45 வயதாகும் தேவேந்தர் பால் சிங். இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்தவர். மாரத்தான் பந்தய வீரர். உலகம் முழுவதும் 16 ஆண்டுகளாக நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று அசத்தி வருகிறார். ஆனால் அவர் ஒரு கால் இழந்தவர் என்று சொன்னால் நம்புவீர்களா? இதற்கு பின்னால் இருக்கிறது அந்த தன்னம்பிக்கை கதை.
25 வயதான துடிப்பான இளைஞரான தேவேந்தர் பால்சிங் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பணியமர்த்தப்பட்டார். மேஜரான அவர் தலைமையின் கீழ் பல ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நிகழ்ந்த அந்த கசப்பான நிகழ்வு.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற போரின் போது படுகாயம் அடைந்தார். அதுவும் பீரங்கி குண்டு என்றால் சும்மாவா. அப்போது, தசைகள் பிய்ந்து தொங்க, எலும்புகள் நொறுங்கி, வயிறு கிழிந்து குடல்கள் வெளியே தெரிய, மேஜர் தேவேந்தர் பால் சிங்கை, சக வீரர்கள் தூக்கிக் கொண்டு வந்து அங்கிருந்த ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பார்த்த ராணுவ மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து, அவரது உடலை தற்காலிக சவக்கிடங்கில் வைக்குமாறு கூறினார். ஆனால், மேஜர் சிங் இறக்கவில்லை. அவர் இறக்கவும் விரும்பவில்லை. வாழவேண்டும். எப்படியாவது பிழைத்து விடவேண்டும் என அந்தச் சூழலிலும் நம்பிக்கையுடன் இருந்தார். நம்பிக்கை உடையவர்களை இறைவன் என்றும் கை விடுவதில்லை என்பதற்கிணங்க, அங்கு வந்த மற்றொரு மருத்துவர், மேஜர் சிங் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்தார்.
பொதுவாக, ராணுவ பீரங்கியின் குண்டு வீச்சில் 8 அடிக்குள் சிக்கிய யாரும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் மேஜர் சிங் உயிருடன் இருந்தார். அந்த குண்டு அவர் அருகே விழுந்து அவரை சின்னாபின்னமாக்கி புதைக்க முயற்சித்தது. ஆனால் அவர் முழு நம்பிக்கையுடன் எப்படியும் பிழைத்தெழ வேண்டும் என தீவிர நம்பிக்கைக் கொண்டார்.
தொடர்ந்து மேஜர் சிங்கிற்கு மருத்துவச் சிகிச்சை தொடங்கப்பட்டது. கிழிந்து தொங்கிய அவரது வயிற்றில் சிதைந்திருந்த குடல் பாகங்கள் அகற்றப்பட்டன. அவரது கால் முற்றிலும் சேதமடைந்திருந்ததால் வேறுவழியின்றி அகற்றப்பட்டது. இவ்வாறு பல்வேறு பாகங்களை அகற்றியும், தீவிர சிகிச்சையளித்தும் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.
தொடர்ந்து ஓர் ஆண்டு காலம் மருத்துவமனையில் இருந்து மேற்கொண்ட தீவிர சிகிச்சையின் பலனாக மேஜர் சிங் பிழைத்துவிட்டார். ஆனால், அவரால் எழுந்து நடமாடத்தான் முடியுமா என்பது சந்தேகமே என மருத்துவர்கள் சொன்னார்கள்.
அப்போதுதான் மேஜர் சிங் தனது மனதில் உறுதிபூண்டார். நான் எழுந்து நடக்கவேண்டும். நான் ஓட வேண்டும். சமுதாயத்தில் முன்னுதாரணமாக வாழவேண்டும் என நினைத்தார்... நினைத்ததை செய்தும் காட்டிவிட்டார்...
ஆம்..அவர் மரணத்தை வென்றது ஓர் ஆச்சரியமான கதை என்றால், இன்று அவர் "இந்தியன் பிளேட் ரன்னர்' என்று அழைக்கப்படும் பிரபலமான மாரத்தான் ஓட்ட வீரர். 16 ஆண்டுகளாக பல்வேறு மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று வருகிறார். மேலும், அவர் ஓட்டத்தில் லிம்கா சாதனையும் படைத்துள்ளார்.
சூழ்நிலையை விரைந்து உள்வாங்கிக் கொள்ளும் அவரது குணமே அன்று அவர் உயிரைக் காப்பாற்றியது. இன்று அவரை ஓர் சாதனையாளராக மாற்றியுள்ளது. அவர் தற்போது தனது இரண்டாவது வாழ்க்கையை வெற்றிகரமாக வாழக் கற்றுக் கொண்டுள்ளார்.
""நான் எனது நிலை குறித்து வருந்தி முடங்கியிருந்தால், வாழ்க்கை என்னை முடக்கியிருக்கும். நான் எனது உடலை ஓர் இயலாமை எனப் பார்க்கவில்லை. இதை ஓர் சவாலாகவே பார்த்தேன். நான் ஓடுவதற்கு தயாராக இரண்டு மணி நேரம் செலவிட வேண்டும். எனக்கான இந்த மாற்றம் ஓர் இரவில் நடைபெறவில்லை. நான் இவ்வாறு ஊனமுற்றதற்கு முன்பு திறமையான ஓட்டப் பயிற்சியாளரும் அல்ல. ஆனால் என் காயங்களுக்கு அப்பால் செல்ல, என்னை நானே ஊக்குவித்துக்கொள்ள ஓட விரும்பினேன்'' என்கிறார்.
தன்னம்பிக்கை மனிதனுக்கு எத்தனை முக்கியம் என்பதை தேவேந்தர்பால்சிங்கிடம் கற்றுக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


