

சில நிமிட காட்சியில் கலகலவென ஈர்க்கிறது "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படம். வழக்கமான காதல் ஃபீலிங்ஸ் மட்டுமே இல்லாமல் கிளாமர், ஹுயூமர் என எங்கெங்கும் சிரிப்புத் தோரணம் அமைத்திருக்கும் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முகேஷ். தெலுங்கில் வெளிவந்து பெரும் ஹிட் அடித்த "குண்டூர் டாக்கீஸ்' படத்தின் தமிழ் ரீமேக் இது.
குறைந்த பட்ஜெட், முழுக்க முழுக்க புதுமுகங்கள் என தெலுங்கில் வெளிவந்த இப்படம், சுமார் 30 கோடி வரை வசூல் அள்ளி சாதனை புரிந்தது.
விமல், சிங்கம் புலி இரண்டு பேரும் ஒரு மருந்து கடையில் வேலை செய்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களின் கைகளுக்கு வந்து சேருகிறது விலை மதிக்க முடியாத பொருள். அந்த பொருளுக்காக ஐந்து கேங்ஸ்டர் அணியினர், அவர்களை விரட்டுகிறார்கள். ஆனந்த்ராஜ் தலைமையில் ஒரு அணி. காவல்துறை அதிகாரிகளான பூர்ணா, மன்சூர் அலிகான் இருவரும் ஒரு அணி. ஹாலிவுட் நடிகை மியா ராய் அவர் ஒரு பக்கம். கே.ராஜன் மதுரை தாதா இவர் ஒரு பக்கம். மருந்துக் கடை முதலாளி வெற்றிவேல் இன்னொரு பக்கம். இந்த ஐந்து அணியினரும் விமல், சிங்கம் புலியை விரட்டுகிறார்கள். ஆனால் அந்த விலை மதிப்பில்லாத பொருள் இருப்பதே தெரியாமல், அவர்கள் இருவரும் வேறு நோக்கத்துக்காக ஓடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்று சேரும் போது என்னென்ன நடந்தது என்பதை கலகலப்பாக சொல்லி முடிப்பதே கதை. இடைவேளைக்கு முன், இடைவேளைக்குப் பின் என்றெல்லாம் எதுவும் பெரிய வித்தியாசம் இருக்காது. 70 காட்சிகளும் காமெடிதான். ஆனால், அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு விஷயமும் உங்களை எங்கேயோ இழுத்துப் பிடிக்கும். அனுபவமாக மாறி நிற்கும். இதைச் சொல்லுவதுதான் படம்.
மித மிஞ்சிய கவர்ச்சி தெலுங்கு சினிமாவுக்கு சரி... இங்கே சரியாக பொருந்தி வருமா...
ஹா...ஹா... அது ஒரு சின்ன பகுதிதான். எல்லாமும் கலந்ததுதானே வாழ்க்கை. ரொம்பவே அழுத்தமான கவர்ச்சிகள் இருக்காது. படத்தின் விளம்பரத்துக்காக சில மிகைகள் இருக்கலாம். ஷேக்ஸ்பியர் நாவல்களில் பெண்களை வர்ணிப்பாரே... அழகா, கவிதையா... அப்படி நான் படத்தில் வர்ணிக்கிறேன். அவ்வளவுதான்.
காமெடி, கவர்ச்சி என எல்லாவற்றையும் தாண்டி படம் இயக்குகிற அளவுக்கு இதில் உங்களை நிறுத்திய இடம் எது...
ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஓர் அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு. காமெடி, ஆக்ஷன், த்ரில்லர், கவர்ச்சி என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
கன்னட ஹீரோயின் சார்மிளா மாண்ரே படத்தின் தயாரிப்பாளர்... என்ன
விசேஷம்...
தமிழுக்கு நான் ஏற்கெனவே அறிமுகம்தான். பிரசாந்த் - சினேகா நடித்த "ஆயுதம்' படத்தை தமிழில் இயக்கியிருக்கிறேன். அதன்பின் கன்னடம், தெலுங்கு என வேறு பக்கம் போய் விட்டேன். கன்னடத்தில் "சஜினி' என்று ஒரு படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இயக்கினேன். அந்தப் படத்தில்தான் சார்மிளா மாண்ரே கதாநாயகியாக அறிமுகம். இப்போது கன்னட சினிமாவில் அவருக்கென தனி இடம். என்னை பார்க்கும் போதெல்லாம், நான் படம் தயாரிக்க விரும்பினால், முதல் படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என்று சொல்லுவார். அதை நான் கூட மறந்து விட்டேன். சுமார் இரண்டு வருடங்களுக்கு பின் அதை ஞாபகம் வைத்து இந்த வாய்ப்பை தந்திருக்கிறார். அருமையான மனுஷி. அவர் நினைத்ததைப் போல் படத்தை தந்திருக்கிறேன். இருக்கிற நிமிஷமெல்லாம் சீட் நுனியில் வைத்திருக்கிற விறுவிறுப்பை பார்க்க தியேட்டருக்கு நம்பி வரலாம். சார்மிளா மாண்ரேவின் அன்புக்கு நன்றி.
கன்னட சினிமா எப்படியிருக்கிறது...
கன்னடத்திலும் நல்ல எதார்த்த முயற்சிகள் உருவாகி வருகிறது. ஹிட் மந்திரம் என்று எங்கேயும் இல்லை. அதை விட தமிழ் சினிமாவின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. "தென்மேற்கு பருவக்காற்று' விஜய் சேதுபதி, "அட்டக்கத்தி' தினேஷ், "மைனா' விதார்த் எல்லாம் அப்போது புதுமுகம். இப்போது ஒரே படத்தில் பளீச் அடையாளத்துடன் வளர்ந்து நிற்கிறார்களே அந்த நம்பிக்கைதான் இங்கே பலருக்கும் பரிசோதனை முயற்சிகளில் இறங்க வைக்கிறது. சீரியஸ் பாணியில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு உழைப்பதை விட, காமெடி பின்னணியில் உணர்வுகளை முன் வைக்கிற இந்த அனுபவம் ரொம்பவே புதுசு. உங்களுக்கு காமெடி நல்லா வருதே... முயற்சி செய்யுங்கள் என சொன்னார்கள். அந்த சின்ன லீடை பிடித்து இந்தப் படம் இயக்கியிருக்கிறேன். ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தவர்கள் வாய் விட்டு சிரித்தார்கள். அந்த சிரிப்பு தியேட்டர்களில் அப்படியே எதிரொலிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.