

கண்ணதாசனுக்குப் பிறகு உலகமெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கக் கூடிய ஒரே கவிஞர் வைரமுத்து. என்னைப் போன்றோர் எழுதிய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பும்போது பெயரைச் சொன்னால்தான் இன்னார் எழுதியதென்று தெரியும். ஆனால் பெயரைச் சொல்லாவிட்டால்கூட அந்தப் பாடலில் வரக்கூடிய சொல்லாட்சியை வைத்துக் கொண்டு இது வைரமுத்து எழுதிய பாடலென்று சொல்லிவிடலாம். அந்த அளவு தனித்துவமும் கவித்துவமும் உள்ள கவிஞர் அவர்.
நானும் அவரும் ஒரு காலத்தில் தரையில் நின்று கொண்டுதான் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றைக்கு நான் அண்ணாந்து பார்க்கக் கூடிய ஆகாயமாக உயர்ந்து நிற்கிறார். நான் அதே தரையில்தான் நின்று கொண்டிருக்கிறேன்.
நானும் அவரும் சேர்ந்து பல படங்களில் எழுதியிருக்கிறோம். அதில் "பயணங்கள் முடிவதில்லை' என்ற படமும் ஒன்று. நான் அதில் இரண்டு பாடல்களும், கங்கை அமரன் இரண்டு பாடல்களும் எழுதினோம். வைரமுத்து மூன்று பாடல்கள் எழுதினார். அதில் "இளைய நிலாப் பொழிகிறதே' என்ற அவரது பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
""முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தொலைந்ததனால்
அழுதிடுமோ அது மழையோ''
இந்தக் கற்பனை மிக நயமான கற்பனை.
முகில்களை வானத்து ஊஞ்சல் என்றும் மேகப் பந்தல் என்றும், ஆள் நடக்காப் பாலமென்றும் தூது செல்லக்கூடிய தோழி என்றும் கவிஞர்கள் பலர் வர்ணித்திருக்கின்றனர். ஆனால் "முகவரிகள் தொலைந்ததனால் முகிலினங்கள் அலைகிறதோ' என்று கேட்ட ஒரே கவிஞன் வைரமுத்துத்தான். இந்தக் கற்பனை எல்லாருக்கும் வந்துவிடாது.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று தொல்காப்பியம் சொல்வதைப் போல, இவரது எல்லாப் பாடல்களும் வைரங்களாகவும் முத்துக்களாகவும் விளங்குகின்றன. இவரது எல்லாப் பாடல்களும் பொருள் நிறைந்த கவிதை நயமிகுந்த பாடல்கள். அதனால் எதை எடுப்பது? எதை விடுப்பது? என் மகளுடைய திருமண வரவேற்பு விழாவில் இவரது திரைப்பாடல்கள் அடங்கிய புத்தகத்தைக் கொடுத்தார். ஆறாயிரம் பாடல்கள் வரை எழுதியிருக்கிறார். எண்ணிக்கையில் வாலிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இவர்தான். கற்பனை நயங்களில் கண்ணதாசனுக்குப் பக்கத்தில் இருப்பவரும் இவர்தான்.
"ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' என்று கண்ணதாசன் மேகங்களுடன் பேசினார். அது போல் எம்.ஜி.ஆர், பத்மினி நடித்த "விக்கிரமாதித்தன்' படத்தில் மேகத்தைத் தூது விடுவதாக ஒரு பாடல் உண்டு. அதைவிட மேகத்துடன் பேசுகின்ற பாடலென்றும் அதைச் சொல்லலாம்.
நான் முரசொலியில் பணியாற்றியபோது திருக்குறளைப் பற்றி ஒரு கவியரங்கம் கலைஞர் தலைமையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் ஒரு தலைப்பில் பாட இருந்த கவிஞர் எம்.கே. ஆத்மநாதன் வரமுடியாத சூழ்நிலை. அதனால் "முத்தாரம்' பத்திரிகையில் பணியாற்றிய அண்ணன் கயல் தினகரன், ""ஆத்மநாதனுக்குப் பதிலாக நீங்கள் பாடுகிறீர்களா?'' என்று என்னைக் கேட்டார்.
""நாளைக்குக் கவியரங்கம் இன்றைக்குச் சொல்கிறீர்களே? பகல் ஷிப்டு முடிவதற்கு ஐந்து மணிக்கு மேலாகுமே. அதற்கு மேல் எப்படி எழுதுவது?'' என்றேன். ""இரவிலே எழுதுங்கள்'' என்றார். ""முடியாது'' என்றேன். ""கலைஞர்தான் சொல்லச் சொன்னார்'' என்றார். அதன் பிறகு நான் மறுத்துப் பேசவில்லை.
