சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி!

பல துறைகளில் இன்று பெண்கள் முன்னேறிவிட்டபோதிலும், எங்கோ ஒரு மூலையில் பெண்பிள்ளை பிறந்துவிட்டால் முகம் சுளிக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி!
Updated on
2 min read

பல துறைகளில் இன்று பெண்கள் முன்னேறிவிட்டபோதிலும், எங்கோ ஒரு மூலையில் பெண்பிள்ளை பிறந்துவிட்டால் முகம் சுளிக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுவே மாற்றுத்திறனாளியாகப் பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஆனால், உடலில் உள்ள ஊனம் ஒருபோதும் வாழ்க்கையின் வெற்றிக்குத் தடையாக இருப்பதில்லை; துணிவு இருந்தால் போதும் மலையையும் பெயர்த்துவிடுவார்கள். மதுரையில் உள்ள "தியாகம் பெண்கள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெ.அமுதசாந்தி அப்படிப்பட்ட சாதனையாளர்களில் ஒருவர். மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்கள் சுயமாக வாழ உதவியாகவும் இருந்து வரும் இவர் சாதனைப் பெண்கள் பகுதிக்காக, அவர் கடந்து வந்த பாதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

""பிறவியிலேயே இடது கை குறையுடன்தான் பிறந்தேன். நிறைய சிரமங்களைச் சந்தித்தாலும், இது என்னால் முடியாது என்று எதையும் விட மாட்டேன். மீண்டும் மீண்டும் முயற்சி செய்வேன். சின்ன வயதில் என் வீட்டுச் சூழலின் காரணத்தால் என்னைப் படிக்க வைக்க முடியாமல் என் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டனர். அப்போது காந்தி கிராமத்தின் கிளை நிறுவனமாக திருநெல்வேலியில் உள்ள "அவ்வை ஆசிரமம்' மாற்றுத்திறனாளிகளின் படிப்புக்கு உதவுகிறார்கள் என்று கேள்விப்பட்டு போய்ப் பார்த்தோம். படிப்பின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து நான் பி.காம் முடிக்கும் வரை உதவி செய்தார்கள். அதன் பிறகு, தொலைதூரக் கல்வியில் எம்.பி.எம்.(வங்கி மேலாண்மை) முடித்ததும். தனியார் கல்லூரியில் அக்கவுண்ட்டன்ட் வேலையும் கிடைத்தது. ஆனால், அதோடு என்னால் திருப்திடைய முடியவில்லை. மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று வேலைக்குப் போகிற நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் வீடு வீடாகச் சென்று மாற்றுத்திறனாளிப் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து, சந்தித்துப் பேசுவேன். என் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட, மெல்ல வெளியே வர ஆரம்பித்தார்கள். அதுதான் எனக்குக் கிடைத்த முதல் வெற்றி.

அதன் பிறகுதான் சில நல்லவர்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் துணையுடன் "தியாகம்' பெண்கள் அமைப்பை ஏற்படுத்தினோம். மேலும் அரசின் உதவியும் கிடைத்தது. இதனால் இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தவர்கள், தங்களையும் உயர்த்திக்கொண்டு மற்றவர்களுக்கும் உதவவும் ஆரம்பித்தார்கள். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 50 பெண்களாவது எங்கள் அமைப்பில் இருந்து அவரவர் திறமைக்குத் தக்கபடி ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் 1,000 குடும்பங்களுக்கு மேற்பட்டோரின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

5,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்களைச் சந்தித்து கவுன்சிலிங் கொடுத்திருக்கிறோம். எங்களிடம் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிப் பெண்களில் பலர் கம்ப்யூட்டர் சென்டர்களிலும், டெய்லரிங் வேலை உட்பட 5 வகையான கைத்தொழில்களும் செய்கிறார்கள். சிலர் சொந்தமாகவும் தொழில் செய்து வருகிறார்கள். சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடன் வசதி செய்து கொடுத்து அவர்களது உற்பத்திப் பொருளைச் சந்தைக்கு எடுத்துச் சென்று அவர்கள் கைக்குப் பணம் கிடைக்கும் வரை எங்களுடைய ஆட்கள் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

சமீபகாலமாக மாற்றுத்திறனாளி அல்லாத ஏழைப் பெண்களும் எங்களின் உதவியை நாடி வருவதால் அவர்களுக்கும் கைத்தொழில் கற்றுக் கொடுக்கிறோம். இதுதவிர, நகர்ப்புறங்களில் யாருடைய துணையும் இல்லாமல் தனிநபராக வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளி பெண்களுக்குத் தமிழகத்தில் எந்த ஊரில் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான எல்.ஐ.சி பிரிமீயம் கட்டித் தருவது, கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்வது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, கோயிலுக்கு அழைத்துச் செல்வது, அவர்களின் வீட்டைச் சுத்தம் செய்து தருவது, அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது என நம்பிக்கையான ஆட்களை அனுப்பி மாதத்தில் இரண்டு நாள் அவருடன் தங்கி உதவி செய்து வருகிறோம். இப்படியே இருந்துவிட்டதால் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. என்னைப் போன்றோரைக் கைதூக்கிவிடுவதில் கிடைக்கிற சந்தோஷத்தில், எனக்கு கை இல்லை என்ற வருத்தமும் மறைந்து போனது.

எங்களின் இந்தச் சேவைகளுக்காக 2 முறை மத்திய அரசு விருதுகளும், 8 முறை மாவட்ட அளவிலான விருதுகளும் கிடைத்தன. சமீபத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் "கிராமப்புற பெண்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ்' விதவைகள், ஏழைப்பெண்கள், ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் பேச அழைத்து ஒரு விருதும் கொடுத்துக் கௌரவித்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com