

படம் நெடுகிலும் படம் பிடித்து எதார்த்தம் சேர்ப்பவர் ஒளிப்பதிவாளர் செழியன். இந்த முறை ஒளிப்பதிவோடு இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். "டூ லெட்' படத்தின் மூலம் இந்திய மற்றும் சர்வதேச அரங்குகளை அலங்கரித்து வரும் செழியன், தணியாத தாகம், தளராத வேகம், தீராத பயணம் என நல்ல சினிமாவுக்கான நுணுக்கங்களை கற்று உயரம் தொட்டவர். அதிராத குரலில் பேசத் தொடங்குகிறார்....
ஒரு படம் முடிந்ததும் அது தொடர்பான பதிவுகள், வருவதை சினிமா உலகம் நெகிழ்வோடு வரவேற்கும்... உங்களுக்கு இந்த யோசனை எப்படி வந்தது...
பொதுவாக ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றதும், முதலில் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி யார் கதாநாயகன், யார் கதாநாயகி, இசையமைப்பாளர் யார், தயாரிப்பாளர் யார் என்பதுதான். இதனால் நம் சினிமா எப்போதும் பிரபலங்களையே சார்ந்திருக்கிறது. இதனாலேயே ஒரு படம் எடுக்கலாம் என யோசிக்கிறபோது, இந்த பிரபலங்களுக்காகவே காத்திருந்து வாழ்வில் பல வருடங்களை இழந்து விடுகிறோம். ஆனால் சர்வதேச சினிமாவில் பிரபலங்கள் சாராமல் இயங்குகிற எளிய சினிமாக்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஈரானிய சினிமாக்கள். அவர்கள் எடுக்கும் சினிமாவுக்கு கதையும், இயக்குநரும்தான் முக்கியம். வேறு யாரும் இல்லை. நம் தமிழில் ஏன் எளிமையான சினிமாக்கள் இல்லை. உலகத்தின் சிறந்த சினிமாக்களை தொடர்ந்து பார்ப்பதனால் அது போன்று தமிழிலும் எளிமையான சுதந்திரமான சினிமாக்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. 2007-ஆம் ஆண்டு ஒரு வாடகை வீடு தேட வேண்டிய அனுபவம் எனக்கு நிகழ்ந்தது. சென்னையில் ஒரு வீடு தேடுவதில் ஒரு கதை இருக்கிறது என அப்போதுதான் தெரிந்தது. உடனே அதை எழுதி வைத்தேன். உலகம் முழுக்க எளிமையான கதைகளை வாழ்க்கையிலிருந்து எடுப்பது போன்று, இதையும் எடுக்கலாமே என்று தோன்றியது எடுத்து விட்டேன்.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்...
சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா, தருண் என்கிற நான்கு வயதுச் சிறுவன். நான் முன்பே சொன்னது போல வாழ்க்கையிலிருந்து ஒரு கதையை எடுக்கிறபோது பிரபலங்கள் நடித்தால் அதில் ஒரு நம்பகத்தன்மை இருக்காது. உதாரணமாக ஒரு பிரபல நடிகர் தனது விலை உயர்ந்த காரில் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து இறங்கி ஒப்பனை செய்து கொண்டு வீடு தேடுபவராக நடித்தால் அதை எடுக்கிற என்னாலேயே நம்ப முடியாது. பிறகு எப்படி பார்க்கிறவர்கள் நம்புவார்கள்... எனவே சந்தோஷ் என்னுடன் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்தவர். ஷீலா நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார். தருண் சினிமாவுக்கு புதிது. இவர்கள் தவிர ஆதிரா, கவிஞர் ரவி சுப்ரமணியன், அருள் எழிலன் என 99 சதம் எல்லோரும் திரைக்குப் புதியவர்கள்.
இந்தப் படத்துக்கு உலக திரைப்பட விழாக்களில் எப்படி இருந்தது வரவேற்பு...
உலகத் திரைப்பட விழாக்களில் படத்தை வெகுவாக ரசித்துப் பார்க்கிறார்கள். மொழியைக் கடந்து இந்த வீட்டுப் பிரச்னை ஒவ்வொரு நாட்டிலும் வேறு விதத்தில் இருக்கிறது. இடையிடையே கைத்தட்டுகிறார்கள். சிரிப்பொலி எழுகிறது. படம் முடிந்ததும் எழுந்து நின்று கைத்தட்டுகிறார்கள். பிறகு விருதும் தருகிறார்கள். இதுவரை 28 சர்வதேச விருதுகள் வந்திருக்கின்றன. 100 திரை விழாக்களை கண்டிருக்கிறோம். இன்னும் அது தொடர்கிறது.
இன்னும் ஒளிப்பதிவில் நிதானமாக வேலை பார்க்கிறீர்கள்... கடகடவென படங்கள் செய்வதில் விருப்பமில்லையா...
ஒளிப்பதிவு செய்யும்போது மிகவும் வேகமாக இயங்குகிறேன். எவ்வளவு பெரிய காட்சிக்கும் ஒளியமைக்க எனக்கு சில நிமிடங்கள் போதும். ஒரு காட்சியை இயக்குநர் என்னிடம் விவரித்து நடிகர்கள் தயாராவதற்குள் ஒளியமைப்பு செய்து ஷாட் தயாராகிவிடும். அதனால் ஒளிப்பதிவு செய்கிற படங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறேன். நண்பர் ஒருவர் சொன்னார், ""நீங்கள் வரிசையாக ஒளிப்பதிவு செய்து ஐந்து படங்கள் தேசிய விருதைப் பெற்றிருக்கின்றன'' என்று சொன்னார். நல்லப் படங்களில் என் பெயர் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வருடத்துக்கு பத்து நல்ல தமிழ்ப் படங்கள் எடுங்கள். அதில் ஐந்து படங்களில் ஒளிப்பதிவாளராக இருப்பேன்.
சீரியஸ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறீர்கள்... சீரியஸ் படங்கள் இயக்குகிறீர்கள்... இதற்கு என்ன காரணம்...
சீரியஸ் படம், கமர்ஷியல் படம், கமர்ஷியல் அல்லாத படம் அப்படி எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. முடிந்தால் அதுதானே நல்லப் படம். சினிமா சக்தி வாய்ந்த ஊடகம். ஊர் முழுக்க டாஸ்மாக் இருக்கிறது. நீங்கள் ஏன் இளநீர் விற்கிறீர்கள் என்று கேட்பது போல இருக்கிறது. எது நல்லதோ அதை தேர்ந்தெடுக்கிறேன். அதையே தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.