

தமிழுக்குச் சங்கம் வைத்த மதுரை மாநகரின் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த அமைப்புகளில் தியாகராஜர் கல்லூரிக்கு தனி இடமுண்டு. கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் உணர்வுமிக்க அரசியல் தலைவர்கள் என பல தமிழ் ஆளுமைகளை உருவாக்கிய பெருமை அக்கல்லூரிக்கு உண்டு. அத்தகைய கல்லூரியின் செயலராக இருப்பவர் ஹரிதியாகராஜன்.
இளந்தொழிலதிபராக அறியப்பட்ட இவர் தற்போது சைவ சித்தாந்தத்தில் ஆற்றிவரும் உரைகள் மற்றவர்களால் கவனம் பெற்றுள்ளன. அவரது தாயார் உமாகண்ணன் மதுரையின் பாரம்பரியத்தை குறிப்பாக மதுரை மல்லியை உலக அளவில் புகழ் பெறவைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஹரிதியாக
ராஜனுடன் பேசியதிலிருந்து:
தாத்தா கருமுத்து தியாகராஜர் வழியில் தமிழை முன்னிலைப்படுத்தி செயல்பட உள்ளீர்களா?
தாத்தா தனித்தமிழ் இயக்கத்தில் தீவிரப் பற்றாளர். அவர் ஸ்ரீ, ஸ்ரீமதி என்பதை திரு, திருமதி என தமிழில் விளக்கியவர். புதுப்புது தமிழ்ச் சொற்களை கண்டறிவதில் ஆர்வம் கொண்டவர். "தமிழ்நாடு' பத்திரிகையில் அவரது செயல்பாடு தமிழை நவீன காலத்திலும் அதன் அடையாளம் மாறாமல் காத்திருக்கிறது. சங்க இலக்கிய கதாபாத்திரங்களை திரைப்படங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தினால், இன்றைய தலைமுறை அதை எளிதில் அறியும் வாய்ப்பு ஏற்படும்.
தொழிலதிபர், கல்லூரி செயலர் என்ற நிலையைத் தாண்டி தமிழ் இலக்கியம், சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு என உங்களால் எப்படி செயல்படமுடிகிறது?
ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு பிடிக்கும். சிலருக்கு கார் ஓட்டுவதும், சிலருக்கு இசை ரசிப்பதும் பிடிக்கும். அதேபோல எனக்கு ஆன்மிகம் சம்பந்தமான இலக்கியங்களை படிக்கப் பிடிக்கிறது. குறிப்பாக திருமுறையில் சேக்கிழார் பெரியபுராணத்தை விரும்பிப் படித்தேன்.
பக்தி இலக்கியங்களை நவீன கால அறிவியலோடு ஒப்பிட்டுப்பேசுவது குறித்து?
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்பதைப் போல நம் முன்னோர் நமக்கு அனைத்து செல்வங்களையும், வளங்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.
பெரியபுராணத்தில் 63 நாயன்மார்கள் வரலாறை சேக்கிழார் கூறுகையில், ஊரின் பெருமை, அதன் நீர்நிலை, மரங்கள் என சுற்றுச்சூழலை விளக்கியுள்ளார். அதை தற்போதைய சுற்றுச்சூழலியல் கல்வியாக கருத முடிகிறது.
நமது கிராம அமைப்பு, கோயில்கள் அமைப்பு என பார்த்தால் உலக அளவிலான நாகரீகத்தின் உச்சநிலையாகவே நமது கோயில்கள் திகழ்கின்றன. வடஇந்தியாவில் அரசர்களின் அரண்மனைகளே பிரமாண்டமாக அமைக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் திருக்கோயில்களே அரண்மனைகளை விட பிரமாண்டமாக அமைக்கப்பட்டன.
தமிழின் சங்ககால, பக்தி இலக்கியங்கள் எந்த அளவுக்கு இளம்தலைமுறையிடம் எடுபடும்?
நமது பக்தி இலக்கியங்களில் கூறப்படாத அறிவியலே இல்லை. திருவாசகம், சிவபுராணத்தில் "அணுவிற்கு அணுவாய்..அப்பாலுக்கு அப்பால்' என்கிறார் மாணிக்கவாசகர். அதையே கம்பரும் "ஓர் அணுவை நூறு கூறுகளாக பிளக்கலாம்' என்கிறார். ஆகவே நமது பக்தி இலக்கியங்கள் நவீன கால அறிவியலை அக்காலகட்டத்திலேயே விளக்கியுள்ளன. அறிவியல் அறிஞர் ஹாக்கின்ஸ் கொள்கை நமது பக்தி இலக்கியங்களில் பரவிக்கிடக்கிறது என்பதே உண்மை. தற்கால அறிவியலும் எல்லா இடத்திலும் அணு நிறைந்திருக்கிறது என்பதாக கூறுகிறது.
நமது தமிழாசிரியர்கள் ஆர்வம் ஏற்படும் வகையில் மாணவர்களுக்கு தமிழை கற்றுத்தருவது அவசியம். அப்படி கற்றுத்தந்தால் பாரதி கூறியது போல தமிழ் எக்காலத்திலும் மேன்மையுறும் என்பதில் சந்தேகமில்லை.
புத்தகத் தொகுப்பாசிரியராக மாறியுள்ளீர்களே?
நான் இங்கிலாந்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். எனது தந்தையார் ஆன்மிகம், தொழில் ஆகியவற்றில் தாத்தாவின் அடியொற்றி வருபவர். இந்த நிலையில், எனது தாத்தாவுக்குச் சொந்தமான கொடைக்கானல் பங்களாவுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு சென்றபோது தாத்தாவின் சில குறிப்புகள் கிடைத்தன. அதில் அவர் மேடையில் ஆற்றிய சொற்பொழிவுகளின் குறிப்புகள் கிடைத்தன. அதைப் படித்தபோதுதான் நமது தமிழ் பாரம்பரியம், தேசத்தின் பெருமைகளை உணரமுடிந்தது. அவரது கருத்துகள் வியக்க வைத்தன. இன்றைய சமூகத்துக்கு மிகப்பொருத்தமான கொள்கைகளை அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்தியிருப்பது வியக்கவைத்தது. அதை அப்படியே தொகுத்தேன். 2016-ஆம் ஆண்டு அவரது நினைவு நாளில் ஆவணப்படுத்த வேண்டிய அவரது அரிய கருத்துகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் தொகுத்தேன். காலம் கனிந்தது, புத்தகமாகியது.
படம்: பி.விஜயகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.