நோய் தீர்க்கும் மூலிகை வைத்தியம்!

""மதுரை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் (அலோபதி) படித்துள்ளேன். பொதுவாக எந்த நோய்க்கு நாம் மருந்து உட்கொண்டாலும்
நோய் தீர்க்கும் மூலிகை வைத்தியம்!
Updated on
3 min read

""மதுரை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் (அலோபதி) படித்துள்ளேன். பொதுவாக எந்த நோய்க்கு நாம் மருந்து உட்கொண்டாலும், அதில் சிறிய அளவில் பக்க விளைவுகள் இருக்கும். நோய் தீர அதிக அளவு டோஸ் உள்ள மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது நோய் குணமான பிறகும் உடம்பு தேறுவதற்கு சில நாள்கள் ஆகும். அதுபோல நீரிழிவு நோயாளிகள் ஆண்டு முழுவதும் மருந்து உட்கொண்டாலும் சர்க்கரையின் அளவு குறைந்ததாகத் தெரியாது, சாப்பாட்டில் கட்டுப்பாட்டோடு இருந்தால் ஓரளவுக்கு சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும். நீரிழிவு நோய்க்கான மருந்தின் விலையும் கூடிக் கொண்டே போகுது. வசதியற்றவர்களால் தொடர்ந்து சர்க்கரைக்கான மருந்துகளை வாங்கி சாப்பிட முடியுமா? அவர்களது கதி என்ன? என்ற சிந்தனை எனக்கு வந்தது. அப்போதுதான் விலையே இல்லாம, காசே இல்லாம நீரிழிவு நோயைக் குணப்படுத்தக் கூடிய இயற்கை உணவுகளைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது. அதைப்பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று நினைத்தேன். மேலும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள "இயற்கை வைத்தியம்'( நெச்சுரோபதி) படித்தேன்'' என்கிறார் மருத்துவர் சத்யவாணி. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இவரது
 கிளினிக்கில் சந்தித்தோம்:
 ""இயற்கை வைத்தியம்' என்பது மருந்து, மாத்திரை, ஊசியில்லாத மருத்துவம். லண்டன்ல இதற்கென்று தனி கோர்ஸ் இருக்கிறது. நம்ம நாட்டில் சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவத்திற்கு இருக்கும் அளவுக்கு இயற்கை வைத்தியத்திற்கு அங்கீகாரம் இல்லை. தெருவுக்குத் தெரு எப்படி அலோபதி கிளினிக் இருக்கிறதோ அது போல இயற்கை வைத்தியத்திற்கும் கிளினிக் அவசியம் வேண்டும்.
 இந்த மருத்துவ முறையின் மூலம் ஆஸ்துமா, சிறுநீரகக் கல் நோய், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், காய்ச்சல், ஜலதோஷம், குழந்தையின்மை, கருப்பை பிரச்னை, தீராத வாயுத் தொல்லை போன்ற பல நோய்களைக் குணப்படுத்த முடியும்.
 உதாரணமா சொல்லனும்னா ஒரு விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினாலும் ஒரு சிலர், மூளையில் ஏற்படும் இரத்த உறைவினால் பாதிக்கப்பட்டு கோமா ஸ்டேஜ்க்கு போய் இருப்பார்கள். அப்படி கோமா ஸ்டேஜ்ல இருப்பவர்களையும் வல்லாரை போன்ற நமது இயற்கை மூலிகைகள் மூலமும், அக்குபஞ்சர் சிகிச்சையின் மூலமும் அவர்கள் நரம்புகளைத் தூண்டிவிட்டால் போதும். விரைவில் அவர்கள் பழைய நிலையை அடையச் செய்ய முடியும்.
 இப்படிப்பட்ட இயற்கை வைத்தியத்தின் மகத்துவம் நம் மக்களுக்கு தெரிவதில்லை அதனால் அவர்கள் அதை தேடிச் செல்வதில்லை. மற்றும் விலையில்லாமல் நாமே தயார் செய்து கொள்ளும் பொருள் என்பதால் அதன் மீது நம்பிக்கையும் குறைவாக இருக்கிறது. சாதாரண தலைவலி, காய்ச்சல் என்றால் உடனே "டோலோ 650' (பெராசட்டமுல்) மாத்திரையை வாங்கிச் சாப்பிடு என்பார்கள். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவர்களாகவே சொல்லிவிடுவார்கள். ஏனென்றால் இவர்களுக்கு அதன் பெயர் தெரிந்துவிட்டது அல்லவா அதனால்? அப்படியெல்லாம் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த நோய்க்கும் மருந்து உட்கொள்வது மிகவும் தவறான ஒன்று. ஒவ்வொருவரின் உடல் நிலை, எடை, வயசுக்கு ஏற்ப மருத்துவர்கள், மருந்துகளை எழுதிக் கொடுப்பார்கள். அதைவைத்து மற்றவருக்கு வைத்தியம் சொல்லக் கூடாது. "டோலோ 650'எனும் மாத்திரை ஹை டோஸ் உள்ள மாத்திரை. அதிகப்படியான காய்ச்சல் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த மாத்திரையைக் கொடுக்க வேண்டும். மஞ்சள் காமாலை நோய் வந்து சரியானவர்கள் ஆறு மாதத்திற்குள் காய்ச்சல், தலைவலி என்று டோலோ மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டால் மீண்டும் அவர்களுக்கு மஞ்சள் காமாலை வர வாய்ப்புள்ளது. இந்நிலை மாற வேண்டும். இயற்கை வைத்தியத்தின் பயன்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 சளி, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கு முதலில் நமது வீட்டில் இருக்கும் இயற்கை மூலிகைகளைக் கொண்டு நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.