வேலை முடிந்ததும் ஆறு மணியளவில் ராயப்பேட்டையிலிருந்த ஆத்மநாதன் வீட்டிற்குச் சென்று, ""திருக்குறளைப் பற்றி நீங்கள் பாட இருந்த தலைப்பில் நான் பாட இருக்கிறேன். நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பதை வாசித்துக் காட்ட முடியாமா? அதிலிருந்து எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன்'' என்றேன்.
""எழுத எனக்கு நேரம் இல்லாததால்தான் நான் கவியரங்கில் கலந்து கொள்ளவில்லை. நீங்களே சிந்தித்து ஏதாவது எழுதிக் கொள்ளுங்கள்'' என்றார். அப்போது ஒரு பாட்டு இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது. அந்தப் பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன். அந்தப் படத்தையும் பலமுறை பார்த்திருக்கிறேன். பாடலாசிரியர் பெயரை வானொலியில் சொன்ன பிறகுதான் அது ஆத்மநாதன் எழுதிய பாடலென்று தெரியவந்தது.
""அவரிடமே இது நீங்கள் எழுதிய பாடலா? அருமையாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடலென்றும் இது. கு.மா. பாலசுப்பிரமணியம் எழுதிய பாடலென்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன்'' என்றும் கூறினேன்.
அவர் சிரித்துக் கொண்டார். அந்தப் பாடல் இதுதான்.
""வெண்முகிலே கொஞ்சநேரம் நில்லு - என்
கண்ணீரின் கதைகேட்டுச் செல்லு
சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு - இல்லை
என்னையேனும் அங்கழைத்துச் செல்லு
உறங்காமல் விழியிரண்டும் உறங்குவதாய்ச் சொல்லு
உயிர்அங்கே உடல் இங்கே உள்ள தென்றும் சொல்லு
உருவிழந்து மகிழ்விழந்து உருகுவதாய்ச் சொல்லு
உணர்விழந்து போகுமுன்னே ஓடிவரவும் சொல்லு
ஆடும்மயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு
அழகுநிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு
வருவதற்குள் நீவிரைந்து வந்துபதில் சொல்லு''
அந்தப் படத்தில் இந்தப் பாடல் மிகவும் பிரபலமான பாடல். இதுபோல் சிட்டாடல் ஸ்டூடியோ தயாரித்த "மல்லிகா' என்ற படத்தில் டி.ஆர். பாப்பா இசையில் இவர் எழுதிய "நீல வண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் நான் அறிவேன் - கண்ணா என் கையைத் தொடாதே' என்ற பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்', "நல்லவன் வாழ்வான்', "திருடாதே' ஆகிய படங்களிலும் பாடல் எழுதியிருக்கிறார்.
"முகிலினங்கள் அலைகிறதே' என்ற வைரமுத்தின் பாடலைச் சொல்ல வந்தபோது ஆத்மநாதனின் பாடலைப் பற்றியும் சொல்லத்தோன்றியது. "மேகமே மேகமே பால்நிலாத் தேயுதே' என்று "பாலைவனச் சோலை' என்ற படத்தில் வைரமுத்து எழுதிய பாடல், புலமைப்பித்தன் எழுதிய "கல்யாணத் தேன்நிலா காய்ச்சாத பால்நிலா' என்ற பாடலைப் போல் அந்நாளில் என்னை மயக்கிய பாடல்களில் ஒன்று. சங்கர் கணேஷ் இசையில் நான் பாடல் எழுத உட்காரும்போதெல்லாம் சங்கரிடம், ""வைரமுத்து எழுதி வாணி ஜெயராம் பாடிய "மேகமே மேகமே' பாடலை ஒருமுறை பாடுங்கள். அதற்கப்புறம் நான் எழுதுகிறேன்'' என்பேன். ஏனென்றால் அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் அவர்தான்.
திரையுலகில் ஆரம்ப காலத்தில் வைரமுத்து வளர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் இளையராஜா. இந்த அளவுக்கு எந்தக் கவிஞருக்கும் அவர் வாய்ப்புக் கொடுத்ததில்லை.
பழ. கருப்பையா தயாரித்த "இன்று நீ நாளை நான்' என்ற படத்திற்கு, ""பாடல்கள் எல்லாவற்றையும் நீங்கள்தான் எழுதுகிறீர்கள். அதனால் கதையை முழுவதும் படித்துவிடுங்கள்'' என்று அந்தக் கதைப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார், அந்தப் படத்தின் இயக்குநரும் நடிகருமான மேஜர் சுந்தரராஜன். யார் இசையென்றேன். ""எம்.எஸ்.விசுவநாதன்'' என்றார்.
