
சென்னை கல்லூரி சாலையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகள் சமீபத்தில் தங்களது தலைமுடியை புற்று நோயாளிகளுக்காகத் தானமாக வழங்கியுள்ளனர். இதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் முடி தான நிகழ்ச்சி பிப்ரவரி 4-ஆம் தேதி துவங்கி 14-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு முடிதானம் அளித்தனர். இது
குறித்து இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளரான மாணவி மீரா
கூறுகையில்,
""சிலர் வீணாக வெட்டி விரயம் செய்யும் தலைமுடி புற்று நோயாளிகளுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. ஏனென்றால் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரப்பி கொடுக்கப்படும். இந்த தெரப்பியின்போது முடி உதிர்ந்து விடும். இதனால் சில பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு வெளியில் செல்வதையே தவிர்த்து விடுகின்றனர். அதே சமயம் வசதியுள்ளவர்கள் விக் வைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார்கள். விக்கின் விலை அதிகம் என்பதால் ஏழைகளால் வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே முடியை தானமாக பெற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விக் தயாரித்து அவர்களுக்கு வழங்க எண்ணினோம்.
இந்த எண்ணம் எப்படி வந்தது என்றால், நாங்கள் அவ்வபோது கல்லூரியின் ரோட்டரி கிளப் மூலம் எங்களால் முடிந்த வகையில் ஏதாவது ஓர் சேவையை மக்களுக்கு செய்து கொண்டே இருப்போம். அந்த வகையில் கடந்த ஆண்டு ரோட்டரி கிளப் மாணவத் தலைவி ரெனி சாரா ஒரு வெப் சைட்டில் வெளிநாடு ஒன்றில் புற்று நோயாளிகளுக்காக தலைமுடி தானம் செய்தது குறித்த செய்தியை பார்த்திருக்கிறார். அது ஆர்வத்தைத் தூண்ட, எங்கள் கல்லூரி முதல்வரிடம் அந்தச் செய்தியைக் கொண்டு சென்றார். கல்லூரி முதல்வரும் இதற்கு ஆதரவு கொடுத்தார்.
ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் நமது தென்னிந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைமுடி முக்கியமான ஒன்று. அதிலும் கல்லூரிப் பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். தன் அழகிற்கே ஆதாரம் தலைமுடிதான் என்று நினைப்பவர்கள். அவர்களிடம் தலைமுடி தானம் என்றால் எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள் என்று நினைத்தோம். அதற்காக கல்லூரிக்குள்ளே ஒரு சர்வே எடுத்தோம். அதில் ஆரம்பத்தில் 25 பேர்தான் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனால் இந்த தானம் எதற்காக என்று மாணவிகளிடம் விளக்கினோம். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக 200 பேருக்கு மேல் தங்களது முடியை அளிக்க முன் வந்தனர். அதில் ஐந்து பேர் தங்களது மொத்த முடியையுமே மொட்டை அடித்துக் கொள்ள முன்வந்தனர். அப்போதுதான் எங்களுக்கு நம்பிக்கை அதிகம் ஏற்பட்டது. இதில் சிறப்பு என்னவென்றால் நாங்கள் யாரையும் முடி தானம் செய்ய சொல்லி வற்புறுத்தவில்லை. அவர்களாகவேதான் விரும்பிவந்து முடியை கொடுத்தார்கள். இதற்கிடையில் மற்ற கல்லூரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். எங்கள் அழைப்பை ஏற்று மற்ற கல்லூரி மாணவிகளும் வந்திருந்தனர். அப்போது எங்களுக்கு தேர்வு நேரம் என்பதால் அந்த நேரத்திற்கு வர முடியாதவர்கள், அருகில் உள்ள கீரின் டிரென்டிற்கு சென்றும் செலுத்தினார்கள்.
நாங்களே ஹேர் கட் செய்தால் அது சரியாக இருக்காது என்பதால் சில பெரிய ஹேர் சலூன்களை நாடினோம். அதில் எங்களுக்கு உடனடியாக பதில் கொடுத்து நாங்கள் உங்கள் உதவிக்கு வருகிறோம் என்று உதவியவர்கள் "கீரின் டிரென்ட்' நிறுவனம்.
அதேபோன்று "விக்' செய்வதற்கு எங்களுக்கு உதவுபவர்கள் "ராஜ் ஹேர் இன்டர்நேஷனல்'. நாங்கள் சேகரிக்கும் தலை முடியை கொண்டு ஒரு விக்
செய்யவேண்டும் என்றால் குறைந்தது 14,000 ரூபாயிலிருந்து 20,000 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும். ஆனால் அவர்கள் எந்தவித லாபமும் வைக்காமல் 4500 ரூபாய்க்கு ஒரு விக் செய்து தருகிறார்கள். மேலும் 20 விக் அவர்களுடைய சொந்த செலவில் செய்து தருகிறார்கள். இந்த முடிதானத்தின் மூலம் மிகப் பெரிய மன திருப்தி எங்கள் அனைவருக்கும் கிடைத்தது'' என்றார்.
