
வில்லுப்பாட்டு எப்படி உருவானது என்பதற்கு, ஒரு செவி வழிகதை உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். காட்டில் வேட்டையாடினார். சில மிருகங்கள் உயிரைவிட்டன. மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் ஒரு கலக்கம். அமைச்சரிடம்,
""இந்த உயிர்களை இப்படி கொல்கிறோமே... நமக்கு சந்தோஷம்; அவைகளுக்குத் துன்பம். மானைக் கொன்றபின், அதன் குட்டி என்ன தவியாகத் தவிக்கிறது பார்த்தீரா?'' என்றார். அமைச்சரும், "" ஆமாம் ... அது பாவம்தான்'' என்றார்.
""சரி... இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா?''
"" உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப்பாடி, பாவ மன்னிப்பு கோருங்கள். இசை ஒன்றுக்குத்தான் இறைவன் இசைவான்'' என்றார் அமைச்சர்.
உடனே, காட்டிலேயே கச்சேரி நடத்தமுடிவானது. ஆனால் பக்க வாத்தியங்கள் இல்லை.
அமைச்சர், "" சமயோசிதமாக நாம் உண்டாக்குவதுதான் கருவி'' என்று கூற,வில்லையே காலுக்கிடையில் வைத்து, அம்பால் தட்டித் தட்டிப் பாடலானார், மன்னர். அப்படித் தட்டும் போது, வில் சரிவர நிற்காததால், ஓரத்தில் காட்டிற்குக் கொண்டு போயிருந்த மணகுடத்தைக் கட்டி தட்டினர். "டும், டும்' என்ற நாதம் பிறந்துவிட்டது.
ராஜா பாடத்துவங்கும் முன், "தந்தனத்தோம்' என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும்போது, ஆமோதிக்க வேண்டாமா?
அதனால், மன்னரின் பரிவாரங்கள், "ஆமாம்' போட ஆரம்பித்தனர்.
அந்த வழக்கம் வில்லுப் பாட்டில் இன்றும் தொடர்கிறது.
- சுப்பு ஆறுமுகம் ஒரு பேட்டியில்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.