

1977-இல் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சி ஏற்ற மூன்றாண்டுகளுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டே இடம்தான் அண்ணா தி.மு.க.வுக்குக் கிடைத்தது. இதனால் மக்கள் மனம் மாறிவிட்டது என்று சொல்லி எம்.ஜி.ஆர் ஆட்சியை மத்திய அரசு 1980-ஆம் ஆண்டு கலைத்துவிட்டது. கலைத்துவிட்டது என்று சொல்வதைவிட கலைக்கச் செய்தார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
கலைத்த சில நாட்களில் நாஞ்சில் மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி போன்றவர்கள் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்கள்.
அந்த நேரத்தில் கவிஞர் இ. முத்துராமலிங்கம் என்பவர் தி.மு.க.வில் சேர்ந்ததை "மதுரைமணி' என்ற பத்திரிகையில் "கவிஞர் முத்துலிங்கம் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்' என்று தவறாக எழுதியிருந்தார்கள்.
இது பற்றிச் சொல்வதற்காக நான் எம்.ஜி.ஆரைச் சந்திக்க மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அப்போது கா. காளிமுத்து வந்திருந்தார். அவரும் இதைப் பற்றி என்னிடம் கூறினார்.
இண்டர்காமில் நாங்கள் இருவரும் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் அலுவலக உதவியாளர் முத்து கூறினார். என் பெயரை "முத்துலிங்கம்' என்று சொல்வதற்குப் பதில் "முத்துராமலிங்கம்' என்று சொல்லிவிட்டார். உடனே நான் ""முத்துலிங்கம் என்று சொல்லுங்கள்'' என்றேன். தவற்றைத் திருத்திக் கொண்டு ""முத்துலிங்கம்'' என்று கூறினார். உடனே என்னிடம் தொலைபேசியைக் கொடுத்து பேசுங்கள் என்றார்.
நான் தொலைபேசியை வாங்கிக் கொண்டு கோபமாகக் கூறினேன். ""நமது அலுவலகத்தில் இருப்பவர்களுக்கே முத்துலிங்கம் யார், முத்துராமலிங்கம் யார் என்று கூடத் தெரியாமலிருக்கிறார்களே. அப்படி இருக்கும்போது பத்திரிகைக்காரர்களுக்கு என்ன தெரியும்? எல்லாப் பத்திரிகைகளிலும் முத்துராமலிங்கம் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார் என்று செய்தி போடும்போது மதுரையிலிருந்து வருகிற "மதுரைமணி' என்ற பத்திரிகையில் முத்துலிங்கம் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார் என்று தவறாகப் போட்டிருக்கிறார்களே, என்ன செய்யலாம்?'' என்றேன்.
""நானும் பார்த்தேன். "என்ன நம்ம முத்துலிங்கம் கூடப் போய்விட்டாரே!' என்று பலபேர் என்னிடம் சொன்னார்கள். முத்துலிங்கம் போகவில்லை. "மதுரை மணி' பத்திரிகையில் பெயரைத் தப்பாகப் போட்டிருக்கிறார்கள்.
முத்துலிங்கத்தை விட்டு மறுப்பு வெளியிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். நீயே வந்துவிட்டாய்'' என்றார்.
""உடனே மறுப்பு எழுதி "மதுரை மணி' பத்திரிகைக்கு அனுப்பி, "தவறுக்கு மன்னிப்புக் கேளுங்கள் இல்லையேல் வழக்குத் தொடருவேன்' என்று எழுது'' என்றார். அதன்படியே எழுதினேன். அவர்களும் தவற்றை உணர்ந்து பெட்டிச் செய்தி வெளியிட்டு தவறுக்காக வருந்துகிறோம் என்று மன்னிப்பும் கேட்டனர். இப்போது இ. முத்துராமலிங்கம் என்ற கவிஞர் உயிரோடு இல்லை. மறைந்துவிட்டார்.
இண்டர்காமில் பேசும்போது எம்.ஜி.ஆர். என்னிடம் இன்னொன்றும் சொன்னார்.
""எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் "இதுதான் பதில்' என்ற படம் தயாரிக்கிறோம். போனவாரம்தான் பிலிம் சேம்பரில் பதிவு செய்தோம். இசை எம்.எஸ்.விசுவநாதன் என்றும் பாடல்கள் கவிஞர் முத்துலிங்கம் என்றும் பதிவு செய்திருக்கிறோம். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வரலாற்றில் ஒரே ஒரு பாடலாசிரியரை மட்டும் பிலிம் சேம்பரில் இதுவரை பதிவு செய்ததில்லை. உன்னைத்தான் செய்திருக்கிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் பத்திரிகையில் இந்தச் செய்தியைப் பார்த்ததால் நம்மைச் சேர்ந்த பலரும் என்னிடம் கேட்டனர்'' என்றார்.
உடனே நான் ""குஞ்சப்பன் கூட என்னிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டார். அவரிடமும் பத்திரிகைச் செய்தி பற்றி விளக்கமாகக் கூறினேன்'' என்றேன். ""சரி கம்போசிங் வைக்கும்போது சொல்கிறேன். காளிமுத்துவிடம் கொடு'' என்றார். நான் காளிமுத்துவிடம் தொலைபேசியைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டேன்.
இரண்டு நாள் கழித்து சத்யா ஸ்டுடியோவில் கம்போசிங். எம்.ஜி.ஆர். காட்சியைச் சொல்லி ஒரு பல்லவி எழுதச் சொன்னார்.
உன்-உள்ளத்தில் துணிவிருந்தால் - இந்த
உலகம் உனது கையில் வரும் - கொள்கை
உறுதியோடு வாழ நினைத்தால் - இந்த
உலகம் உனக்குப் பரிசுதரும்
என்று எழுதினேன். அண்ணன் எம்.எஸ்.விசுவநாதன் உடனே இசையமைத்துப் பாடிக்காட்டினார்.
எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார். ""நீங்களே ஒரு டியூன் போடுங்கள். டியூனுக்கு எழுதட்டும்'' என்று கூறினார். அவர் நான்கு டியூன் போட்டுக் காட்டினார். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இதற்குப் பல்லவி எழுதென்றார்.
வண்ணப் பூஞ்சோலை
வாழ்க்கை பொன்மேடை
வளமோடு நீ வாழலாம் - புள்ளி
மயில் போல நீ ஆடலாம்
குயில் போலவே இன்ப வான்மீதிலே - நீ
மகிழ்வோடு இசை பாடலாம்
என்று எழுதிக்காட்டினேன். இன்னொன்று எழுது என்றார். எழுதினேன். இரண்டையும் பார்த்துவிட்டு ""வண்ணப் பூஞ்சோலை - பல்லவியே இருக்கட்டும். நாளை மீண்டும் சந்திப்போம், காலையில் 8.30-க்கு வந்துவிடுங்கள்'' என்று எம்.எஸ்.வி.யிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
மறுநாள் எம்.ஜி.ஆர் முதல் எம்.எஸ்.வி. வரை டைரக்டர் கே.சங்கர், ப. நீலகண்டன், எம்.ஜி.ஆர் நடித்த "தாழம்பூ' படத்தை இயக்கிய என்.எஸ். ராம்தாஸ் உட்பட எல்லோரும் வந்துவிட்டார்கள். நான் 9.15 க்குத்தான் சென்றேன். 8.30க்கு என்றால் 9 மணி அல்லது ஒன்பதரைக்குத் தானே வருவார்கள் என்று நினைத்துச் சென்றேன். சொன்ன நேரத்திற்கு எம்.ஜி.ஆர். வந்துவிட்டதை அறிந்து பதறினேன்.
எம்..ஜி.ஆர். அறைக்கு வெளியே நின்ற பத்திரிகையாளர் சோலை, ""உனக்காகத் தலைவர் அரைமணி நேரமாகக் காத்திருக்கிறார். கோபமாக இருக்கிறார். சீக்கிரம் போ'' என்றார். நான் உள்ளே நுழைந்து ""மன்னிக்கணும் தலைவரே'' என்று வணங்கினேன். ""மணி என்ன ஆகுது?'' என்று கோபமாகக் கேட்டார். நான் மெளனம் காத்தேன். ""சரி உட்கார்'' என்றார். உதவியாளர் சபாபதியிடம் ""டிபன் ரெடியா?'' என்றார். ""ரெடி'' என்று சொல்லி எல்லோருக்கும் கொண்டு வந்தார்.
