பல் வலியால் தலைவலி வருமா?

""பல் போனால் சொல் போச்சு என்பார்கள், மனித உறுப்புகளில் முக்கியமான பங்கு பற்களுக்கும் உண்டு. அப்படிப்பட்ட பற்களை பாதுகாப்பது குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்'' எனக் கூறுகிறார் பல் மருத்துவர் லிபீ பிரியதர்ஷினி.
பல் வலியால் தலைவலி வருமா?
Updated on
3 min read

""பல் போனால் சொல் போச்சு என்பார்கள், மனித உறுப்புகளில் முக்கியமான பங்கு பற்களுக்கும் உண்டு. அப்படிப்பட்ட பற்களை பாதுகாப்பது குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்'' எனக் கூறுகிறார் பல் மருத்துவர் லிபீ பிரியதர்ஷினி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது மருத்துவமனையில் சந்தித்தோம். மேலும் பற்கள் பாதுகாப்பு குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 
 ""ஒரு குழந்தை பிறந்து ஆறுமாதம் ஆனதும் பல் மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டு காண்பிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பெற்றோர்களிடம் பிரசவம் பார்க்கும் மருத்துவர் ஏற்படுத்த வேண்டும். காரணம் குழந்தைகளுக்கு ஆறுமாதத்திற்கு பிறகுதான் பற்கள் முளைக்கும். அந்த பருவத்தில் குழந்தைகள் பாலைக் குடிப்பதும், உறங்குவதுமாகத்தான் இருப்பார்கள். சில குழந்தைகள் பாலை முழுவதும் விழுங்காமல் வாயில் வைத்துக் கொண்டே உறங்கிவிடும். இதனால் அந்த குழந்தையின் பற்கள் முளைக்கும் போதே சொத்தைப் பல்லாக முளைக்கும். மேலும் ஈறுகளும் பலம் இழந்துவிடும் அபாயம் உண்டு. அதனால் பல் முளைக்கின்ற பருவத்திலேயே அருகில் இருக்கும் பல் மருத்துவரை அணுகி குழந்தையின் பற்களும், ஈறுகளும் எப்படி இருக்கிறது என்பதனை ஆராய்ந்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் ஆரம்பத்திலிருந்தே பற்கள் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல 6 மாதத்திற்கு ஒருமுறை பற்களைச் சோதித்துக் கொள்ள வேண்டும். அப்போது மருத்துவர்கள். குழந்தைக்கு எப்படி பிரஷ் செய்ய வேண்டும், எப்படி பாதுகாப்பாக பற்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் கற்றுத் தருவார்கள்.
 ஏனென்றால் பெரும்பாலான தாய்மார்கள், குழந்தைகளுக்கு ஓரிரண்டு பற்கள்தானே இருக்கிறது என்று கைகளாலேயே தேய்த்துவிடுவார்கள். அது மிகவும் தவறான முறையாகும். ஓரிரண்டு பற்களுக்கும் ஏற்ற வகையில் பிரஷ்கள் இருக்கின்றன. அதனைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யும் போது. பல்லும், ஈறும் பாதுகாப்பாக இருக்கும். மேலும் அடுத்து அடுத்து வரும் பற்களும் பாதுகாப்பாகவே வரும். இதனால் சொத்தை பற்கள் வரும் பயமும் இல்லை.
 பொதுவாக குழந்தைகள் அந்த பருவத்தில் சாக்லேட்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதனால்தான் பற்களில் பூச்சி வருகிறது என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சாக்லெட்டினால் மட்டும் பற்களில் பூச்சி வருவதில்லை. சாக்லெட் விரைவில் கரைந்துவிடும். ஆனால் சிப்ஸ், லேஸ், முறுக்கு போன்றவை நிறைய சாப்பிடும் குழந்தைகளுக்குதான் பற்களில் பூச்சி வருகிறது. இதற்காகத்தான் ஆரம்பத்தில் இருந்தே பற்களை சோதித்துக் கொள்ள வேண்டும் என்கிறோம்.