 ஒரு பத்து இலை துளசியில், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் ஒரு துண்டு இஞ்சிதட்டி போட்டு கொதிக்கவிட்டு கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் சரியாகிவிடும்.
 அதேபோல் நொச்சி, வாதநாராயணி பார்த்திங்கன்னா பெயின் கில்லர்க்கு நல்ல மூலிகை. ரத்தக்காயம், ரத்தக்கட்டுக்கு பிரண்டை நல்ல மருந்து. துளசி இதய நோய், மூச்சு திணறலுக்கு நல்ல மருந்து, தூதுவளை ஆஸ்துமா நோயாளிக்கு மிக மிக அற்புதமான மருந்து. அஜீரண கோளாறுக்கு புதினா சேர்த்துக் கொண்டால் சரியாகிவிடும். அசிடிட்டிக்கு கொய்யா நல்ல மருந்து. இதனால் சரியாகவில்லை என்றால் அதன் பின் ஆங்கில மருந்துகளைத் தேடிச் செல்லுங்கள்.
 அதேபோல் கடவுளால் படைக்கப்பட்ட ஆரோக்கிய மூலிகைகளான வல்லாரை, முருங்கைக் கீரை, முடக்கத்தான், நொச்சி, வாத நாராயாணி, துளசி, செம்பருத்தி பூ, எலுமிச்சை, கற்பூரவல்லி, ஓமவல்லி, சாமை, குதிரைவல்லி போன்ற ஏகப்பட்ட மூலிகை உணவு பொருள்கள் நம்மிடம் இருக்கின்றன.
 உதாரணமா சொல்லணும்னா ஒவ்வொர் வீட்டிலும் உள்ள அஞ்சறைப் பெட்டியே ஒரு மருந்து பெட்டிதான். பாரம்பரியமான பாட்டி வைத்தியமுறை அதில் இருக்கிறது. அதில் உள்ள கடுகு, மிளகு, திப்பிலி, சீரகம், கசகசா, பூண்டு, வெந்தயம், சோம்பு போன்றவையின் மருத்துவ குணங்களும் மகத்துவமும் உணர்ந்து கொண்டால் பயனடையலாம்.
 இன்றைய சூழலில் இயற்கை வைத்தியத்தை நாடி நிறையப் பெண்கள் வருகிறார்கள். அதில் பெரும்பாலான இளம் பெண்கள் கருப்பை பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருவதை நான் சந்திக்கிறேன். அதற்கு காரணம் சரியான உணவு முறை இல்லாதது தான். இன்னொரு காரணம் அந்தக் காலத்தில் பெண்கள் பூப்பெய்தும் போதும் உளுந்த களி, புட்டு, லேகியம் போன்றவை கொடுப்பார்கள். இப்போது எல்லாம் நாகரீகம் கருதி இதை யெல்லாம் விட்டுவிட்டார்கள்.
 இது கூட பெண்கள் வளர வளர கருப்பை பிரச்னையை உருவாக்கி விடுகிறது. நம் உணவே நமக்கு மருந்து, நம் உணவே நமக்கு நோய். அதற்கு பதில் நவதானிய கஞ்சி வைத்துக் கொடுங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உணவு. வளர்இளம் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.
 கல்யாண முருங்கைச்சாறை 14 நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குழந்தையின்மைப் பிரச்னை தீர்ந்துவிடும். இதில் முக்கியமான விஷயம் என்னன்னா இது எதுவுமே பக்க விளைவு இல்லாத நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் மூலிகைகள்.
 அதைப்போன்று பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்க மீன் உணவு, சிலரிவிதை,பாதாம் பருப்பு, நவதானியக் கஞ்சி மிகவும் உதவியாக இருக்கும். நகரத்துல உள்ள மக்கள் இப்ப ஓரளவுக்கு கீரைகளின் மகத்துவம் தெரிந்து கொண்டு வாங்கி உண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். நிறையபேர் ஹெர்பல் மெடிசனுக்கும் மாறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுலயும் மக்கள் ஏமாறக் கூடாது "அலுவேரா பவுடர்'னு டப்பால போட்டு வைத்திருப்பதை அதிக விலைக் கொடுத்து வாங்கி ஏமாற கூடாது. கத்தாழை தெருவுல கிடைக்குது. அதை விலை கொடுத்து வாங்காமல் நாமே எப்படி தயார் செய்வது என்று தெரிந்து வைத்து கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும்.
 பொதுவாக பெண்களுக்கு என்னுடைய ஆலோசனை என்னவென்றால் ஒவ்வொர் மகளிரும் தங்கள் வீட்டில் கட்டாயம் கற்பூரவல்லி, துளசி, கத்தாழை, தூதுவளை போன்ற சிறு மூலிகைச் செடிகளை தொட்டியில் வைத்தாவது வளர்க்க வேண்டும் என்பது தான்.
 மூலிகை மருத்துவம் தவிர்த்து மன ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் அளித்து வருகிறேன், யோகா, உடற்பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறேன்'' என்றார்.
 } ஸ்ரீதேவி குமரேசன்
 படம்: அண்ணாமலை
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com