பறவைகளுக்காக வாழ்ந்த அதிசய மனிதர்

இந்தியாவின் பறவை மனிதன் என அழைக்கப்படுபவர் சலீம் அலி. முதன் முதலாகப் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை இந்தியாவில் நிகழ்த்தியவர். 65 ஆண்டுகள் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவரின்
பறவைகளுக்காக வாழ்ந்த அதிசய மனிதர்
Updated on
3 min read

இந்தியாவின் பறவை மனிதன் என அழைக்கப்படுபவர் சலீம் அலி. முதன் முதலாகப் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை இந்தியாவில் நிகழ்த்தியவர். 65 ஆண்டுகள் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவரின், பறவைகள் குறித்து எழுதி வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் பெற்றவை. கடந்த வாரம் இவரது பிறந்த நாள் "பறவைகளைக் காப்போம்' என்ற பெயரில் அனுசரிக்கப்பட்டது.
 சலீம் மொய்சுதீன் அப்துல் அலி 1896- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 -ஆம் தேதி அன்று மும்பாயில் கேத்வாடி என்ற ஊரில் குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை பெயர் மொய்சுதீன், தாய் - ஜீனத் உன்னிசா. சலீம் அலிக்கு ஒரு வயது இருக்கும் போது இவரது தந்தையும், மூன்று வயதாக இருக்கும் போது தாயும் இறந்துவிட்டார்கள். அதன் பின் இவரது மாமாவான அம்ருதீன் தான் இவரை வளர்த்து ஆளாக்கினார்.
 பறவைகளையும், விலங்குகளையும் அம்ருதீன் வேட்டையாடுவார். சுடுவதில் திறமைசாலியாக இருந்த சலீம் அலி பறவைகளைப் பார்த்தவுடன் அதனைச் சுடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது பத்தாவது வயதில் அப்படி ஒரு குருவியைச் சுட்ட போது அது துடிதுடித்து தனது கண் முன் இறப்பதை கண்டார். அதுவே அவரது வாழ்க்கையை மாற்றிய நிகழ்வு. அதன் கழுத்தில் இருந்த சின்ன மஞ்சள் திட்டு அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை அவருக்கு ஏற்படுத்தியது. இந்தக் கேள்விக்கு அவரது மாமாவுக்கும் பதில் தெரியவில்லை. அதனால் சலீம் அலியை மும்பாய் இயற்கை வரலாற்று கழகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான பறவைகளை உயிரற்று மாதிரிகளாக வைக்கப்பட்டிருந்தன.
 அன்று முதல் சலீம் அலிக்கு பறவைகளைப் பற்றிய ஆர்வம் இன்னும் அதிகரித்தது. அடுத்து, பறவைகள் எப்படிப் பறக்கின்றன, என்னவெல்லாம் சாப்பிடும், எப்படி வாழ்கின்றன என பல கேள்விகள் அவரிடம் எழுந்தன.
 கல்லூரி முதலாம் ஆண்டுக்குப் பிறகு படிப்பைத் தொடர சலீம் அலிக்கு விருப்பம் இல்லாமல் போனது. அதனால் அவரது குடும்பத் தொழிலான சுரங்கம், மர வேலைகளைப் பார்ப்பதற்காக, 1914 -ஆம் ஆண்டு பர்மாவுக்குச் சென்று தொழிலில் ஈடுபட்டார். ஆனாலும் அவருக்குத் திருப்திகரமாக இல்லை.
 1917- ஆம் ஆண்டு அவரது மாமா அம்ருதீன் இறந்ததனால் சலீம் அலி மீண்டும் மும்பாய்க்கு திரும்பினார். அங்கு தாவர் கல்லூரியில் வணிகவியல் படிக்கத் தொடங்கினார். கூடவே பறவைகள் மீது இருந்த ஆர்வத்தால் செயின்ட் சேவியர் கல்லூரியில் அவர் விலங்கியல் பிரிவிலும் சேர்ந்தார்.
 அப்போது விலங்கியல் துறையின் தலைவராக இருந்த எதெல்பெர்ட் பிளாட்டர் என்பவர் பறவைகள் மீதான இவரது ஈடுபாட்டை அறிந்து, பறவைகள் பற்றிய எல்லா விஷயங்களையும் தெளிவாக விளக்கினார். பறவைகளின் குடும்ப விவரங்கள், உடல் அமைப்புகள், வாழ்க்கை முறைகள், வெளித்தோற்றங்கள், சிறப்பியல்புகள் என்று எல்லாவற்றையும் கற்க ஆரம்பித்தார் சலீம் அலி.
 1918 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவருடைய 18 வயதிலேயே தெஹ்மினா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தெஹ்மினா மற்றவர்கள் போல இல்லாமல் சலீம் அலியின் பறவை ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். எனினும் வறுமை இவர்களை வாட்டியது. இந்திய விலங்கியல் கழகத்தில் ஒரு பறவையாளர் வேலை காலியாக இருந்த போதும், அந்தப் பணிக்கு தேவையான பல்கலைக்கழகப் பட்டம் இல்லாததால் சலீம் அலிக்கு அந்த வேலையும் கிடைக்கவில்லை. இருந்தாலும் மியூசியம் ஒன்றில் வழிகாட்டி பணி கிடைத்தது.
 பறவைகளைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அங்கு வருபவர்களிடம் சொல்லுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சலீம் அலி. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரால் அந்தப் பணியைத் தொடர முடியவில்லை. பறவைகள் பற்றி இன்னும் முறையாகக் கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சலீம் அலி, ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்குச் சென்றார். அங்கு இர்வின் ஸ்ட்ராஸ்மன் என்பவரிடம் பறவைகள் பற்றிய பல விஷயங்களைக் கற்றார்.
 1930 - ஆம் ஆண்டு பெர்லினில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பினார் சலீம் அலி. அப்போது நிதிப்பற்றாக்குறை காரணமாகப் பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் அவர் ஏற்கெனவே பார்த்த வழிகாட்டி பணியும் இல்லை. அதனால் மும்பையிலுள்ள கடலோர கிராமத்தில் வசிக்க ஆரம்பித்தார். அங்குத் தோட்டத்துடன் கூடிய வீட்டில் வாழ்ந்தார். அது சலீம் அலிக்கு நல்லதாகவே அமைந்தது. ஏனெனில் அவர் வீட்டின் அருகே இருந்த மரங்களில் ஏராளமான தூக்கணாங்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்தன. அந்த அனுபவம் அவரை தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி ஒரு நூல் எழுதத் தூண்டியது. அதே ஆண்டுத் தூக்கணாங்குருவிகள் பற்றி ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுப் புகழ் பெற்றார்.
 1939 -ஆம் ஆண்டு சலீம் அலியின் மனைவி தெஹ்மினா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். அது சலீம் அலியை மிகவும் பாதித்தது. அதன் பிறகு தன் வாழ்வின் முழுநேரத்தையும் பறவை ஆராய்ச்சிக்காகவே செலவழிக்க ஆரம்பித்தார். பறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்தார் சலீம் அலி. ஒரு கட்டத்தில் சலீமுக்கு பறவைகளைப் படம் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
 1950 -ஆம் ஆண்டு மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் காப்பாளராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற, 10 -ஆவது உலக பறவையியல் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
 பறவைகள் பாதுகாப்பிலும் சலீம் அலியின் பங்கு அளப்பரியது. அவர் காலத்தில் பிரதமர்களாக இருந்த ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் உதவியுடன் சலீம் அலி இந்தியாவில் பறவைகள் குறித்து ஆய்வுகளை மேம்படுத்த வழி செய்தார். சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்து, சலீம் அலி அன்றே சுட்டிக்காட்டியதுடன், சுற்றுச் சூழலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

