திரைக்கொண்டாட்டம்

மலையாளத் தயாரிப்பாளர் அணில் கொட்டாரக்கரா தமிழில் தயாரித்து வரும் படம் "இரண்டு மனம் வேண்டும்.' இப்படத்தின் மூலம் சசி சுரேந்திரன் கதாநாயகனாக
திரைக்கொண்டாட்டம்
Published on
Updated on
3 min read

மலையாளத் தயாரிப்பாளர் அணில் கொட்டாரக்கரா தமிழில் தயாரித்து வரும் படம் "இரண்டு மனம் வேண்டும்.' இப்படத்தின் மூலம் சசி சுரேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சிலங்கா நடிக்கிறார். தமிழ் மற்றும் மலையாள உலகைச் சேர்ந்த நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முகமது அலியின் இசையில் வி.கே.பிரதீப் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் பிரதீப் சுந்தர். 2004-ஆம் ஆண்டில் தென்பகுதி கடற்கரையோரத்தில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக் களம் உருவாகியுள்ளது. தென் தமிழகத்தின் கடலோரக் கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு எளிய மனிதர்களுக்கு பின்னாலும் பரந்து விரிந்திருக்கும் சில கதைகள் இருக்கின்றன. அப்படியொரு கதைதான் இது.

பத்திரிகைகளின் மூலம் எல்லோரும் அறிந்த சம்பவங்களின் பின்னால் சின்ன கற்பனை சேர்க்கப்பட்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் டிரீத் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம் "முத்துக்குமார் வான்டட்.' சரண், நஷிரா, ரோபோ சங்கர், நிழல்கள் ரவி நடிக்கின்றனர். 

பத்மநாபன் கதை எழுதி இயக்குகிறார். சிறுமி ஆனந்திக்கு சிறுவயது முதல் முத்துக்குமார் என்ற பெயரில் பல பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

முத்துக்குமார் யார் என்று தெரியாத போதிலும் மகிழ்ச்சியுடன் அந்த பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்கிறாள். முத்துக்குமாரை சந்திக்க பல முறை முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் ஆனந்திக்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு பரிசுப் பெட்டகத்தை அனுப்பிய முத்துக்குமார் அதனுடைய சாவி தன்னிடம் இருப்பதாகவும், தான் மலேசியா செல்லவிருப்பதால் ஏர்போர்ட் வந்து சாவியைப் பெற்றுக்கொள்ளும்படியும் ஒரு கடிதத்தையும் இணைத்துள்ளார். அப்படி ஏர்போர்ட் வரத் தவறினால் மலேசியா வந்து பெற்றுக் கொள்ளவும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனந்தி ஏர்போர்ட் செல்கிறாள். ஆனால் அதற்கு முன்பே முத்துக்குமார் மலேசியா சென்று விடுகிறான். திருமணத்திற்கு ஐந்து நாட்கள் உள்ள நிலையில் முத்துக்குமாரைத் தேடி மலேசியா சென்ற ஆனந்திக்கு ஏற்பட்ட சுவையான சம்பவங்களே இப்படத்தின் கதை.

ஆர் எஸ் ஜி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "வீரக்கலை.' கோபிகாந்தி, பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழகத்தின் பழம் பெரும் வீரக் கலைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை ராஜ் இயக்குகிறார். படம் குறித்து பேசுகையில்... "" வெற்றி, தோல்வி என்றெல்லாம் எதுவும் இல்லை. சந்தோஷம், துயரம் என்றும் எதுவும் இல்லை. நமது தோல்வியை வெற்றியாகவும், துயரத்தைச் சந்தோஷமாகவும் வரும் தலைமுறைக்கு கொடுப்பதுதான் இந்த வாழ்வின் அர்த்தம்.

அது புரியாமல் போனதுதான் பிரச்னை. தனக்காக தனக்காக என்று வாழ்ந்தே பயணமானவர்கள் இங்கே நிலைத்து நிற்பதில்லை. ஒரு சிலர்தான் பிறருக்காகவும் யோசிக்கிறார்கள். அப்படியொரு கதையை முன்னெடுக்கிற படம்தான் இது. நம் தமிழ் பிள்ளைகளுக்கு இயற்கையையும், மண்ணையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு ரசனையையும் அன்பையும் ஊட்டுவதில்தான் எல்லாருக்குமான வாழ்க்கை நிறைந்திருக்கிறது. அப்படியொரு அர்த்தமுள்ள விவாதங்களை முன் வைக்கிற படமாக இதன் களம் அமைந்திருக்கிறது.

டோலிவுட்டில் "நேனொகடய்னே' என்ற படத்தில் ஹீரோயினைத் தரக் குறைவாக காட்டும் வகையில் போஸ்டர் வெளியிட்டதாக மகேஷ்பாபு மீது புகார் கூறியிருந்தார் சமந்தா. இதனைக் கண்டிக்கும் விதமாக மகேஷ்பாபுவின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவருக்குமிடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டனர். பின்னர் ஒரு விழாவில் இருவரும் சந்தித்து அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டனர். இதனால் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக பேசப்பட்டது. இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதை ஏற்றுக் கொள்ளாத மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சமந்தாவுடன் இனி நடிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் மகேஷ்பாபு ரசிகர்களை சமாதானப்படுத்த முயன்று இருக்கிறார் சமந்தா. மகேஷ்பாபு நடித்துள்ள "ஸ்ரீமாந்துடு' பட டிரெய்லரைப் பார்த்து கருத்து வெளியிட்டு இருக்கிறார். ""மகேஷ்பாபு அழகானவர். அனைவருக்கும் பிடித்தவர். அவரின் அடுத்தடுத்த முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். மகேஷ்பாபுவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த சமந்தா தற்போது வேறு வழியில்லாமல் இறங்கி வந்துள்ளார் என மகேஷ்பாபு ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com