நாடோடிக் கதை: அண்டா பணமும் பணியார மழையும்

ஓர் ஊரில் தாயும், மகனும் வசித்து வந்தார்கள். தாய் புத்திசாலி. மகன் அசடு. அவர்களிடம் நிறைய மாடுகள் இருந்தன. அதில் முரட்டு மாடும் ஒன்று. அதை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
நாடோடிக் கதை: அண்டா பணமும் பணியார மழையும்
Published on
Updated on
2 min read

ஓர் ஊரில் தாயும், மகனும் வசித்து வந்தார்கள். தாய் புத்திசாலி. மகன் அசடு. அவர்களிடம் நிறைய மாடுகள் இருந்தன. அதில் முரட்டு மாடும் ஒன்று. அதை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. முரட்டு மாட்டை விற்று விடுமாறு தாய் மகனிடம் அடிக்கடி கூறி வந்தாள்.
மகன் தினசரி ஆடு மேய்க்கப் போவான். ஒருநாள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தான். மரத்தில் ஒரு ஓணான் இருந்தது. அது அவனைப் பார்த்து தலையைத் தலையை அசைத்தது.
கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தான். திரும்பவும் தலையை அசைத்தது. ""இந்த முரட்டு மாடு உனக்கு வேண்டுமா?'' என்று கேட்டான். ஓணான் தலையை அசைத்தது.
""மாட்டின் விலை நூறு ரூபாய். பணத்தைக் கொடுத்து விட்டு மாட்டை வைத்துக்கொள்'' என்றான். ஓணான் அதற்கும் தலையை அசைத்தது. நூறு ரூபாய்க்குச் சம்மதித்து விட்டது என்று சந்தோசப்பட்டான்.
மாட்டை மரத்தில் கட்டினான். ""நான் சாப்பிட்டு விட்டு வருவேன். அதற்குள் நீ பணத்தை எடுத்த வை'' என்று சொன்னான். ஓணான் அதற்கும் தலையை அசைத்தது.
சாப்பிட்டு விட்டு வந்தான். ஓணான் அதே இடத்தில் இருந்தது. ஓணானிடம் ""பணத்தைக் கொடு'' என்று கேட்டான். அப்போதும் தலையை அசைத்தது.
உடனே அவனுக்குக் கோபம் வந்தது. கல்லை எடுத்து ஓணான் மீது எறிந்தான். ஓணான் கீழே விழுந்தது. பின் வேகமாக ஓடியது. அவனும் விடாமல் விரட்டினான்.ஓணான் ஒரு பொந்துக்குள் ஒளிந்துகொண்டது.
""நீ எங்கே சென்றாலும் விடமாட்டேன்'' என்று சொல்லிக்கொண்டே அந்த பொந்தைத் தோண்டினான். பொந்தில் பணம் இருந்தது. இன்னும் கொஞ்சம் பணம் தோண்டினான். ஒரு அண்டா நிறைய பணம் இருந்தது.
""நீ இங்கே பணம் வைத்திருப்பது தெரியாமல் போச்சே! தெரிந்திருந்தால் உன்னைக் கல்லால் எறிந்திருக்க மாட்டேன். சரி, எனக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்கிறேன்'' என்று சொன்னான்.
அண்டாவிலிருந்து நூறு ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டான். அண்டாவை நன்றாக மூடி, பொந்துக்குள் வைத்துவிட்டு வீட்டுக்குப் போனான்.
""முரட்டு மாடு எங்கே?'' என்று கேட்டாள் அம்மா. ""அந்த முரட்டு மாட்டை நூறு ரூபாய்க்கு விற்றுவிட்டேன்'' என்று சொன்னான் மகன். அம்மாவால் அதை நம்ப முடியவில்லை. ""யாருக்கு விற்றாய்?'' என்று கேட்டான். ""காட்டில் ஓணானுக்கு விற்றேன்'' என்று சொன்னான்.
பணத்தை வாங்கி எண்ணிப் பார்த்தாள் அம்மா. ஓணான் எப்படி பணம் வைத்திருக்கும் என்று யோசித்தாள். மகனிடம், ""ஓணான் எங்கே இருக்கிறது?''என்று கேட்டாள்.
