

இந்தப் படம் என் சின்ன வயசு கனவு. "அம்புலி மாமா', "முத்து காமிக்ஸ்' படித்து வளர்ந்தவன் நான். அது அப்படியே என்னை பத்திரிகை, இலக்கியம் என கொண்டு வந்து விட்டது. பல்வேறு பத்திரிகைகளில் ஏராளமான சிறுகதைகள் எழுதிய அனுபவம் சினிமா நோக்கி என்னை இழுத்து வந்தது. ஒரு தொலைக்காட்சி தொடருக்காக உயர் காவல் துறை அதிகாரியைச் சந்தித்த அனுபவங்களை கொஞ்சம் பலமாக கொண்டு இந்தக் கதையை எழுதி முடித்தேன். இப்போது நான் நினைத்தது வந்திருக்கிறது. இப்போதைய தமிழ் சினிமா சூழலில் ஒரு சூப்பர் மேன் படம் எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால் அதை வேறு மாதிரியாக சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறேன். கண் முன்னாடி ஒரு கொடுமை நடக்க அதை எதிர் கொள்ள நினைக்கிறவன் என்ன மாதிரி நடந்து கொள்வான்... என யோசித்து பார்த்தேன். விறுவிறுப்பும் பரபரப்புமாக படம் வந்திருக்கிறது. சினேகமாகச் சிரிக்கிறார் இயக்குநர் கிருஷ்ணசாமி. "களவு தொழிற்சாலை' படத்தின் மூலம் தடம் பதிக்க வருகிறார்.
"களவு தொழிற்சாலை'.... வித்தியாச தலைப்பு... கதையில் என்ன வித்தியாசம் இருக்கும்....?
விழுப்புரம் பக்க ஆற்றுப் படுகையில் கிடந்த ராட்சத பாம்பின் படிமங்கள்.. கரூர் கலெக்டர் ஆபீஸ் பக்கம் கிடைத்த சோழர் கால நாணயங்கள்.. திருவாரூர் பக்கம் குக்கிராமம் ஒன்றில் கிடைத்த புத்தர் சிலைகளுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்.... செஞ்சி ஆற்றங்கரையில் கிடைத்தது உண்மையிலேயே டைனசோர் முட்டைகள்தானா? கொள்ளிடம் அருகே ஒரே இடத்தில் கிடைத்த ஏராளமான முதுமக்கள் தாழிக்குள் என்ன இருந்திருக்கும்...? பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லப்பட்ட நடராஜர் சிலையை மீட்டு வர இப்போதும் இந்திய வெளியுறவுத் துறை பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்? அன்றாட அரசியல் நிகழ்வுகளை தவிர்த்து நம் மூளைக்குள் தினந்தோறும் கொலாஜ் ஆகி கொண்டிருக்கும் கேள்விகள் இவை. இதை நம் சம கால தமிழ்ச் சூழலில் வைத்து பார்த்தேன். அதிலுள்ள முகமூடிகளை எளிமையான சகல மனிதர்களுக்கும் போய் சேர்க்கும் முயற்சியாக கை சேர்ந்திருக்கிறது.
கதையின் உள்ளடக்கம் புரியலையே...?
இன்னும் கொஞ்சம் விளக்கமாக...?