 அப்படிச் செய்வதனால் இன்னொரு நன்மையும் உண்டு. குழந்தைகள் பல் மருத்துவரை ஆரம்பத்திலிருந்து பார்த்து பழகிவிடுவதால், தங்களுடைய பிரச்னைகளை பெற்றோர்கள் சொல்வதற்கு முன்பு அவர்களே மருத்துவரிடம் சொல்லி விடுகிறார்கள். இதுவே புதிதாக வரும் குழந்தை என்றால் பயத்தில் மருத்துவர் அருகிலேயே வரமாட்டார்கள், அவர்களை விரட்டி பிடித்து அமர வைப்பதற்குள், அவர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்வதற்கே பல மணி நேரம் ஆகிவிடும். பொதுவாக குழந்தைகளுக்கு 6 வயதிற்கு பிறகுதான் பற்கள் நிரந்தரமாகும். இதனால் சொத்தை பல்லை அப்போதே அடைத்து விடுவதனால் பற்கள் 85% பலமாகிவிடும். இப்படி 13 வயது வரை பற்களைக் கவனித்து கொள்ள வைப்பது நல்லது.
 அதுபோல பெரியவர்களும் சரி சொத்தைப் பல் இருக்கிறது என்று தெரிந்தாலும் அதனை ஆரம்பத்திலேயே கவனித்து கொள்வதில்லை. இதனால் சிறிய அளவில் இருக்கும் பாக்டீரியாக்கள் பற்களுக்குள் இருக்கும் சொத்தையையே ஆகாரமாக உண்டு நாளடைவில் பற்களின் நரம்புகள் வரை சென்று பல்லை அழித்துவிடுகிறது. சொத்தை பல் வந்துவிட்டால் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகினால். அவர்கள் பற்களைச் சுத்தம் செய்து அது மேலும் பரவாதபடி அடைத்துவிடுவார்கள்.
 அதுபோன்று சிலர் ஒரு முறை பல்லை சுத்தம் செய்து சொத்தையை அகற்றிவிட்டால் மீண்டும் வராது என்று நினைக்கிறார்கள், அப்படியில்லை. சொத்தையை அகற்றிய பிறகு அதனை 6 மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ சோதித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் சொத்தை பற்கள் சீழ் பிடித்து புரையோடிய பிறகுதான் வலி பொறுக்க முடியாமல் மருத்துவரிடம் செல்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பற்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுவே பற்கள் பலம் இழப்பதற்குள் வந்திருந்தால் பற்களைச் சுத்தம் செய்து இழக்காதபடி செய்துவிடலாம்.
 பற்களில் பிரச்னை ஏற்பட்டால் : அதனால் கண்களில் பாதிப்போ அல்லது தலைவலியோ ஏற்படுமா என்று சிலர் கேட்கிறார்கள். அது தவறு, வாய்க்கும், கண்ணுக்கும், பற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கண்ணுக்கு போகும் நரம்பும், பற்களுக்கு போகும் நரம்பும் அருகில் அருகில்தான் இருக்கும். ஆனால் பல்வலியால் கண்கள் பாதிக்காது. அதுவே பல்லில் அதிகமான இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தால் தலைவலி வரலாம். காரணம் உடம்பில் உள்ள அத்தனை நரம்புகளும் தலையில் இருந்துதான் வருகின்றன. அதுபோல சொத்தைப் பல் ஏற்பட்டு பற்களில் வரும் நரம்புகளில் சீழ் பிடித்து பாதிக்கப் பட்டிருந்தால் அதனால் தலைவலி ஏற்படலாம். அதனைச் சரி செய்தால் தலைவலி போய்விடும்.
 எதிர்பாராதவிதமாக பல் உடைந்துவிட்டால்: அருகில் இருக்கும் பல் மருத்துவமனைக்கு 15 நிமிடத்தில் கொண்டு வர முடியுமானால், அந்தப் பற்களை மீண்டும் பொருத்திவிடலாம். ஆனால் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அதே சமயம், பல் எங்கு விழுந்திருந்தது என்பதும் முக்கியம். ரோட்டில் விழுந்திருந்தால் அதன் அழுக்குகள் பல்லில் ஏறியிருக்கும். மண்ணில் விழுந்திருந்தால் மண் பற்களில் சேர்ந்திருக்கும். அந்த பற்களை நல்ல தண்ணீரில் சுத்தம் செய்து, பாலில் போட்டு உடனடியாக கொண்டுவரலாம், அல்லது அவர்கள் வாயிலேயே உதட்டின் உள்பகுதியில் வைத்தும் கொண்டு வரலாம்.
