உழைப்பால் உயர்ந்தவர்!

""லட்சியத்தை அடைய தன்னம்பிக்கையும், கடுமையான உழைப்பும் இருந்தால் போதும்'' என்கிறார்,
உழைப்பால் உயர்ந்தவர்!

""லட்சியத்தை அடைய தன்னம்பிக்கையும், கடுமையான உழைப்பும் இருந்தால் போதும்'' என்கிறார், மாற்றுத்திறனாளியும், வழக்குரைஞருமான எஸ். முருகன்.
 திருச்சி விமானநிலையம் பகுதியில் வசிப்பவர் எஸ்.முருகன். வழக்குரைஞராகவும், விற்பனை வரி மற்றும் வருமான வரி ஆலோசகராகவும் இருக்கிறார். இவரின் உயரம் வெறும் இரண்டரை அடி மட்டுமே. இவரின் படிப்பும், ஊதியமும், ஐந்தரை அடி மனிதர்களை விட அதிகம்.
 அப்படி என்னதான் சாதனையை செய்துவிட்டார் என்ற கேள்வியுடன் முருகனை அணுகினோம்;
 
 ""என் தாய் வழி பாட்டி, என்னைப் போலவே குறைபாட்டுடன் இருந்தார். அவரைப் போல குறைபாட்டுடன் நான் பிறந்தேன். எங்களுடைய சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி. என் தந்தை திருச்சி விமானநிலையம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றினார்.
 பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு, அதேபகுதியில் சைக்கிள் உதிரி பாகங்கள் கடையைத் தொடங்கி நடத்தினார். நான் சிறுவயது முதலே என்னுடைய ஊனத்தைப் பற்றி கவலைப்பட்டது இல்லை. பள்ளிப் படிப்பை விமான நிலையம் பகுதியில் உள்ள ஆப்பார்ட் மார்ஷல் பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளிப்படிப்பை ஆர்.சி. பள்ளியிலும் படித்தேன். சிறுவயது முதலே பி.காம் படிக்க வேண்டும் என்பதையும், வழக்குரைஞருக்கு படிக்க வேண்டும் என்பதையும் மனதில் உறுதியாக வைத்திருந்தேன்.
 நான் பி.காம் படிப்பை முடித்தபோது, எனக்கு ஆதரவாக இருந்த தந்தை இறந்து விட்டார். அதன்பின்னர் சைக்கிள் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடையை நானே நடத்தத் தொடங்கினேன். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு ஜமால் முகம்மது கல்லூரியில் எம்.காம் படிப்பை முதல் வகுப்பில் முடித்தேன். அதன்பின்னர் வேலை தேடி அலைந்தபோது, என்னுடைய உடலமைப்பைப் பார்த்து, யாரும் எனக்கு வேலை தர முன்வரவில்லை.
 அப்போதுதான், என்னுடைய நண்பர் முத்துராமன் என்பவர், எம்.காம் படித்திருப்பதால், கடைகளில் கணக்கு எழுதும் பணியைச் செய்யலாம் என்று அறிவுரை கூறினார். அதுதான் என்னுடைய வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. கணக்கு எழுத வேண்டும் என்றால், முதலில் ஆடிட்டர் ஒருவரிடம் பயிற்சி பெற வேண்டும். அந்த வாய்ப்பை எனக்குத் தந்தவர் ஆடிட்டர் ஜெயபால். அவரிடம் ஓர் ஆண்டு பயிற்சி பெற்ற பின்னர், 1997-ம் ஆண்டு முதல், விற்பனை வரி ஆலோசகராக மாறினேன். பின்னர் வருமான வரித்துறை ஆலோசகராகவும் ஆனேன். அதில் கடுமையாக உழைத்ததால், விமான நிலையம் பகுதியில் இருந்த எங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டினேன்.
 கடந்த 2006ம் ஆண்டு திருச்சி கே.கே.நகரில் ரூ.11 லட்சத்தில் விலைக்கு வந்த வீட்டை வங்கி கடனுதவியுடன் வாங்கினேன். அதன் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி. பெங்களுரூவில் சட்டப்படிப்பை முடித்தேன். கடந்த 2010-ஆம் ஆண்டு வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்து, ஓம்பிரகாஷ் என்பவரிடம் ஜுனியராகப் பணியாற்றி வருகிறேன்.
 எனக்கு திருமணமாகி மீனா என்னும் மனைவியும், கார்த்திகா என்னும் பி.காம் படிக்கும் மகளும், எஸ்எஸ்எல்சி படிக்கும் சிங்காரம் என்ற மகனும் உள்ளனர். சிறந்த வழக்குரைஞராக ஆக வேண்டும் என்பதும், ஆடிட்டிங் துறையில் பிரகாசிக்க வேண்டும் என்பதும் ஆசை. மாற்றுத்திறனாளியாக பிறந்தாலும் இதுவரை யாரையும், எதற்காகவும் எதிர்பார்த்ததில்லை. கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும், எந்த லட்சியத்தையும் வென்றெடுக்கலாம்'' என்றார்
 எஸ்.முருகன்.

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com