தெரிந்த பெயர், தெரியாத விவரம்: தஞ்சை பெரிய கோயில்

தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளாக தமிழரின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில் (பெருவுடையார் கோயில்). 
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: தஞ்சை பெரிய கோயில்
Published on
Updated on
3 min read

* தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளாக தமிழரின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில் (பெருவுடையார் கோயில்). 

* 1004 -ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி, 1010 -ஆம் ஆண்டில் முடிவடைந்தது. சோழ மண்டலத்தின் தலைநகராக இருந்த தஞ்சை நகரம் பரந்துபட்ட நகரமாக விளங்கியது. 

* இங்கு ஒருபுறம் காவிரியின் கிளை நதியான வெண்ணாறு, அதன் கிளையான வடவாறு என இரு நதிகளும் செல்வதால், அப்பகுதி வண்டல், களிமண், மணல் சார்ந்ததாக உள்ளது. இது நகரின் வட பகுதி. மேற்கு, கிழக்குப் பகுதிகள் வயல்களும், புன்செய் நிலங்களும் உள்ள பகுதியாகத் திகழ்வதால் மண் அழுத்தமுடையதாக இல்லை. நகரின் தென்பகுதி மட்டுமே செம்பாறைக் கற்களால் ஆன அழுத்தமான பூமி. 

* மொத்தம் ஒன்றரை லட்சம் டன்கள் எடை கொண்ட கருங்கற்களை உடைய கோயிலைத் தாங்கி நிற்பதற்கு ஆழமான அடித்தளம் (அஸ்திவாரம்) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்கோயிலுக்கான அடித்தளம் எவ்வளவு ஆழம் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கோயிலின் ஆயிரக்கணக்கான அதிசயங்களில் ஒன்றாக கோயிலுக்கான அடித்தளம் வெறும் 5 அடி ஆழம் மட்டுமே போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

* மரபுவழி அடித்தளம் என்ற அடிப்படையில், ஆற்று மணல் மீதான படுகை மீது கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயில் அமைந்துள்ள இடம் சுக்கான் பாறை பகுதி. கோயிலின் கட்டுமான அளவுக்குப் அந்தப் பாறையை ஆழமாகத் தோண்டி ஒரு பெரிய தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். பின்னர், அந்தத் தொட்டியில் பருமணலைப் போட்டு நிரப்பி இருக்கின்றனர். இதுதான் கோயிலின் அடித்தளம்.

* பொதுவாக, மணல் அசைந்து கொடுக்கும் தன்மைக் கொண்டது. ஆனால், அது ஆழமான தொட்டியில் கொட்டப்பட்டால் பூமி அதிர்ச்சி போன்ற நிகழ்வுகளின்போது அதற்கு தக்கபடி அந்த மணல் அசைந்து கொடுக்குமே தவிர, அக் கல் தொட்டியிலிருந்து மணல் வெளியேறாது.  இந்த நிபுணத்துவம்தான் தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* இக்கோயில் வளாகத்துக்கு 240 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட நீள் சதுர நிலப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில், நடுப்பகுதியில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்விதமாக இக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

* இக்கோபுரம் மொத்தம் 13 நிலைகள் கொண்டது. இதன் உயரம் 216 அடி. ஒவ்வொரு நிலையின் உயரமும், சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து உயரத்தில் பிரமிட் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். கோபுரத்தின் உச்சியில் தலா 26 அடி அகலம், நீளம் கொண்ட சமதளம் உள்ளது.

* கோயில் விமானத்தின் உச்சியில் உள்ள பாறை போன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது என்றும், 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், அது உண்மையல்ல என்பது வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்தது. இந்தப் பாறை வடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இருந்தாலும் ஒரே கல் போன்று தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.

* கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் 13 அடி. இந்தச் சிலைக்குத் தனியாகக் கர்ப்பகிரகம் கட்டாமல் கோயில் கோபுரத்தின் உள்கூடு அமைப்பையே கர்ப்பகிரகமாகக் கட்டப்பட்டுள்ளது.  இந்தச் சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடத்தைப் பார்க்கும்போது 216 அடி உயர லிங்கம் போல காட்சி அளிக்கும்.

* இச்சந்நிதி முன்பு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி. பிற்காலத்தில் வந்த நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்த நந்தியின் உயரம் 12 அடி. நீளம் பத்தொன்பதரை அடி. அகலம் எட்டேகால் அடி.

* பல்லவ, பாண்டிய, முற்காலச் சோழர்கள் உயரம் குறைந்த கோபுரங்களையே எழுப்பினர். தஞ்சாவூர் பெரியகோயில் நுழைவுவாயிலில் உள்ள முதல் கோபுரமே தமிழகத்தில் எழுந்த உயரமான முதல் கோபுரம். இது கேரளாந்தகன் கோபுரம் என அழைக்கப்படுகிறது. மொத்தம் 5 நிலைகள் கொண்ட இந்தக் கோபுரமே பெரியகோயிலுக்கு நிகராக, உயர்ந்த கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இக்கோபுரத்தின் உயரம் 90 அடி, அகலம் 54 அடி.

* மாமன்னன் ராஜராஜசோழன் முடி சூடியதும் முதல் முறையாகச் சேர நாட்டின் மீது படை எடுத்துச் சென்றான். அதாவது, கி.பி. 988 ஆம் ஆண்டில் கேரள நாட்டில் திருவனந்தபுரம் அருகேயுள்ள காந்தளூர்ச்சாலை மீது படையெடுத்தான். கடற்கரைப் பட்டினமான காந்தளூர்ச் சாலையில் கடும் போரிட்டுச் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனை வென்று மலைநாட்டை தன் அடிமைப்படுத்தினான். 

* இது, ராஜராஜசோழன் தலைமையேற்றுச் சென்று பெற்ற பெரும் வெற்றி நிகழ்வு. இச்சிறப்பின் காரணமாகவே ராஜராஜசோழனுக்கு "கேரளாந்தகன்' என்ற அடைமொழியும் சூட்டப்பட்டது.  

* இக்கோயிலின் இரண்டாம் திருவாயிலான ராஜராஜன் வாயிலில் மிகப் பிரம்மாண்டமான இரு துவாரபாலகர் சிலைகள் உள்ளன.  இக்கோயிலில் உள்ள துவார பாலகர்களின் உயரம் தலா 18 அடி. அதாவது உயர்ந்த ஆள்களைப் போன்று 3 மடங்கு அதிகம். இவ்வளவு பெரிய உருவங்களை ஒரே கல்லில் செதுக்கியுள்ளனர். இதுபோன்று 14 துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன.

* நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள கரணங்களை சிவபெருமான் ஆடிக்காட்டுவது போன்ற சிற்பத் தொகுதிகள் வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. நாட்டிய இலக்கணத்தில் 108 கரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கரணங்களை சிவன் ஆடிக் காட்டுவது போன்ற சிற்பங்கள் கோயிலுக்குள் வரிசையாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

* சுற்று வட்டாரத்தில் மலைகள் இல்லாத நிலையில் இக்கோயில் கட்டுவதற்கான கற்கள் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் பகுதியிலுள்ள மலையிலிருந்து வெட்டி எடுத்து வந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

* உலக மரபுச் சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா  கடந்த 2010 -ஆம் ஆண்டில்  கொண்டாடப்பட்டது.
-ராகவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com