அலலிப் பூ... முல்லைப் பூ... எல்லாமே வெள்ளைப் பூ!

பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு ரோஜாப் பூ என்றால் அலாதி பிரியம். அதிலும் குறிப்பாக சிவப்பு ரோஜாவும் பன்னீர் ரோஜாவும்
அலலிப் பூ... முல்லைப் பூ... எல்லாமே வெள்ளைப் பூ!
Published on
Updated on
3 min read

பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு ரோஜாப் பூ என்றால் அலாதி பிரியம். அதிலும் குறிப்பாக சிவப்பு ரோஜாவும் பன்னீர் ரோஜாவும் அவரது கறுப்பு ஷெர்வாணி கோட்டில் பளிச்சென்று இடம்பெற வேண்டும் என்று விரும்புவார். இதற்காகவே, காலையிலும் மாலையிலும் மட்டுமல்ல, தினந்தோறும் ஆறு தடவை அவரது கோட்டிலுள்ள ரோஜாப் பூ மாற்றப்படும்.
 பண்டித ஜவகர்லால் நேரு, தனது கோட்டில் ரோஜாப் பூவைச் சொருகிக் கொள்வதற்கு இன்னொரு காரணமும் சொல்வார்கள். 1938-இல் தனது மனைவி கமலா இறந்தது முதல் அவரது நினைவாகத் தனது கோட்டில் ஜவஹர் ரோஜாப்பூ வைத்துக் கொள்ளத் தொடங்கினார் என்று அவரது சகோதரி கிருஷ்ண ஹாதிசிங் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
 முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலையுதிர் காலத்தில் பூக்கும் சினார் மலர்கள் என்றால் கொள்ளை இஷ்டம். சினார் மரங்கள் பூத்துக் குலுங்கும் ரம்யமான காட்சியைப் பார்ப்பதற்காகவே, இலையுதிர் காலத்தில் அடிக்கடி காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
 ஜவஹர்லால் நேருவின் வழியொற்றிய மலர் ப்ரியர் ஒரிஸ்ஸô முதல்வர் நவீன் பட்நாயக். 67 வயது பிரம்மச்சாரியான நவீன் பட்நாயக் மூலிகைகள் பற்றி ஆராய்ச்சியே செய்திருக்கிறார். "வாழ்க்கைப் பூந்தோட்டம் - இந்தியாவின் மூலிகைகள் பற்றிய அறிமுகம்' (கார்டன் ஆப் லைப் - அன் இன்ட்ரொடக்ஷன் டு த ஹீலிங் ப்ளான்ட்ஸ் ஆப் இந்தியா) என்கிற புத்தகமே எழுதியிருக்கிறார் முதல்வர் நவீன்.
 ÷நவீன் பட்நாயக்கை பளிச்சென்று வெள்ளை வெளேர் பைஜாமா குர்த்தாவுடன்தான் பார்க்க முடியும். அவருடைய இல்லத்தில் நான்கு பெரிய தொட்டிகளில் வெள்ளை நிறத்திலான மடோனா அல்லி வைத்திருக்கிறார். வெளியில் போகும்போது அந்த அல்லி மலர்கள் அவரது பார்வையில் பட வேண்டும்.
 ÷ஒரிஸ்ஸô மாநில தலைமைச் செயலகத்தின் மூன்றாவது மாடியில் அமைந்திருக்கிறது முதல்வர் நவீன் பட்நாயக்கின் அறை. அந்த அறைக்கு முன்னால் மேற்காசியா மற்றும் பால்கன் பகுதி நாடுகளில் மட்டுமே காணப்படும் அதிசயமான மலர்கள் இரண்டு தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.
 ÷அதுபோலத்தான் வெள்ளை நிற முல்லை மலரும். முல்லை மற்றும் பிச்சிப் பூக்கள் என்றால் நவீன் பட்நாயக்கிற்குப் பிடிக்கும் என்பதால் கட்சிக்காரர்களும், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரும் மல்லிகை, முல்லை, பிச்சி, இருவாட்சி போன்ற வெண்மை நிறமும் வாசனையும் உடைய பூக்களால் ஆன பூங்கொத்துக்களை அவருக்கு அளிப்பதில் நீ நான் என்று போட்டி போடுகிறார்கள்.
 பெங்களூரிலிருந்து மல்லிகை, முல்லை மலர்களை புவனேஸ்வர் பூ வியாபாரிகள் டன் கணக்கில் வாங்குகிறார்கள். பூங்கொத்தின் விலை அடாவடியாக அதிகரித்திருப்பது முதல்வர் நவீன் பட்நாயக்கால்தான் என்று பொருமுகிறார்கள், எதிர்க்கட்சியினர். நல்லவேளை, தென்னிந்தியர்கள்போல பெண்கள் தவறாமல் பூச் சூடும் வழக்கம் ஒரிஸ்ஸôவில் இல்லை. இருந்திருந்தால், தாய்மார்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருப்பார் முதல்வர் நவீன்.
 புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தனது பங்களாவின் தோட்டத்தில் விதவிதமான மலர்களாலான பூந்தோட்டத்தை ஏற்படுத்திப் பராமரிக்கிறார் முதல்வர் நவீன். தினமும் தானே அந்தத் தோட்டத்தைச் சுற்றி வந்து தோட்டக்காரருக்கு பல்வேறு ஆலோசனைகளைக் கூறுகிறார். பராமரிப்பை மேற்பார்வை இடுகிறார்.
 புவனேஸ்வரிலுள்ள பழைய நகரத்தில் பிந்துசாஹர் என்கிற பெரிய ஏரி இருக்கிறது. அதை ஒட்டியுள்ள 1.25 ஏக்கர் நிலப்பரப்பின் "ஏகாம்ரவனம்' என்கிற அழகான மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி இருக்கிறார் ஒரிஸ்ஸô முதல்வர். இங்கே ஏறத்தாழ 240 அரிய மூலிகைச் செடிகள் பராமரிக்கப்படுகின்றன. முதல்வர் நவீன் பட்நாயக்கின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 50 அரிய மூலிகைச் செடிகள் இங்கே வளர்க்கப்படுகின்றன. இதைப் பார்ப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
 ÷இந்தப் பூங்காவுக்கு ஏன் ஏகாம்ரவனம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தெரியுமா? புவனேஸ்வரம் ஒரு காலத்தில், அதாவது கலிங்கப் போருக்கு முற்பட்ட காலத்தில், ஏகாம்ரவனம் என்றுதான் வழங்கப்பட்டதாம். அதனால்தான் முதல்வர் நவீன் பட்நாயக் தான் உருவாக்கிய பூங்காவுக்கு அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.
 ÷ஏகாம்ரவனம் பூங்காவில் வெள்ளை நிற அல்லி மலரோ, மல்லிகை, முல்லையோ இருக்கிறதா என்றால் இல்லை. அவையெல்லாம் மூலிகைச் செடிகள் அல்லவே, அதனால் இடம்பெறவில்லை போலிருக்கிறது.
 ÷முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மாலைகள் அணிவித்தால், வெள்ளை நிற மலர்களால் ஆன மாலைகள் மட்டுமே அவர் பயணிக்கும் காருக்குள் வைக்கப்படுகிறது. ஏனைய மாலைகள், ரோஜாப் பூ மாலையே ஆனாலும், காரின் டிக்கியிலோ, கூரையிலோதான் வைக்கப்படுகின்றன.
 -ஜான்சிராணி
 