இது குறித்து கிரீன் டிரென்ட் தீபக் (இஞஞ) கூறுகையில்:
""கடந்த ஆண்டு பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் (ரஇஇ) இருந்து ரோட்டரி கிளப் டீமை சேர்ந்த சில மாணவிகள் எங்களிடம் வந்து ""புற்றுநோய் காரணமாக தலைமுடியை இழந்தவர்களுக்கு "விக்' தயாரிப்பதற்காக எங்கள் கல்லூரி மாணவிகள் சிலர் தலைமுடி தானம் செய்யவிருக்கிறோம். நீங்கள் எங்களுடன் இணைந்து எங்கள் மாணவிகளுக்கு ஹேர் கட்டிங் செய்து தர முடியுமா?'' என்று கேட்டார்கள். இது எங்களுக்கு ரொம்ப நல்ல விஷயமாகப் பட்டது. புற்றுநோயாளிகளுக்கான தானத்தில் எங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதே சமயத்தில் இது கல்லூரி மாணவிகளுடன் நின்றுவிடாமல் பொதுமக்களிடமும் எடுத்துச் செல்ல விரும்பினோம். அதனால் மாணவிகளிடம் பொது மக்களிடையே எடுத்துச் செல்ல விரும்புகிறோம். அனுமதிப்பீர்களா? என்றோம். மகிழ்ச்சியுடன் அனுமதித்தார்கள். அப்படி உருவானதுதான் இந்த தலைமுடி தானம் நிகழ்ச்சி.
இதை உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4-ஆம் தேதி துவங்க எண்ணினோம். அதற்கு முன்பு கல்லூரி மாணவிகள் எத்தனை பேருக்கு இதில் ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணினோம். அப்போதுதான் எத்தனை ஹேர் ஸ்டைலிஸ்ட்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை கணக்கிட்டு பயிற்சி அளிக்க முடியும். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே கல்லூரிக்குச் சென்று மாணவிகள் இடையே ஒரு கலந்தாய்வு நடத்தினோம். இதில் 100 முதல் 150 மாணவிகள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் தலைமுடியை தானம் செய்தனர். பெண்களுக்கு முடி என்பது முக்கியமான விஷயம், அதை தானம் செய்வதோ மிகப் பெரிய விஷயம். இதில் அவர்களுடைய ஹேர் ஸ்டைல் பாதிக்கப்படாத வகையில் குறிப்பிட்ட அளவினை மட்டும் எப்படி ஹேர்கட் செய்வது என்பதை சோதனை செய்தோம். இதில் 1 இன்ச் அடர்த்தியும், 8 இன்ச் நீளமும் முடி இருந்தால்தான் விக் செய்ய முடியும் என்பதை அறிந்தோம். தொடர்ந்து 180 பேருக்கு முடி எடுக்கும் பயிற்சி அளித்தோம்.
அதன் பிறகு பொது மக்களுக்கான அறிவிப்பை வெளியிட்டோம். கிட்டதட்ட 3000 பேர் தங்கள் முடியை தானம் செய்தனர். 15 பேருக்கு மேல் முழுவதுமாக முடியை கொடுத்து மொட்டை அடித்துக் கொண்டனர். இதனால் 80 கிலோ வரை தலைமுடி கிடைத்தது. இதைவைத்து 300 விக்குகள் தயார் செய்தோம்.
இந்த ஆண்டும் பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் தினத்தன்று முடிதானம் நிகழ்ச்சியை துவங்கினோம். இந்த ஆண்டு 2500 ஹேர் ஸ்டைலிஸ்ட்டுகளை தயார் செய்தோம். காரணம், இந்த ஆண்டு கோயம்புத்தூர், திருச்சி,சேலம், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களூர் என இந்தியா முழுவதிலும் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து கிரீன் டிரென்டிலும் இந்த சேவையை அறிமுகம் செய்திருந்தோம். பத்துநாட்கள் முடிதானம் நடைபெற்றது. இதை அறிந்து மற்ற கல்லூரிகளில் இருந்தும் எங்களுக்கு அழைப்பு வந்தன. ஆனால் எங்களால் எல்லா கல்லூரிகளுக்கும் செல்வதற்கு இயலவில்லை. அதனால் விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள கிரீன் டிரென்டை அணுகி அவர்களும் தங்கள் முடியை தானம் செய்திருக்கிறார்கள்'' என்றார்.
-ஸ்ரீதேவி குமரேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.