வந்துவிட்டது ஆர்கானிக் புடவைகள்!

எந்தவிதமான ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுகிற ஆர்கானிக் உணவுப் பொருட்களின் பக்கம் இப்போது காற்று வீசுகிறது.
வந்துவிட்டது ஆர்கானிக் புடவைகள்!
Updated on
2 min read

எந்தவிதமான ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுகிற ஆர்கானிக் உணவுப் பொருட்களின் பக்கம் இப்போது காற்று வீசுகிறது. பெரிய நகரங்களில் இப்போது ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கும் கடைகள் அதிகமாக முளைத்துவிட்டன. உணவு மட்டுமா? இப்போது ஆர்கானிக் உடைகளும் வந்துவிட்டன. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ ஆப்டெக்ஸ்) இப்போது, ஆர்கானிக் புடவைகளை அறிமுகம் செய்திருக்கிறது.

அதைப் பற்றித் தெரிந்து கொள்ள கோ ஆப்டெக்ஸின் நிர்வாக இயக்குநர் டி.என். வெங்கடேஷை, சென்னை எழும்பூரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்:

 "" கோ ஆப் டெக்ஸ் என்றதுமே வெறும் துண்டும், ஜமுக்காளமும்தான் என்ற நினைப்பு நீண்டகாலமாக இருந்து வந்தது. அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகவே பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு  வருகிறோம்.

 கல்லூரி மாணவிகள் விரும்பக் கூடிய குர்தீஸ், பெண்களுக்கான சல்வார் கமீஸ், துப்பட்டா, சுடிதார் போன்ற எல்லாவற்றையும் நாங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இப்போது ஆர்கானிக் புடவைகள்.

 இப்போது எங்கு பார்த்தாலும் ஆர்கானிக் பொருட்களின் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது. சில தனியார் நிறுவனங்கள்தாம் ஆர்கானிக் துணிகளை விற்பனை செய்து வந்தன. நாமும் ஆர்கானிக் புடவைகளைத் தயாரித்தால் என்ன? என்ற எண்ணம் வந்தது. அப்படி உருவானதுதான் இந்த ஆர்கானிக் புடவைகள்.

 பொள்ளாச்சி பகுதியில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகள் எந்த விவசாயமும் செய்யப்படாத நிலங்களில் (அப்போதுதான் ஏற்கெனவே ரசாயன உரங்களைப் பயன்படுத்தியிருந்தால் அந்தப் பாதிப்பு இருக்காது) எந்த ரசாயன உரமும் போடாமல், பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களான சாணம், இலை, தழைகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பஞ்சை வாங்குகிறோம்.

 புடவைகளுக்கான வண்ணங்களை மஞ்சள், கரிசலாங்கண்ணி, கருவேலம்பட்டை, செவ்வாழைத் தோல், கடுக்காய்த்தூள், சாமந்திப்பூ போன்ற பல இயற்கைப் பொருட்களைக் கொண்டு நூலுக்குச் சாயம் ஏற்றுகிறோம்.

 அதற்குப் பிறகு, வதம்பச்சேரி, நெகமம் பகுதியில் உள்ள கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் உள்ள நெசவாளர்களிடம் புடவைகளை நெய்யக் கொடுக்கிறோம்.

 புடவை வாங்குபவர்களுக்கு அந்தப் புடவையின் வண்ணம் எந்தப் பூவால், இலையால், இயற்கைப் பொருளால் செய்யப்பட்டது என்ற விவரத்தைத் தருகிறோம். அதுமட்டுமல்ல, புடவையை நெய்த நெசவாளர் பற்றிய விவரங்களைப் புகைப்படத்துடன் தருகிறோம்.

 இந்த ஆர்கானிக் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவற்றை நடுத்தர வர்க்கத்தினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி வாங்குகின்றனர். புடவையின் விலை ரூ.3500 முதல்  ரூ.4000 வரை.

 இப்போது 7 வண்ணங்களில் ஆர்கானிக் புடவைகள் உள்ளன. வருங்காலத்தில் அழுத்தமான வண்ணங்களில் புடவைகளைத் தயாரித்தளிக்கும் திட்டம் உள்ளது.

 ஆர்கானிக் புடவைகளைப் பராமரிப்பது சிரமம் என்று நினைப்பார்கள். ஆனால் பராமரிப்பது எளிது. ஒன்றுமட்டும் முக்கியம். துவைத்த ஆர்கானிக் புடவையை சூரிய வெளிச்சம் நேரடியாகப்படும்படி காய வைக்கக் கூடாது. நிழலில் உலர வைக்க வேண்டும்.

 பெண்களுக்கு ஆர்கானிக் புடவைகள் என்றால், ஆண்களுக்குப் பட்டு ரெடிமேட் சட்டைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். பலவிதமான கவர்ச்சிகரமான வண்ணங்களில் உள்ள இந்தப் பட்டுச் சட்டைகளின் விலை ரூ.1800 - ரூ.2000 வரை உள்ளது.

 இந்தப் பட்டுச் சட்டைகளை வாங்குபவர்கள், சட்டையின் வண்ணத்துக்குப் பொருத்தமான கரை வேட்டிகளையும் எங்களிடம் வாங்கிக் கொள்ளலாம். நேரில் வந்து வாங்க முடியாதவர்கள் ஆன் லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்''  என்றார்.

 - ந.ஜீவா
 படங்கள்: அண்ணாமலை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com