர்சங்களாக நினைக்கும் பலரால் பணம், அதிகாரம் எதிலும் ஓர் இடத்தை அடைய முடியவில்லை என்கிற வேறுபாடுகள்தான் இந்த தலைமுறையையும், அடுத்த தலைமுறையையும் தவறான பாதையில் பயணப்பட வைக்கின்றன. அதை வலியுறுத்தும் வகையில் கதை அமைந்திருக்கிறது. சண்டியர் என்பது இழிவின் அடையாளம், அநாகரீகம். சண்டியர் என்பவன் வாழத் தகுதியற்றவன் என சொல்ல வந்திருக்கிறேன்.
ஓட்டு மொத்த தஞ்சையின் முழுப்பதிவை எடுத்து வைக்கும் அளவுக்கு இதுவரைக்கும் படம் இல்லை...? அதை இது போக்குமா....?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யாரையும் சுரண்டாமல், போர்த் தொடுக்காமல் சுயமரியாதையோடு தமிழர்கள் வாழ்ந்து வருவதற்குத் தஞ்சையின் விவசாயம் முக்கியமான ஒன்று. தற்போதைய அரசியலும், ஒருங்கிணைய தெரியாத தலைவர்களும், சுழ்நிலைகளுக்கு கோஷம் எழுப்புகிற இந்த சூழலும், அந்த விவசாயத்தை எந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது என்பதுதான் இந்த கதையின் உதிரிப் பதிவு. தஞ்சையை கதைக் களமாக கொண்டு நிறைய படங்கள் வந்திருந்தாலும், அங்கு உண்மையிலேயே என்ன பிரச்னை என்பதை யாரும் தீர்க்கமாகச் சொல்லவில்லை. இதில் என்ன புதிதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு வருகிறவர்களுக்கு இன்னும் சர்ப்ரைஸôன ட்ரீட் காத்திருக்கிறது. பொதுவாக தஞ்சைக்காரர்கள் என்றால் ரொம்ப அன்பான, மரியாதையான, இளகின மனசு கொண்டவர்கள். அதைக் காட்சிப் பதிவுகளாக எடுத்து வைத்திருக்கிறேன். பூண்டி, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், நீடாமங்கலம், சடையார் கோயில், ராரா முத்திரைக்கோட்டை போன்ற தஞ்சையின் முக்கியப் பகுதிகள் இந்தக் கதை பயணிக்கும் இடங்கள்.
நடிகர்கள் பங்களிப்பு எப்படி இருந்தது....?
உறுத்தாத கதைதான் இந்தப் படத்தின் பலம். அதற்கான நடிகர்களும் அப்படியே இருக்க வேண்டும் என நினைத்தேன். சூழலை புரிந்து கொண்டு நடிக்கிற பக்குவம், இப்போது இருக்கிற முன்னணி நடிகர்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களை அதற்குள் எடுத்து சென்று பக்குவப்படுத்தவும் பட்ஜெட் இல்லை. புதுமுகங்கள் பலரை டெஸ்ட் ஷூட் செய்து, திருநெல்வேலி இளைஞர் ஜெகன் என்பவரை படத்துக்கு நாயகனாகத் தேர்ந்தெடுத்தேன். ஒரு வகையில் திருநெல்வேலியும், தஞ்சையும் ஒரே மாதிரியான கலாசார அடையாங்கள் உள்ள இடங்கள்தான். அதனால் இந்த கதைக்குள் அந்த இளைஞரால் நடிகராக பயணிக்க முடிந்தது. காதல் எபிசோடுக்காக கயல் என்கிற மலையாள பெண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நிச்சயம் நல்ல நிலைக்கு வரக் கூடிய நடிப்பைக் கொண்டு வந்திருக்கிறார்கள். மற்ற இடங்களில் எல்லாம் புதுமுகங்களே பலம். நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.