கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும்!

""வாழ்நாள் பூரா ஒரு பெண்ணை நினைச்சுக்கிட்டு ஓர் ஆம்பளையால வாழ முடியும்....  ஆனா ஒரு பொம்பளைக்கு அப்படி இல்ல...'' இதுதான் "நெடுநல்வாடை'  படத்தின் ஒன் லைன்.   இரண்டே வசனங்களில் கதையின்
கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும்!
Updated on
2 min read

""வாழ்நாள் பூரா ஒரு பெண்ணை நினைச்சுக்கிட்டு ஓர் ஆம்பளையால வாழ முடியும்....  ஆனா ஒரு பொம்பளைக்கு அப்படி இல்ல...'' இதுதான் "நெடுநல்வாடை'  படத்தின் ஒன் லைன்.   இரண்டே வசனங்களில் கதையின் பேசுப் பொருள் பேசி அமர்கிறார் இயக்குநர்  செல்வகண்ணன். இயக்குநர்கள்  காந்தி கிருஷ்ணா, ராஜேஷ் எம்.செல்வா, சாமி ஆகியோரிடம் பணியாற்றியவர்.  "நெடுநல்வாடை'... தலைப்பு, உங்களின் தமிழ்ப் பற்றை காட்டுகிறது.... பாராட்டுகள்...


நெடுநல்வாடை என்பது தலைவன், தலைவி பிரிவை பற்றி பேசும் பகுதி. இந்தக் கதையின் பேசுப் பொருள்களில் அதுவும் ஒன்று என்பதால், இது பொருந்தி வந்தது. 


இளங்கோ, அமுதா இந்த இரண்டு பேருக்குமான காதலும், அன்பும்தான் படம். வாழ்க்கையை ரசனையாக, அதன் போக்கில் காமெடியாக, உற்சாகமாகவே வாழ்கிறவன்...இளங்கோ. வசதி வாய்ப்பு, பெரும் தேடல்கள் என எதுவும் இல்லாத மனசுக்காரன்.  எந்த பிரமிப்பும் ஏக்கமும் அவனுக்கு இல்லை. யார் குறித்த அச்சமும் இல்லை. வாழ்க்கைப் பற்றிய குழப்பமோ, சிக்கலோ இல்லை. மிக எளிமையாக இந்த வாழ்க்கையை அணுகுகிறான்.  அவன் மீது கொண்ட அன்பு மட்டுமே இந்த வாழ்வின் நிரந்தரம் என்ற  மனப்பக்குவம் கொண்ட மனுஷி அமுதா. இந்த இரண்டு பேருக்கும் அவர்களின் காதல்தான் உலகம். வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்களுக்கு ஒரு பிரச்னை. அதன் தீர்வும், அதற்கான நிகழ்வுகளும்தான் கதை.  இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை எதுவும் இல்லாத ஒரு எளிய வாழ்க்கைதான் படம். அழகு, நிறம், பணம் என தினம் தினம் எழுந்து வருகிற அத்தனை   அபத்தங்களையும் அடித்து நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன் வைக்கிற காதல். எதையும் அடைந்து விட வேண்டும் என்கிற வெறி இல்லை. யாரையும் புறந்தள்ளி விடுகிற, கவிழ்த்து விடுகிற எத்தனிப்பு இல்லை. இப்படி ஒரு மனம் வாய்த்து விட்டால் அதை விடக் கொடுப்பினை ஏது.

இந்த அளவுக்கு மென்மையான ட்ரீட்மெண்ட் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்குமா...?

நிச்சயமாக... பெரும் நம்பிக்கை உண்டு. புதுமையும், ரசனையும்தான் இதற்கு காரணம். சேரன், தங்கர்பச்சான் படங்களில் ஒரு நம்பிக்கை இருக்குமே, அதுதான் இதன் ஃபார்முலா, பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை. அவர்களின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம். இந்த வரியை இப்போது வாசிக்கிற உங்களை விட, என்னைவிட, நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகா, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, சாமானியனாக ஒருவன் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்து போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போதும் அன்பும், பரிவும் நிரந்தரம். இன்னொரு இடம் கதையில் இருகிறது... அது இன்னும் வலிமை தரும் பகுதி. இன்னும் அறுந்து போகாத வாழ்க்கையை துப்பறிந்து தந்திருக்கிறேன். தாத்தாவுக்கும், மகள் வழி பேரனுக்குமான அன்புதான் அது. உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும், அதன் உச்சத்தையும் சொல்லுவதாக இருக்கும். ""அம்மாவுக்கு சொத்துல பங்கு இருக்கா தாத்தா...?'' 

""இருந்து என்னடா செய்ய... ஊரு பய கொடுக்க வுடுவானா...''

""ஏன்...'' 

""பொம்பள பிள்ளையில்ல... அதுதான்...'' இது கதையின் முக்கிய கருவை சுமக்கும் வசனம். தாத்தாவுக்கும் பேரனுக்குமான உரையாடல். இந்த பின்னணிதான் முழு கதையும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான தாத்தாக்களை நினைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும்.  

பூ ராமு, செந்தி, மைம் கோபி என அழுத்தமான நடிகர்கள் இருக்கிறார்கள்...

இந்தக் கதையைப் போலவே எல்லோரும் எளிமையானவர்கள். பூ ராமுதான் இதன் முக்கிய கதாபாத்திரம். கதையை தாங்கி பிடிக்கிற ஆள். அவர் மீது  எந்த லேபிளையும் ஒட்டி விட முடியாது.  ஒரு கலைஞனாக கதையை கையாளுகிற விதம் புத்தம் புதிது. மனசுக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அது ஒரு கலைஞனுக்கு முக்கியமான ஒன்று. அது போல்தான் செந்தி, மைம் கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர், ஐந்து கோவிலான் என எல்லோருமே. நான் பார்த்து வந்த வாழ்க்கையை, எனக்கு முன்னே கொண்டு வந்து தந்திருக்கிறார்கள். நன்றி.

கவிஞர் வைரமுத்து... என்ன சிறப்பு... 

எந்த சூழலையும் வரியால் நிறைத்து விடுகிற மனிதர். படத்துக்குப் பெயர் "நெடுநல்வாடை' என்ற போதே, அவருக்கு என்னைப் பிடித்து விட்டது. வெகுவாக பாராட்டினார். கதையை கேட்டு விட்டு, ""என் கிராமத்து வாழ்க்கையை மீண்டும் வாழுகிற உணர்வு மேலிட்டது'' என்றார். காதலையும், ப்ரியத்தையும், அன்பையும் வெளிப்படுத்துகிற சூழல் தாண்டி, மிச்சமிருக்கும் கிராமத்து வாழ்க்கையையும் நிரப்பியிருக்கிறார்.

ஒரு சூழலுக்கு இப்படி வரிகள் தந்தார் கவிஞர்.
வேட்டி ஒண்ணுதான் மிச்சம்..
நீ காட்டும் பாசம் அது உச்சம்..
வானம் பாத்து 
இந்த பூமி பொளந்திருக்கு... இந்த 
மேகம் துளியில்ல... 

நான்கே வரிகளில் கதையை உள்ளடக்கம் செய்து தந்தார் கவிஞர். ஜோஸ் ஃபிராங்க்ளின் அதை இசையால் நிரப்பி தந்திருக்கிறார். இப்படி இன்னும் பாடல்கள் மனம் தொடும் படி வந்திருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com