
மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகில் எண்பதுகளில் தனது நடிப்பாலும், அழகாலும், அகலக் கண்களாலும் நம்பர் ஒன் நடிகையாகக் கொடி கட்டிப் பறந்த ஸ்ரீவித்யா, முதுகுத் தண்டில் புற்று நோய் வந்து 2006 இல் திருவனந்தபுரத்தில் சொந்த வீட்டில் இறந்து போனார். என்றாலும், கேரளப் பத்திரிகைகளில் இன்றைக்கும் ஸ்ரீவித்யா பரபரப்பு செய்திதான்.
இறப்பதற்கு முன்பு ஸ்ரீவித்யா எழுதி வைத்த உயில்தான் இந்த பரபரப்புகளுக்குக் காரணம்.
இறக்கப் போகிறோம் என்று உறுதியானதும், தனது சொத்துக்களை விற்று ஓர் அறக்கட்டளை தொடங்கி, நடனம், இசை பயில விரும்பும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியருக்கு உதவ, நிதி உதவிகள் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி, தனது நண்பராக இருந்த நடிகரும், கேரள முன்னாள் அமைச்சரும், கேரள சட்டசபை உறுப்பினருமான கணேஷ்குமாரை பாதுகாவலராகவும் நியமித்தார் . அதே உயிலில், தனது சகோதரரின் பிள்ளைகள் இருவருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் தரப்படவேண்டும் என்றும் ஸ்ரீ வித்யா எழுதி வைத்தார்.
இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால் , ஸ்ரீவித்யா எழுதிய உயிலின்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான். ஸ்ரீவித்யாவின் சகோதரரின் மகன்கள் இருவருக்கு தரப்பட வேண்டிய 10 லட்சமும் தரப்படவில்லை. நடிகை ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை தவ
றாகப் பயன்படுத்துவதாக ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கர் ராமன், தனது புகார் மனுவை கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலாவிடமும் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை கணேஷ்குமார் முறைகேடாகப் பயன்படுத்துகிறார் ... அவரிடம் இருந்து சொத்துகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட கேரள உள்துறை அமைச்சர் சென்னித்தலா, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
""சென்னை மகாலிங்கபுரத்தில் இருந்த தனக்குச் சொந்தமான வீட்டினை பல கோடிகளுக்கு விற்று, அந்த பணத்தில் பல அசையா சொத்துகளை கேரளத்தில் ஸ்ரீவித்யா வாங்கியுள்ளார். எங்கே என்ன வாங்கினார் என்று ஒரு விவரமும் எங்களுக்குத் தெரியாது. வித்யாவிற்கு சென்னையில் 1250 சதுர அடியில் அபார்ட்மெண்ட் ஒன்று இருந்தது. இப்போது அதில் யாரோ குடியிருக்கிறார்கள். திருவனந்தபுரத்திலும் வித்யாவிற்கு வீடு இருந்தது'' என்கிறார் சங்கர் ராமன்.
உயில்படி ஸ்ரீவித்யாவின் சொத்து விவரம் இதுதான்: திருவனந்தபுரத்தில் 8 சென்ட் நிலமும் வீடும், சென்னையில் ஓர் அபார்ட்மெண்ட், வங்கிகளில் இருக்கும் பதினைந்தரை லட்சம் ரூபாய், 580 கிராம் தங்க ஆபரணங்கள் ஒன்றரை கிலோ வெள்ளி பாத்திரங்கள், ஒரு சான்ட்ரோ கார், அஞ்சலக சேமிப்பு மூன்று லட்சம் ..
இந்தச் சொத்து தொடர்பான வழக்கு ஒன்று கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கணேஷ் குமார், ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை கேரள மாநில திரைப்பட அகாடமிக்கு மாற்ற கேரள அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், கேரள அரசின் சார்பில், ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ள முடியாது. ஸ்ரீவித்யாவின் நெருங்கிய உறவினருக்குத்தான் தரப்படவேண்டும் என்று நீதிமன்றத்தின் முன் சொல்லப்பட்டுள்ளது. கணேஷ் குமாரோ, ""ஸ்ரீவித்யா எழுதிய உயிலின்படி, அவரது சொத்துக்களின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளேன். அவ்வளவுதான்'' என்கிறார் .
கணேஷ் குமாருக்கும் பரபரப்பிற்கும் அப்படி ஒரு நெருக்கம். தனது மனைவியுடன், தந்தையுடன் பல விஷயங்களில் இவர் செய்த தகராறுகள் பிரசித்தம். அவ்வப்போது கேரளத்து மக்களுக்கு நல்ல பொழுது போக்காகவும் அமைந்தது. அரசியலிலும் பல சலசலப்புகளை உருவாக்கியவர் உருவாக்கிக் கொண்டு இருப்பவர். நல்ல பண பலம் உள்ளவர். சட்டசபை தேர்தலில், ஒரே தொகுதியில் மூன்றுமுறை தொடர்ந்து வெற்றி பெற்றவர். இவரது வீட்டில் யானைகள் பல வளர்க்கப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் என்ன ஆகும்? யாருக்குப் போய்ச் சேரும்? என்பதுதான் கேரளத்தின் இன்றைய பரபரப்புச் செய்திகளில் முன்னணியில் நிற்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.