 வலி இல்லை என்றாலும், பிரச்னை இல்லை என்றாலும் பற்களை 6 மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சோதித்துக் கொள்ளுங்கள்.
 மூன்று மாதங்களுக்கு மேல் ஒரே பிரஷை உபயோகப்படுத்தக் கூடாது. பிரஷ் பூப்போல ஆகிவிட்டால் உபயோகிக்கவே கூடாது. அதுபோல ரொம்ப கடினமான பிரஷை தவிர்த்து , மென்மையான பிரஷ்களையே உபயோகிக்க வேண்டும். முக்கியமான விஷயம் ஜெல் பற்பசைகளை உபயோகிக்கக் கூடாது.
 கடினமான உணவோ அல்லது கொய்யாக்காய் விதைகளைக் கடிக்கும்போதோ சிலருக்கு பல் சிறிது துகள்களாக உடைந்துவிடும். அவர்கள் அதை அலட்சியப்படுத்தினால் அந்த பற்கள் முனை கூராக இருக்கும் ஈறுகளையோ, நரம்புகளையோ பாதிக்கலாம் அதனால் பல்லையே இழக்கும் அபாயம் உண்டு. அதனால் அதனை ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்ள வேண்டும்.
 சிலர் பல் தேய்ந்துவிட்டதாக கூறி வருகிறார்கள். இதற்கு காரணம் மன அழுத்தத்தினால் அவர்களுக்கே தெரியாமல் தூங்கும்போது பற்களை "நற நற'வென்று கடிப்பார்கள் இதனால் பற்கள் தேய்ந்துவிடும் அபாயம் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல மருந்து யோகாசனம்தான். யோகாசனம் செய்வதனால் மன அழுத்தம் குறைகிறது. இதனால் பல் கடிப்பதும் குறைகிறது.
 சிலருக்கு பற்கள் மேலே தூக்கிக் கொண்டு எடுப்பாக முக அழகையே கெடுக்கும். அதற்குக் காரணம். பல் மட்டும் இல்லை. சிலருக்கு எலும்பு தூக்கிக் கொண்டு இருக்கும்; அதனால் பல் தூக்கிக் கொண்டிருக்கும். அதனை சரி செய்வதற்கு ஸ்பெஷல் "பங்ஷனல் கிளிப்' என்று இருக்கிறது. இதனைப் பொருத்தி சிகிச்சை அளித்தால் பல் தூக்கி இருப்பது சரியாகி முக அழகும் கூடும். இதனைப் பயன்படுத்தி எலும்பு தூக்கியிருப்பதையும் சரிசெய்ய முடியும். உள்ளே அமுங்கியிருந்தால் அதனை வளரச் செய்யவும் முடியும். இதனை சரி செய்ய சரியான வயது பெண்களுக்கு 12-15, ஆண்களுக்கு 14 வயதுக்குப் பிறகு சரி செய்யலாம். மற்றபடி இதற்கு வயது வரம்பு ஏதுமில்லை. 40-45 வயதிலும் வந்து சரி செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
 சிலருக்கு அடிக்கடி பற்களில் இரத்தம் வருவது, வாயில் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு காரணம், வயிற்றில் பிரச்னையில் இருந்தால்தான் பேசும்போது வாயில் நாற்றம் வரும். அதே சமயம் ஈறுகளின் இடுக்குகளில் அழுக்கு இருந்தாலும் நிச்சயம் வாயில் துர்நாற்றம் வரும். சொத்தை பல் சீழ் பிடித்த நிலையில் இருந்தால் வாயில் துர்நாற்றம் வரும். மற்றபடி சொத்தை பல் இருப்பதனால் நாற்றம் வராது. சொத்தை பல் சீழ் பிடித்திருந்தால் அதனைச் சரி செய்தால் சரியாகிவிடும். பொதுவாக பல்லை இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். ஏதாவது சாப்பிட்டால் வாய் கொப்பளிக்க வேண்டும். வாய் துர்நாற்றம் வராமலிருக்க, ஸ்பெஷல் மவுத் வாஷ் இருக்கிறது. அதனை உபயோகிக்கலாம். வயிற்றினால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டால், அது வாயுத்தொல்லையாக இருக்கலாம். அதனை பொது மருத்துவரிடம் சோதித்து சரி செய்து கொண்டால் சரியாகிவிடும்'' என்றார்.
 - ஸ்ரீதேவி குமரேசன்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com