ஆனால் இளையராஜா என்று முடிவான பிறகு வைரமுத்துதான் அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். எப்படி வாலிக்கு ஒரு எம்.எஸ்.வி. கிடைத்தாரோ, அதைப் போல அன்றைக்கு வைரமுத்துக்கு ஒரு இளையராஜா கிடைத்தார். அவரை விட்டுப் பிரிந்த பிறகு, அதைவிட அதிக அளவில் பாடல்கள் எழுதி பல இசையமைப்பாளர்களை உருவாக்கியவர் வைரமுத்து. இன்றைய திரைப்படக் கவிஞர்களில் அவருக்கிணையாக எவரையும் சொல்ல முடியாது.
"சலசல சலசல இரட்டைக்கிளவி' என்ற இலக்கணக் குறிப்பைப் பாடல் ரசிகர்களுக்கு முதன்முதல் தந்தவர் அவர்தான். கவிதைச் சுரங்கத்தின் கறுப்பு வைரம்தான் வைரமுத்து.
அண்மையில் காமராஜர் அரங்கத்தில் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளைப் பற்றி ஒரு கட்டுரையை அரங்கேற்றம் செய்தார். பிரபலமான அரசியல் கட்சித் தலைவர் பேச வந்தால் எவ்வளவு கூட்டம் வருமோ அவ்வளவு கூட்டம் அன்றைக்கு வந்தது. அந்தக் கூட்டம் வெறும் இலக்கிய உணர்வின் அடையாளமாக வந்த கூட்டமல்ல. தமிழ் இனத்தின் ஆவேச எழுச்சிக் கூட்டமாக இருந்தது.
அந்த அரங்கில்தான் நீட் தேர்வை எதிர்த்து தனது ஆசிரியர் பணியைத் துறந்து சமுதாயப் பணியாற்ற வந்த சபரிமாலா என்ற புரட்சிப் பெண்ணைக் கண்டேன். அவர் வேலையை ராஜினாமா செய்தபோது, சோலை தமிழினியன் நடத்திய ஒரு இலக்கிய விழாவில் பேசும்போது கூட சபரிமாலாவின் துணிச்சலைப் பாராட்டிப் பேசினேன். வைரமுத்து விழாவில்தான் அவரை நேரில் பார்த்தேன். இப்படிப்பட்ட வீராங்கனைகள் தாம் இன்று நாட்டுக்குத் தேவை.
தனித்தமிழ் இயக்கம் எதனால் தோன்றியது என்று வைரமுத்து தெளிவாகப் பேசினார். அப்போது 1927-இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழா நிகழ்ச்சிதான் என் நினைவுக்கு வந்தது.
அந்த விழாவுக்குத் தலைமை வகித்தவர் மறைமலை அடிகள். ""சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்'என்று அப்பர் பெருமான் பாடியிருக்கிறார். ஜலம் என்ற வட சொல்லை சலம் என்று தமிழில் கையாண்டிருக்கிறார். ஆகவே நாமும் வடசொல் கலந்து எழுதுவதில் தவறில்லை'' என்று பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பேசினார்.
உடனே மறைமலை அடிகள் எழுந்து, ""சலம் என்பது வடசொல் என்று யார் சொன்னது? சலசல என்று ஓடுவதால் அதற்குப் பெயர் சலம். இது தமிழ்ச்சொல்தான். இது காரணப் பெயர். சல சல மும்மதம் மொழியும்' என்று சங்கப்பாடலில் ஒரு வரி வருகிறது. சலம் என்ற தமிழ்ச் சொல்லைத்தான் வடமொழியாளர்கள் ஜலம் என்று மாற்றிக் கொண்டார்கள். இதெல்லாம் தெரிந்து பேசவேண்டும்'' என்று கூறினார். இதுதான் தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்ட முதல் பொது நிகழ்ச்சியென்றும் சொல்வார்கள்.
கவிஞர் வைரமுத்து கட்டுரை வாசிப்பைக் கேட்டுக்கொண்டிருந்தபோது இதெல்லாம் என் நினைவுக்கு வந்தது. சாரதா நம்பி ஆரூரன் எழுதிய "தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலில் கூட நான் சொன்ன நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தனித்தமிழ் இயக்கம் இன்று என்னானது? என்ற கேள்வி என் மனத்தில் எழுந்தது.
(இன்னும் தவழும்)
படங்கள் உதவி: ஞானம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.