மலையேற்றப் பயிற்சி பெறும் மாணவிகள்!

வளரிளம் பெண்களுக்கு இளம் வயதிலேயே மன தைரியம் அளிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் காலமிது. படிக்கும் கல்வி நிறுவனமாக இருந்தாலும், பணி புரியும் இடமாக இருந்தாலும் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான உத்திகளையும் கற்றுத்தரும் காலமாகும்.
மலையேற்றப் பயிற்சி பெறும் மாணவிகள்!
Updated on
2 min read

வளரிளம் பெண்களுக்கு இளம் வயதிலேயே மன தைரியம் அளிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் காலமிது. படிக்கும் கல்வி நிறுவனமாக இருந்தாலும், பணி புரியும் இடமாக இருந்தாலும் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான உத்திகளையும் கற்றுத்தரும் காலமாகும்.

இச்சூழலில் நாட்டிலேயே நீலகிரி மாவட்டத்தில் மட்டும்தான் தேசிய மாணவர் படையிலுள்ள மாணவிகளுக்கு மலையேற்றப் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. என்சிசி அமைப்பின் சார்பில் கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்படும் இந்த பயிற்சியில் தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவிகளோடு வட இந்திய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் என ஆண்டுக்கு சுமார் 15 மாநிலங்களைச் சேர்ந்த 1,000 மாணவியருக்கு இந்த மலையேற்றப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் மே மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கு பகுதியை மையமாகக் கொண்டு மாவட்டத்திலுள்ள முக்கிய இடங்களையும் பார்வையிடும் வகையில் இந்த மலையேற்றப் பயிற்சி முகாம் அமைக்கப்படுகிறது. 1,000 மாணவியரும் 8 குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழுவும் தலா 8 நாட்களுக்கு சுமார் 100 கி.மீ. தூரத்தை கடக்கின்றனர். மே மாதம் கோடைக்காலம் என்பதால் அதிக குளிரின்றியும், மழையின்றியும் இருக்கும் சீசன் கால பருவநிலை இம்மாணவிகளை மேலும் உற்சாகப்படுத்துவதாக அமைகிறது.

இந்த மலையேற்றப் பயிற்சி முகாமின்போது அறிவியல் வளர்ச்சி தொடர்பாக உதகையிலுள்ள வானியல் ஆராய்ச்சி மையம், பழங்குடியினர் கலாசாரம் தொடர்பாக பழங்குடியினர் ஆய்வு மையம், சுற்றுலா தொடர்பாக உதகையிலுள்ள பிரபல சுற்றுலா மையங்கள், ராணுவத்தின் முக்கியத்துவம் தொடர்பாக வெலிங்டனிலுள்ள ராணுவ பயிற்சி மையம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அவை குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதோடு, நீலகிரி மலை ரயில் பயணத்தையும் அனுபவிக்கின்றனர்.

இந்த மலையேற்றப் பயிற்சி முகாம் தொடர்பாக உதகையிலுள்ள புனித சூசையப்பர் மேனிலைப்பள்ளி என்சிசி அலுவலரும், தேசிய மாணவர் படையின் நீலகிரி மலையேற்றப் பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளருமான ஹியூபர்ட் நம்மிடம் தெரிவித்த தகவல்களாவன:

""தேசிய மாணவர் படையின் சார்பில் ஆண்டுதோறும் மாணவிகளுக்காகவே நீலகிரியில் பிரத்யேகமாக மலையேற்றப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டில் 32வது ஆண்டு பயிற்சி முகாம் நடைபெற்று முடிந்துள்ளது. மன வலிமை, பகிர்ந்து கொள்ளுதல், பிற மாநிலங்களின் கலாசாரத்தை அறிந்து கொள்ளுதல், நட்பு, பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடிய திறன், உதவும் மனப்பான்மை, தேசிய ஒருமைப்பாடு, ஏழை-பணக்காரன் பாகுபாடின்மை உள்ளிட்டவற்றை இம்மாணவிகள் அனுபவப்பூர்வமாகக்

கற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்கு ஒரே மாதிரியான உணவே வழங்கப்படும். அத்துடன் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்துக் கொள்ளும் வகையில் குறைந்த அளவு தண்ணீரே தரப்படும். இதுவும் அவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகும்.

தொடக்க காலத்தில் மேட்டுப்பாளையத்தில் கல்லார் பகுதியிலிருந்து தொடங்கி மரப்பாலம், மஞ்சக்கொம்பை, எடக்காடு, மஞ்சூர், நஞ்சநாடு ஆகிய கிராமங்கள் வழியாக உதகைக்கு நடத்தப்பட்டு வந்த இந்த மலையேற்றப் பயிற்சி, இப்பாதையில் வனவிலங்குகளின் பிரச்னை காரணமாக தற்போது குறிப்பிட்ட நீலகிரி மலைப் பாதைகள் வழியாக நடத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இப்பயிற்சி முகாமில் பெண் ஆசிரியைகளே உடன் செல்வர். பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் ஆயுதத்துடன் உடனிருப்பர். அதிகாலையில் தொடங்கி மாலை வரை நடைபெறும் இந்த மலையேற்றத்தின் முடிவில் அவர்களுக்கான கேம்ப் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்குப் பரிசும் வழங்கப்படும். இது மாணவிகளை தினந்தோறும் உற்சாகப்படுத்தும் நடவடிக்கையாகும்.

இதைத் தவிர இம்முகாமில் பங்கேற்கும் மாணவிகளுக்கு உயர் கல்வியிலும், அகில இந்திய அளவிலான வேலைவாய்ப்புகளிலும் 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் ராணுவத்தில் சேர விரும்புவர்களுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது என்பதும் சிறப்பம்சம் என்பதால் ஆண்டுதோறும் இந்த மலையேற்றப் பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கும் மாணவியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது'' என்று தெரிவித்தார்.

நடப்பாண்டில் நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்ற கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 3வது ஆண்டு படிக்கும் மாணவி ஜெனிபர் கெஸியா தனது அனுபவத்தைக் குறித்து கூறுகையில், ""நீலகிரியிலேயே நான் பிறந்து வளர்ந்திருந்தாலும், இந்த முகாமில் பங்கேற்று நீலகிரியின் இயற்கை அழகை ரசித்தது எனது வாழ்வில் மறக்க முடியாத அம்சம்.

முன்பின் பார்த்தோ, பழக்கப்படாமலோ உள்ளவர்களுடன் 8 நாட்கள் ஒன்றாக தங்கியிருந்து அவர்களது கலாசாரத்தையும், அன்பையும் பகிர்ந்து கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பு ஒரு புது அனுபவம். தன்னம்பிக்கையுடனும், வாழ்க்கையில் போராடுவதற்கும் உரிய மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதற்கு இத்தகைய பயிற்சி முகாம்கள் அவசியம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com