பிறகுதான் தெரிந்தது. நான் வந்த பிறகுதான் எல்லோரும் காலைச் சிற்றுண்டி அருந்த வேண்டும் என்று இருந்திருக்கிறார்கள் என்று.
சரணத்திற்கு டியூன் போட்டு எம்.எஸ்.வி. வாசித்துக் காட்டினார். மீண்டும் காட்சியை எம்.ஜி.ஆர் எனக்கு நினைவு படுத்தினார்.
""தற்கொலை செய்து கொள்வது தவறு. தங்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் மிருகங்கள் கூட தற்கொலை செய்து கொள்வதில்லை. ஐந்தறிவு படைத்த விலங்கினமே தற்கொலை செய்து கொள்வதில்லை எனும்போது ஆறறிவு படைத்த மனிதன் தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனமல்லவா? உறுதியும் தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு அவசியம் வேண்டும். இப்படிப்பட்ட கருத்துக்களை சரணத்தில் சொல்ல வேண்டும்.
காட்டுக்குள் ஜீப்பில் சென்ற காட்டிலாகா அதிகாரி தற்கொலை செய்து கொள்ள இருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி, மேடு பள்ளம் மிகுந்த காட்டுச் சாலை வழியாக அழைத்து வரும்போது அவளுக்கு அறிவுரை கூறுவதுபோல் இந்தப் பாடல் வருகிறது. ஆயினும், அவளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அது பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்'' என்றார்.
நேற்றுச் சொன்னதை மீண்டும் எனக்கு நினைவுபடுத்துவது போல் அவர் கூறியதற்குக் காரணம், ப.நீலகண்டன், கே.சங்கர் போன்றவர்கள் காட்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. ஏனென்றால் இவர் தான் கதை திரைக்கதை இயக்கம் எல்லாமே.
வளைவுகள் திருப்பங்கள் வழியை மாற்றலாம்
வழி சொல்வோர் வேறொரு திசையைக் காட்டலாம்
கலங்கரை விளக்காக நீமாற வேண்டும்
கரைசேர நினைப்போர்க்கு ஒளியாக வேண்டும்
-என்று ஒரு சரணம் முதலில் எழுதினேன்.
""நன்றாக இருக்கிறது. இதை இரண்டாவது சரணமாக வைத்துக் கொள்ளலாம். முதல் சரணத்தில் வாழ்க்கையையும், சாலையையும் இணைத்து ஏதேனும் கருத்தைச் சொல்ல வேண்டும். தோல்விகளெல்லாம் வெற்றிக்குப் படிக்கட்டுக்கள். அதுபோல் நமக்கு விழுகிற அடிகளும் விழுப்புண் ஆகலாம். இப்படிப்பட்ட கருத்துக்கள் இருக்க வேண்டும். நாளை மறுநாள் ரிக்கார்டிங். இனிமேல் கம்போசிங் தேவையில்லை. பாடல் எழுதி முடித்ததும் என்னிடம் காட்டு'' என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். நாங்களும் சென்றோம்.
மறுநாள் இரவு பத்துமணிக்கு குஞ்சப்பன் வந்து என்னை அழைத்துக்கொண்டு ஆற்காடு தெருவிலுள்ள அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே என்.எஸ். ராம்தாஸ் இருந்தார். ""பாடல் முடிந்துவிட்டதா?'' என்றார். ""முடிந்தது'' என்றேன். ""சின்னவர் தொலைபேசியில் வாசித்துக் காட்டச் சொல்கிறார். நான் வாசிக்கட்டுமா நீங்கள் வாசிக்கிறீர்களா?'' என்றார். ""நீங்களே வாசியுங்கள்'' என்றேன். வாசித்தார். ""நான் சொன்னது போல் எழுதவில்லை. வேறு எழுதச் சொல்லுங்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் பாடலை இன்று முடிக்க வேண்டும். முத்துலிங்கத்திடம் போனைக் கொடுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.
ராம்தாசிடம் என்ன சொன்னாரோ அதைத்தான் என்னிடமும் சொன்னார். ""இரவு இரண்டு மணியானால் கூட பரவாயில்லை. உனக்காக நான் விழித்திருக்கிறேன்'' என்றார்.
(இன்னும் தவழும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.