இந்திய கலாசார அடையாளங்களுக்கு உலகின் எந்த மூலையிலும் மதிப்பு. வங்க கடல் நட்சத்திர ஆமைகள், ஊட்டி தேயிலை, திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், திருப்பூர் பனியன் என தமிழக தயாரிப்புகளுக்கு உலகில் எங்கும் மதிப்பு இருப்பது போல், நம் பழங்கால பொக்கிஷங்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. இங்கிருந்து திருடி, வாங்கி எப்படியாவது அதை தங்கள் நாடுகளுக்கு எடுத்து சென்று விட வெளிநாட்டு தனி மனிதன் முதல் தலைவன் வரை எல்லோருக்கும் ஆசை. அப்படி இந்திய கலாசாரப் பொக்கிஷங்களை அடைய நினைக்கிற ஒரு கும்பலின் கேம் பிளான் என்ன ஆனது? என்பதுதான் இதன் கதை. தமிழர்களின் வரலாறு என போற்றப்படுகிற பொக்கிஷங்களை அடைய வரும் ஒரு தனி நபர், இங்கே கும்பகோணத்துக்கு பக்க கிராம வாசிகளோடு கலந்து விடுகிறான். அங்கேயே தங்கி, அவர்களுடனே வசித்து, நெருங்கி பழகி, அன்பு செலுத்தும் அவன் இறுதியில் தன் லட்சியத்தை அடைய எடுக்கும் முயற்சிகள்தான் தடதடக்கும் திரைக்கதை. ஆலாப் பறக்கிற ஆக்ஷன் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு காதல், காமெடி என பக்கா கமர்ஷியலுக்கும் இடம் இருக்கிறது.
பிரம்மாண்டமான கதை சொல்றீங்க... ஆனால், நடிகர்கள் பளீச்சென தெரியலையே....?
நட்சத்திர நடிகர்களுக்காக இந்தக் கதையை நான் யோசிக்கவே இல்லை. எப்போது அழைத்தாலும் அர்ப்பணிப்போடு வந்து நிற்கிற நடிகர்கள் எனக்கு தேவை. "தடையற தாக்க' வம்சி எனக்கு பிடித்தமானவர். ஹீரோவைத் தாண்டி திரையில் தன் பக்கம் ரசிகர்களை இழுப்பவர். அவரை இதன் பிரதான பாத்திரத்துக்கு எடுத்துக் கொண்டேன். இன்னொரு பக்கம் அருமையான காதலுடன், கதையை இழுத்து செல்கிற ஜோடி. சில படங்கள் நடித்தும் வெளிச்சத்துக்கு வராத கதிர் பொருத்தமாக இருந்தார். புதுமுகம் குஷிதான் நாயகி. போலீஸ் அதிகாரியாக இயக்குநர் மு.களஞ்சியம் நடித்திருக்கிறார். வளர்ந்து, நீண்ட மூடிகளை இந்த படத்துக்காக இழந்து விட்டு, மீசை மட்டும் வைத்து கம்பீர போலீஸôக வருகிறார். வம்சிக்கு இன்னும் பெருமையையும், மரியாதையையும் இந்தப் படம் சேர்த்துக் கொடுக்கும்.
நிறைய இயக்குநர்களிடம் வேலை பார்த்த அனுபவம் என்னவெல்லாம் கற்றுக் கொடுத்தது....?
கதை ஒரு பக்கம் இருந்தாலும், உயிர்ப்பான வசனங்கள் மூலம் கதையை வேறு திசைக்கு நகர்த்தி போக முடியும் என்பதை வி.இசட்.துரை சாரிடம் கற்றுக் கொண்டேன். "முகவரி', "காதல் சடுகுடு' இரண்டு படங்களிலும் வசனங்களை உற்றுக் கவனித்தால் இது உங்களுக்கு புரியும்.
மேன்மையான மனித உணர்வுகள்தான் ஒரு படைப்புக்கு பலம் சேர்க்க முடியும் என்பதை சிம்புதேவன் சாரிடம் கற்றுக் கொண்டேன். எப்போதுமே மனித உணர்வுகளை பிரதானமாக வைத்து படமெடுப்பது அவருக்கு மட்டுமே கை வந்த கலை. ஒரு கதையை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம்... ஆனால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் படி எடுக்க வேண்டும் என்பதை கே.வி.ஆனந்திடம் கற்றுக் கொண்டேன். கடைசியாக ஷங்கர் சாரின் "ஐ' படத்தில் வேலை பார்த்தேன். நிச்சயம் இந்திய சினிமா பார்த்திராத வேறு ஒரு பிரம்மாண்டம் "ஐ.' ஷங்கர் சார் படங்களில் இது நிச்சயம் ஒரு படி மேலே போய் நிற்கும். ஷங்கர் சாரிடம் எப்போதும் ஒரு நேர்த்தியை கற்றுக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.