தெரிந்த பெயர், தெரியாத விவரம்: தரங்கம்பாடி- டேனிஷ் கோட்டை

கோட்டையை ஒட்டிய தரைத்தளம் கிடங்காகவும், படையினரின் ஓய்வறையாகவும் பயன்படுத்தப்பட்டது. அடுத்த தளம் ஆளுநர் மற்றும் மத குருக்கள் போன்றோர் வசிக்குமிடமாகவும் இருந்தது.
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: தரங்கம்பாடி- டேனிஷ் கோட்டை
Published on
Updated on
2 min read

* ஐரோப்பிய காலனிய அரசுகளை நிறுவிய  ஆங்கிலேயர்கள் , பிரெஞ்சுக்காரர்கள் , டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர் போன்றோரால் கி.பி. 17 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவுடன் வணிகம் செய்ய கடல்சார் வர்த்தக நிறுவனங்கள் நிறுவப்பட்டன. டேனிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1616 -இல் நிறுவப்பட்டு, அட்மிரல் ஓவ்கிட் (1594-1660) என்பவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அவர் வந்து தங்கிய இடம் தரங்கம்பாடி (நாகை மாவட்டம்).  தரங்கம்பாடி சென்னையில் இருந்து 283 கி.மீ. தொலைவில் உள்ளது.

* அட்மிரல் ஓவ்கிட், தஞ்சை அரசரான ரகுநாத நாயக்கருடன் (1600-34) 1620 -ஆம் ஆண்டில் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி மொத்தம் 8 கி.மீ (5.0 மைல்) க்கு- 4 கி.மீ (2.5 மைல்) பரப்பளவு இடத்தை ஆண்டு வாடகை ரூ. 3,111 என்ற ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டைக் கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதில் டேனிஷ் அரசு அனுமதி பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது. தற்போது, இந்தக் கையெழுத்துப் பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரசு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

* டேனிஷ் கோட்டை என அழைக்கப்படும் டேனியக் கோட்டை (Fort Dansborg)  தரங்கம்பாடியில்,  1620-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.  டேனிஷ் கோட்டைகளிலேயே இரண்டாவது பெரிய கோட்டை இதுவே ஆகும். முதல் கோட்டை ஷேக்ஸ்பியருக்கு "ஹேம்லட்' எழுத உத்வேகம் அளித்த "க்ரோன்போர்க்' கோட்டையாகும்.

* கோட்டையை ஒட்டிய தரைத்தளம் கிடங்காகவும், படையினரின் ஓய்வறையாகவும் பயன்படுத்தப்பட்டது. அடுத்த தளம் ஆளுநர் மற்றும் மத குருக்கள் போன்றோர் வசிக்குமிடமாகவும் இருந்தது.

* கோட்டை கட்டும் முன்னர் இப்பகுதி ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. கோட்டை கட்டியபிறகு இங்கிருந்து பருத்தி, ஜவுளி போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முதன்மை வணிகத் துறைமுகம் ஆனது. 1845-இல் இந்த நகரமும், கோட்டையும் ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டது. இதன்பிறகு தரங்கம்பாடியும் அதன் கோட்டையும் தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தது.

* இக்கோட்டை டேனிஷ் பாணியில், பெரிய அரங்குகள், கட்டமைப்புகள், உயர் கூரைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய கோட்டையின் நீளம் 60 மீ. (200 அடி) மற்றும் அகலம் சுமார் 11 மீ. (36 அடி).  கோட்டையின் மையத்தில் தேவாலய அறை உள்ளது. இது தற்போது அருங்காட்சியகமாக செயல்படுகிறது. வலப்பக்க மூலையில் உள்ள அறை வணிக இயக்குநரின் வசிப்பிடமாக இருந்தது. தற்காலத்தில் இது கிடங்காக உள்ளது.

* கோட்டையின் கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டவை. கோட்டையின் முதன்மை வாயில் வடக்கு நோக்கி உள்ளது. கிழக்கிலும் ஒரு வாயில் கூடுதலாக உள்ளது. கோட்டையின் இரண்டாவது மாடியில் பாதுகாவலர் அறைகளின் தொகுதிகள் உள்ளன. கோட்டையின் மையப் பகுதியில் நான்கு ஒட்டகத் திமில் வடிவ குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத் தூண்தான் குவிமாடங்களின் முழு எடையையும் தாங்குகிறது.

* இந்தப் பகுதியின் சில குறிப்பிடத்தக்க கட்டடங்கள்: 13 -ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாசிலாமணிநாதர் கோயில், 1701-இல் கட்டப்பட்ட சீயோன் தேவாலயம், 1718 -இல் கட்டப்பட்ட புதிய ஜெருசலேம் தேவாலயம், 1792- இல் கட்டப்பட்ட நகர நுழைவாயில், 1784 -இல் கட்டப்பட்ட ஆளுநர் பங்களா, கேட் ஹவுஸ், முகில் ட்ரூப் மாளிகை, போர்ட் மாஸ்டர் பங்களா, ரிகிலிங் மாளிகை போன்றவை ஆகும்.

* கோட்டையில் உள்ள குடியிருப்புகளின் வாயில் மற்றும் முக்கிய தெருக்களுடன் மரக் கதவுகள் கொண்ட ஒரு சிறிய ஐரோப்பிய நகரம் போன்ற தோற்றத்தில் உள்ளது.

* இந்திய  விடுதலைக்குப் பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978 -ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன்
பிறகு  தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. 

* 2001 -இல் தொல்லியல் துறை - டேனிஷ் மன்னர் குடும்பத்தின் உதவியுடன் "தரங்கம்பாடி சங்கம்' அமைக்கப்பட்டது. இதன் மூலம் கோட்டையின் தென் இறுதியில் உள்ள பகுதி அதன் பழைமைத் தன்மை மாறாமல் மறுகட்டுமானம் செய்யப்பட்டது.  அடுத்து 2011 -இல் தமிழக சுற்றுலாத் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டது. 

* இங்குள்ள அருங்காட்சியகத்தில், டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் தமிழ்ப் பத்திரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  

* இக்கோட்டை மயிலாடுதுறையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
 -கடம்பூர் விஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com