மலைகளின் அரசியில் மன்மதனுக்கு விழா!

நீலகிரியில் வசிக்கும் தாயகம் திரும்பிய தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களுள் காமன் கூத்து என்ற மன்மதன் கூத்தும் ஒன்றாகும்.
மலைகளின் அரசியில் மன்மதனுக்கு விழா!
Updated on
1 min read

நீலகிரியில் வசிக்கும் தாயகம் திரும்பிய தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களுள் காமன் கூத்து என்ற மன்மதன் கூத்தும் ஒன்றாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 2வது பிறை தொடங்கும் 4வது நாள் முதல் தொடர்ந்து 16 நாட்களுக்கு கொண்டாடப்படும் இத்திருவிழா மன்மதனை எரியூட்டுவதிலிருந்து உயிர்ப்பிக்கும் வகையிலான நிகழ்வுகளை கூத்து வடிவில் நடித்துக் காட்டும் நிகழ்வாகும்.
 இவ்விழாவையொட்டி செவ்வரளி, ஆமணக்கு, மஞ்சள், மூங்கில் மற்றும் செங்கரும்பு உள்ளிட்டவற்றை ஒன்றாக இணைத்து ஒரு குழிக்குள் நவதானியங்களை போட்டு அதன்மீது இக்கலவையை நட்டு வைப்பர். இதனையே சிவபெருமானாகவும் கருதி காமன் பண்டிகை முடியும் வரை வழிபடுவர்.
 தமிழகத்தின் மிகத்தொன்மையான இவ்விழா காலப்போக்கில் ஒரு சில கிராமப் பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் விழாவாகச் சுருங்கிவிட்டது. ஆனால், இன்னமும் தாயகம் திரும்பிய தமிழர்கள் காமன் கூத்தை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் இவ்விழாவுக்கு புராண காலத்திலிருந்தே ஆதாரங்கள் உள்ளதாக கூறுகிறார் இவ்விழாவை கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் விமரிசையாக நடத்திவரும் ஆமைக்குளத்தை சேர்ந்த கவிஞர்
 பெ.நாகராஜ். அவர் தெரிவித்த தகவல்களாவன:
 ""தட்சனின் யாகத்திற்கு சிவபெருமானை அழைக்காததால் அவர் கோபத்திலிருந்துள்ளார். சிவபெருமானுக்கு தெரியாமல் பார்வதி தேவி அந்த யாகத்திற்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் சிவபெருமான் நிஷ்டையில் திடீரென ஆழ்ந்துவிட்டாராம். அப்போது அசுரர்களின் கொடுமை எல்லை மீறியதால் சிவபெருமானை நிஷ்டையிலிருந்து கலைக்குமாறு மன்மதனிடம் கேட்டனர்.
 மன்மதனுக்கு அப்போதுதான் ரதியுடன் திருமணம் முடிந்திருந்தது. எனவே மன்மதனை அங்கு செல்லக்கூடாது என ரதி தடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த குறத்தியும் மன்மதனின் கை ரேகையைப் பார்த்து அதில் மரண ரேகை தெரிவதாகச் சொன்னதால் மன்மதன் அங்கு செல்லவே கூடாது என ரதி தடுத்துள்ளார். ஆனால் அதையும் மீறி சென்ற மன்மதன் கரும்பு வில்லில் அரும்பினைத் தொடுத்து சிவபெருமான் மீது எறிந்தாராம். இதில் கண் விழித்த சிவபெருமான் கோபத்தில் தனது நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து விட்டாராம்.
 ரதிதேவி சிவபெருமானிடம் தனக்கு மாங்கல்ய பிச்சை தருமாறு கேட்டதற்கு 3வது நாளில் மன்மதனை சிவபெருமான் உயிர்ப்பித்தாராம். இந்த நிகழ்வுகள்தான் 16 நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
 இதில் சிவபெருமான் முதல் பார்வதி தேவி, மன்மதன், ரதி தேவி, எமன், எமனின் தூதர்கள் என வேடமிட்டு கூத்து கட்டுவர். மன்மதனை எரியூட்டுவதிலிருந்து அவரை உயிர்ப்பிப்பது வரையிலான காட்சிகள் கூத்தின்போது தத்ரூபமாக நிகழும் காட்சிகளாக இருக்கும்'' என்று நாகராஜ் தெரிவித்தார்.
 இந்த விழாவுக்காக திருமண பத்திரிகை கூட அச்சடிக்கப்படுகிறது. தமிழர்களின் தொன்மையான கலையான கூத்துக்கலையை தொடர்ந்து காத்துவரும் நோக்கில் இது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கனடா நாட்டை சேர்ந்த ஒரு ஆவணப் படக் குழுவினர் இவ்வாண்டில் நடத்தப்பட்ட மன்மதன் கூத்தை ஆவணப்படமாகவும் உருவாக்கியுள்ளனர்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com