பறவையியல் தொடர்பான பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். சலீம் அலி இயற்கை வரலாற்று நிறுவனத்தின் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை, பறவைகள் பற்றிய அறிவோடு அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 1,300 பறவை வகைகளை ஆவணப்படுத்தித் தெளிவாகவும், எளிமையாகவும் எழுதியுள்ளார்.
 1985- ஆம் ஆண்டு சலீம் அவருடைய சுய சரிதையான "ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற நூலை எழுதினார். அவரது பத்தாவது வயதில் அவர் சுட்டு வீழ்த்திய குருவியால் தான் அவருக்குப் பறவைகள் குறித்த ஆர்வம் ஏற்பட்டது என்பதால் தனது சுயசரிதைக்கு அதனையே தலைப்பாக வைத்தார். பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அனைவருக்கும் சலீம் அலியின் புத்தகங்கள் வரப்பிரசாதமாக இருக்கும். சலீம் அலியின் உழைப்பால் தான் இந்தியப் பறவைகள் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
 பறவை ஆராய்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து எளிமையாய் வாழ்ந்த சலீம் அலி, புற்றுநோய் பாதிப்பால் 1987- ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி அவருடைய 90 ஆவது வயதில் காலமானார்.
 சலீம் அலி 1958- ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷண் விருதையும் 1976 - ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் பெற்றார். 1985 -ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசாங்கம் அவருடைய மறைவுக்குப் பின் கோவையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தை நிறுவியது. சலீம் அலிக்கு மரியாதை செய்யும் வகையில், இந்திய அரசு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பறவைகள், காட்டுயிர் சரணாலயங்களுக்குச் சலீம் அலியின் பெயரையும் சூட்டி கௌரவித்துள்ளது.
 பறவைகளின் பாதுகாவலனாக இருந்த சலீம் அலி இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவரால் இன்று பல வகை பறவையினங்கள் அழியாமல் உயிருடன் இருக்கின்றன என்பது வரலாற்று சான்று.
 -வனராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com