

நான்கு திருடர்கள் ஒரு நகரத்திற்குத் திருடச் சென்று கொண்டிருந்தனர். போகும் வழியில் அவர்கள் ஒரு பெரிய குழியைக் கண்டனர். அந்தக் குழியில் மேலோட்டமாக ஒரு பானை புதைந்து கிடப்பதைக் கண்டனர்.
பானையின் மேற்புறத்தில் மஞ்சல் நிறமாக ஏதோ பொருள் காணப்பட்டது. உடனே, பூமிக்கு அடியில் ஆழமாகப் புதைந்திருந்த அந்தப் பானையைத் தோண்ட ஆரம்பித்தனர். என்ன அதிசயம்! தோண்டத் தோண்ட அதிலிருந்து பானை பானையாக தங்கம் வந்துகொண்டே இருந்தது. அதைக் கண்ட நால்வரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். "அட ... திருடாமலேயே நமக்கு எல்லாப் பொருள்களும் இங்கேயே கிடைத்துவிடும் போலிருக்கே' என்றும் மகிழ்ந்தனர்.
அவர்களுள் ஒருவன் ""எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் தோண்டுவோம். எவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவு தங்கம் நமக்குக் கிடைக்கும், அது எல்லாம் நமக்குத்தான்'' என்றான்.
திருடர்கள் நால்வரும் வெகு நேரமாகத் தோண்டியதால் மிகவும் களைப்படைந்தனர். பசியும் தாகமும் அவர்களை வாட்டியது.
உடனே திருடர்கள் இருவர், ""நீங்கள் இருவரும் இங்கேயே தோண்டிக் கொண்டிருங்கள், நாங்கள் சென்று உணவு வாங்கி வருகிறோம்'' என்று கூறி, உணவு வாங்கப் புறப்பட்டனர்.
ஆனால், உணவு வாங்கப் போகும் வழியில் அந்த இரு திருடர்களுக்கும் மனம் மாறியது. பேராசை தலைதூக்கியது. கிடைத்த பொருளை நான்காகப் பங்கு போட்டால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது? அதனால், தோண்டிக் கொண்டிருக்கும் அந்த இருவரையும் கொலை செய்து விடுவோம். அவர்கள் இருவரும் இறந்தால்தான், நாம் இருவரும் கிடைத்த தங்கத்தைப் பாதி பாதியாகப் பங்கு போட்டுக் கொள்ள முடியும் என்று முடிவு செய்தனர். பேராசை அவர்கள் கண்களை மறைத்ததால், நண்பர்கள் என்பதையும் மறந்து அவர்களைக் கொலை செய்யத் துணிந்தனர். அதனால் விஷம் கலந்த உணவை, குழியில் இறங்கித் தோண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு வாங்கி வந்து கொடுத்தனர்.
தோண்டிக் கொண்டிருந்த திருடர்கள் இருவருக்கும் முன் இருவரைப் போலவே பேராசை வந்துவிட்டது. அவர்கள் மனமும் மாறியது. அவர்களும், உணவு வாங்கச் சென்ற இருவரையும் கொன்றுவிட்டு, நாம் இருவரும் இந்தத் தங்கத்தை இரண்டாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தனர்.
உணவு வாங்கி வந்த திருடர்கள், மற்ற இருவரையும் சாப்பிட அழைத்தனர். ஆனால் அவர்களோ, ""முதலில் நீங்கள் சாப்பிட்டு விட்டு வந்து மண்ணைத் தோண்டுங்கள். பிறகு நாங்கள் போய் சாப்பிடுகிறோம்'' என்றனர்.
அதனால், முன் இருவரும் விஷம் கலந்த உணவை அவர்களுக்கு வைத்துவிட்டு, நல்ல உணவை அவர்கள் இருவரும் சாப்பிட்டுவிட்டு மண்ணைத் தோண்டுவதற்காகக் குழியில் இறங்கினர். அதுதான் தக்க சமயம் என்று குழியில் காத்திருந்த மற்றஇரு திருடர்களும் மண்ணைத் தோண்ட குழியில் இறங்கிய இரு திருடர்களையும் ஆயுதத்தால் தாக்கிக் கொன்றனர்.
பிறகு அவர்கள் இருவரும் "அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்களை நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டு, பிறகு நமது பங்கைப் பிரித்துக் கொள்ளலாம்' என்று கூறி, விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டனர். சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்களும் மயங்கி விழுந்து இறந்தனர்.
பேராசை அந்த நால்வரின் கண்களையும் மறைத்ததால், தானாகக் கிடைத்த பொருளைக்கூட அனுபவிக்க முடியாமல் அந்த நால்வரும் மரணத்தைத் தழுவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.