 
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சுற்றி எப்போதும் வெள்ளை நிற மலர்கள் இருக்க வேண்டும் என்றால், பளிச்சென்று எப்போதும் வெள்ளை நிறச் சேலை அணியும் அண்டை மாநிலமான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கோ, பூக்கள் என்றாலே அலர்ஜி. தனக்குப் பூங்கொத்து வழங்கப்படுவதையும், மாலைகள் அணிவிக்கப்படுவதையும், தன்மீது மலர் தூவப்படுவதையும் முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதிப்பதில்லை. நிஜமாகவே அவருக்கு மலர்களின் மகரந்தம் அலர்ஜியாம். மலர் வாசம் பட்டால் அடுத்த மூன்று நாட்கள் மூச்சுத் திணறலால் அவஸ்தைப் படுவாராம்!
 
பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஜோதிடம், சாஸ்திரங்களில் அதீத நம்பிக்கை உடையவர்.
 இவர் அன்றாடம் அணியும் சேலைகூட சாஸ்திரப்படியான வண்ணங்களில்தான் அணிவார் என்பது மட்டுமல்ல, அந்தந்தக் கிழமைகளுக்கான மலர்களையும் சூடிக்கொள்வார் என்பதுதான் சிறப்பம்சமே.
 திங்கள்கிழமை வெள்ளை நிறச் சேலையும் வெள்ளைப் பூவும்; செவ்வாயன்று சிவப்பு நிறச் சேலையும், சிவப்புப் பூவும்; புதன்கிழமைகளில் பச்சைப் புடவையும், துளசிபோன்ற பச்சை நிற இலைகள்; வியாழக்கிழமை மஞ்சள் நிறச் சேலை, மஞ்சள் ரோஜா அல்லது வெள்ளை நிற மலர்கள்; வெள்ளிக்கிழமைகளில் வெளிர் நீல ஆடை; சனிக்கிழமை வாடாமல்லி நிறம்; ஞாயிறன்று பர்ப்பிள் நிறத்திலான உடைகள் என்று சுஷ்மா ஸ்வராஜ் வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறார்.
 
பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் மூலிகைகள் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருப்பவர். அவரது வீட்டுத் தோட்டத்தில் சில அரிய மூலிகைகளைப் பயிரிட்டு வளர்த்து வருகிறார். சிறு சிறு உபாதைகளுக்கு மூலிகை வைத்தியம் பார்த்துக் கொள்வாரே தவிர, ஆங்கில மருத்துவத்தை நாட மாட்டார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com