அம்மாவைக் காட்டிற்கு அழைத்துக் கொண்டு போய், ஓணான் இருந்த இடத்தைக் காண்பித்தான். தாயும் மகனும் அந்த இடத்தைத் தோண்டினார்கள்.
""அண்டாவையும் பணத்தையும் இப்போது கொண்டு போனால் ஊரில் உள்ளவர்கள் பார்த்து விடுவார்கள். இரவில் வந்து எடுத்துச் செல்வோம்'' என்று மகனிடம் சொன்னாள்.
இரவும் வந்தது. ஊரில் எல்லோரும் தூங்கி விட்டார்கள். தாயும், மகனும் காட்டிற்குப் போய் அண்டாவோடு பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். ""யாரிடமும் இது பற்றி சொல்லாதே'' என்றாள் அம்மா சொன்னாள். மகன் தலையாட்டினான்.
மகனைத் தூங்கச் சொல்லிவிட்டு அம்மா பணியாரம் சுட ஆரம்பித்தாள். சுட்ட பணியாரங்களை வீட்டின் முற்றத்தில் போட்டாள். கொஞ்ச நேரம் கழித்து, மகனை எழுப்பினாள்.
""நம் ஊரில் பணியார மழை பெய்திருக்கிறது. எல்லோரும் அவரவர் வீட்டில் செய்த பணியாரங்களை எடுத்து தின்று விட்டார்கள். நீயும் எடுத்து தின்றுவிடு'' என்று மகனிடம் சொன்னாள்.
மகன் எழுந்து முற்றத்தில் கிடந்த பணியாரங்களைப் பொறுக்கித் தின்றான். விடிந்ததும் வழக்கம் போல் மாடு மேய்க்கப் போனான்.
ஒருநாள் தன்னுடன் மாடு மேய்க்கும் பையனிடம் ""இந்த இடத்தில் தான் நானும், என் அம்மாவும் ஒரு அண்டா நிறைய பணம் எடுத்தோம்'' என்று ரகசியத்தைச் சொல்லிவிட்டான். மாடு மேய்க்கும் பையன் அதை ஊருக்குள் பரப்பிவிட்டான். அது மகாராஜா வரை சென்றுவிட்டது. தாய், மகன் இருவரையும் அழைத்து வரச் சொல்லி ராஜா உத்தரவு போட்டார். 
காவலர்கள் தாயையும், மகனையும் அழைத்துச் சென்றனர். மகாராஜா அவர்களை விசாரித்தார். ""நீங்கள் இருவரும் அண்டா நிறைய பணம் எடுத்தீர்களா? அதை ஏன் அரசாங்கத்தில் ஒப்படைக்கவில்லை?'' என்று கேட்டார்.
""நாங்கள் அண்டாவும் எடுக்கவில்லை. பணமும் எடுக்கவில்லை. யாரோ வேண்டுமென்று பழியை எங்கள் மீது போட்டிருக்கிறார்கள்'' என்றாள் அம்மா.
ராஜா நம்பவில்லை. ""உன் மகன் சொல்லி ஊர் முழுக்க தெரிந்து இருக்கிறது. நீ உண்மையை மறைக்கிறாய்'' என்றார். 
""அய்யோ ராஜா, இவன் சொல்வது பொய். நீங்களே இவனிடம் கேட்டுப் பாருங்கள்'' என்றாள் அம்மா.
""நீயும், உன் அம்மாவும் அண்டா நிறைய பணம் எடுத்தீர்களா?'' என்று கேட்டார் ராஜா. ""ஆம், எடுத்தோம்'' என்றான். 
""எந்தக் கிழமையில் எடுத்தீர்கள்?'' என்றார் ராஜா. 
""கிழமை எல்லாம் தெரியவில்லை. நம் ஊரில் பணியார மழை பெய்தபோது அண்டா நிறைய பணம் எடுத்தோம்'' என்றான்.
அதைக் கேட்டு ராஜாவும்,அங்கிருந்தவர்களும் சிரித்தார்கள். ""பணியார மழையா? இவன் என்ன உளறுகிறான்?'' என்றார் ராஜா. ""இவன் எப்பவும் இப்படித்தான். எதையாவது உளறுவான்'' என்றாள் அம்மா.
""பணியார மழையும் பெய்யவில்லை. இவர்கள் அண்டாவும், பணமும் எடுக்கவில்லை'' என்று தீர்ப்பளித்தார் ராஜா. அம்மாவின் திறமையால் அண்டா நிறைய பணம் தப்பியது. தாயும், மகனும் மகிழ்ச்சியோடு வீடு சேர்ந்தார்கள்.
"ஏமாளியும் திருடனும்' 

(நாட்டுப்புறக் கதைகள்) என்னும் நூலிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com