ஆடும் மயில் - பாடும் குயில்

வீணை தனம்மாள் குடும்பத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி டி. முக்தாவின் நூற்றாண்டு விழாவை, அவரது மாணவியும் நடனக் கலைஞருமான அலர்மேல் வள்ளி "பாணி' என்ற தலைப்பில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடினார்.
ஆடும் மயில் - பாடும் குயில்
Updated on
2 min read

வீணை தனம்மாள் குடும்பத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி டி. முக்தாவின் நூற்றாண்டு விழாவை, அவரது மாணவியும் நடனக் கலைஞருமான அலர்மேல் வள்ளி "பாணி' என்ற தலைப்பில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடினார்.
 முதல் நாள் அலியான்ஸ் பிராங்சைஸ் அரங்கில் டி. முக்தாவைப் பற்றி வி. ஸ்ரீராம் நிகழ்த்திய ஆராய்ச்சிபூர்வமான சொற்பொழிவு. அதையடுத்து, வள்ளி, அருந்ததி சுப்பிரமணியம், பாம்பே
 ஜெயஸ்ரீ ஆகியோரின் கலந்துரையாடல். தொடர்ந்து, டி. முக்தாவின் மாணவிகளான டாக்டர் நிர்மலா சுந்தரராஜனும், அவரது மகள் டாக்டர் சுபாஷிணி பார்த்தசாரதியும் வழங்கிய டி. முக்தா பாணியிலான இசை (டி. முக்தா காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளையிடம் முறையாக இசை பயின்றவர்).
 இரண்டாம் நாள், சிவகாமி பெத்தாச்சி அரங்கில் டி. முக்தாவின் முத்திரை எனும்படியான ஐந்து பதம்-ஜாவளிகளை பாம்பே ஜெயஸ்ரீ பாட, அவற்றுக்கு அலர்மேல் வள்ளி வழங்கிய அபிநயம் மிகுந்த நடனங்கள்.
 சாதாரணமாக நடன நிகழ்ச்சிகளில் கடினமான வர்ணம் முடிந்ததும், லகுவான பதம், ஜாவளி பாடுவார்கள். பிறகு கலகலப்பான தில்லானாவோடு நிகழ்ச்சி நிறைவடையும். ஆனால் ஜெயஸ்ரீ பாடிய பதம்-ஜாவளிகளும், வள்ளி அவற்றுக்குச் செய்த அபிநயமும் வேறு எவரோடும் ஒப்பிட முடியாத வகையில் அலாதியானவை. டி. முக்தாவின் குடும்பத்துக்கே உரித்தான "நீ மாட்டலே மாயனுரா', "யாருக்காகிலும் பயமா', "பய்யடா',"காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்" என ஒவ்வொன்றுமே அத்தனை கனமான பாடல்கள். பதம்-ஜாவளிகளுக்கே முக்கியத்துவம் தந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது, வர்ணத்துக்குப் பிறகு வழங்கப்படும் அம்சங்களின்
 தரத்தையே உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.
 அத்தனை அபிநயங்களிலும் பளிச்சிட்ட மென்மையும், நளினமும், அழகும் வள்ளிக்கே உரியவை. அதிலும், "நீ மாட்டலே' பாடலில் நிரவலும், ஸ்வரக் கோவைகளுமாக இழைத்து வழங்கியது வெகு ஜோர்.
 தனது நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு பாடலுக்கும் முன் அலர்மேல் வள்ளி அந்தப் பாடலின் பொருளை ஆங்கிலத்தில் முன்னுரையாக வழங்குவது வழக்கம். இந்த நிகழ்ச்சியிலும் அதை அவர் பின்பற்றினார். "எனக்கு காந்திமதியம்மைப் பிள்ளைத் தமிழை சொல்லிக் கொடுக்கும்படி முக்தாம்மாவைக் கேட்டேன். அதற்கு அவர் எனக்கு அது பாடமில்லையே இருந்தாலும், விசுவாவுக்கு (பாலாவின் சகோதரர்) தெரியும். அவரிடம் கேட்டு உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்' என்றார். அவருடைய அக்கறையும், அன்பும் என்னை நெகிழ வைத்தன' என்றார் வள்ளி. "வாராதிருந்தால் வடிவேல் விழிக்கு மை எழுதேன்' என்ற ராகமாலிகையில் அமைந்த "காந்திமதியம்மைப் பிள்ளைத் தமிழ்' விருத்தம், ஏற்கெனவே ரசனைக் கடலில் மூழ்கிப் போயிருந்த ரசிகர்களுக்கு மேலும் விருந்தளித்தது.
 பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், பதம் ஜாவளிகளுக்கு அபிநயம் செய்வதென்பது அத்தனை எளிதல்ல. உணர்வுகளை உடல்மொழியாக வெளிப்படுத்தும் இவ்வகைப் பாடல்களை அலர்மேல் வள்ளி அநாயசமாகச் செய்தது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தது என்றால், பாம்பே ஜெயஸ்ரீ தன் இனிமையான குரலில் அந்தப் பாடல்களை உணர்ச்சி ததும்ப வழங்கியது செவிகளில் தேனாகப் பாய்ந்தது. இத்தனைக்கும் ஜெயஸ்ரீ டி.முக்தாவின் பாணியைப் பின்பற்றுபவர் அல்ல.
 இந்த நிகழ்ச்சியின் தலைப்பு, "பாட்டைப் பார்க்கவும் நடனத்தைக் கேட்கவும்' என்பது. அலர்மேல் வள்ளியும், பாம்பே ஜெயஸ்ரீயும் அணி சேரும் நிகழ்ச்சிக்கு இதைவிடப் பொருத்தமானத் தலைப்பு வேறென்ன இருக்க
 முடியும்?
 -சாருகேசி
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com