வயலுக்குப் போகாமலேயே நீரிறைக்கும் மோட்டாரை இயக்கலாம்!

அறிவியல் முன்னேற்றங்களைப் பார்த்தால் மனிதன் வீட்டில் படுத்துக் கொண்டே அனைத்து வேலைகளையும் செய்துவிடுவான் போலிருக்கிறது!
வயலுக்குப் போகாமலேயே நீரிறைக்கும் மோட்டாரை இயக்கலாம்!

அறிவியல் முன்னேற்றங்களைப் பார்த்தால் மனிதன் வீட்டில் படுத்துக் கொண்டே அனைத்து வேலைகளையும் செய்துவிடுவான் போலிருக்கிறது! வீட்டில் இருந்தே வயலில் உள்ள மின்சார மோட்டாரை இயக்க முடியுமா? இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார மோட்டாரை நிறுத்த முடியுமா? ""முடியும்'' என்கிறார் பிரபாகரன்.
 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த இளைஞர் பிரபாகரன். அவர் செல்போன் மூலம் இயக்கப்படும் ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
 பிரபாகரனின் அப்பா தங்கராஜ் லாரி டிரைவர். 19 வயதான பிரபாகரன் மானாமதுரையில் உள்ள சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டு, எலக்ட்ரிஷியன் வேலை செய்து வருகிறார். அவருடைய புதிய கண்டுபிடிப்பைப் பற்றி அவரிடம் கேட்டோம்...
 ""சிறு வயதில் இருந்தே எனக்குப் புதிய புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும்போது பாடங்களைப் படிக்காமல், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து ஏதாவது செய்து கொண்டிருப்பேன். அதனால் என்னால் எட்டாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியவில்லை.
 நாம் கண்டுபிடிக்கும் எந்தப் பொருளும் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும் என்று நினைப்பேன். விவசாய நிலங்களில், தோட்டங்களில் அமைந்துள்ள மின் மோட்டார்களை வீட்டிலிருந்தபடியே இயக்கி அணைக்கும் புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளேன்.
 இதற்குத் தேவை இரு பழைய செல்போன்கள். அவற்றில் இரண்டு சிம் கார்டுகளைப் பொருத்தி, வீட்டிலிருந்தவாறு பம்புசெட் மோட்டார்களை இயக்க முடியும். அணைக்கவும் முடியும்.
 வீட்டில் உள்ள செல்போனில் இருந்து வயலில் உள்ள நீரிறைக்கும் மோட்டாருக்கு அருகில் உள்ள ஒரு செல்போனுக்குப் போன் செய்தால், மோட்டார் ஆன் ஆகிவிடும். இது எப்படி என்றால், மோட்டாருக்கு அருகில் உள்ள செல்போனுக்குப் போன் செய்யும்போது அது வைப்ரேஷனோடு ரிங் ஆகும். அப்போது அந்த செல்போனுடன் இணைக்கப்பட்டு நீரிறைக்கும் மோட்டாருக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள வேறொரு சிறிய மோட்டாரில் ஏற்படும் அசைவின் மூலம் அது நீரிறைக்கும் மின்சார மோட்டாரை ஆன் செய்துவிடும்.
 ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ தேவையான அளவுக்குத் தண்ணீர் பாய்ந்தவுடன், வீட்டில் இருந்தபடியே நீரிறைக்கும் மோட்டாருக்கு அருகில் உள்ள இன்னொரு செல்போனுக்குப் போன் செய்ய வேண்டும். அப்போது அந்த செல்போன் ஒலிக்கும். அதனுடன் இணைக்கப்பட்ட நீரிறைக்கும் மோட்டாருக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள இன்னொரு சிறிய மோட்டாரில் ஏற்படும் அசைவினால் நீரிறைக்கும் மோட்டார் ஆஃப் ஆகிவிடும்.
 இதில் என்ன சிறப்பு என்றால், நீரிறைக்கும் மோட்டார் 3 ஃபேஸ் கரண்டில் இயங்கும். ஏதாவது ஒரு ஃபேஸில் கரண்ட் வரவில்லையென்றாலும் கூட நீரிறைக்கும் மோட்டார் ஆன் ஆகாது.
 இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தினால், இரவு நேரங்களில் நீர் பாய்ச்ச விவசாயி இனிமேல் வயலுக்குப் போக வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே நீரிறைக்கும் மோட்டாரை இயக்கலாம். ஏற்கெனவே தண்ணீர் பாய்ச்சுவதற்கு எவ்வளவு நேரம் ஆனதோ, அதைக் கணக்கிட்டு நீரிறைக்கும் மோட்டாரை ஆஃப் செய்து
 விடலாம்.
 இன்னும் இந்தக் கண்டுபிடிப்பைப் போல நிறைய பயனுள்ளவற்றைக் கண்டு பிடிக்க ஆசை'' என்கிறார் பிரபாகரன்.
 - கருப்பையா,
 மானாமதுரை
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com