உலக சைக்கிள் தினம் ஏப்ரல்-3: சைக்கிளில் பயணம் செய்வோம்!

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகளை உணர்த்தும் வகையில், ஆண்டு தோறும் ஜூன்3-ஆம் தேதி உலக சைக்கிள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா சபை கடந்தாண்டு ஏப்ரல்12-ஆம் தேதி அறிவிப்பு
உலக சைக்கிள் தினம் ஏப்ரல்-3: சைக்கிளில் பயணம் செய்வோம்!
Updated on
2 min read


சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகளை உணர்த்தும் வகையில், ஆண்டு தோறும் ஜூன்3-ஆம் தேதி உலக சைக்கிள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா சபை கடந்தாண்டு ஏப்ரல்12-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு முதல் ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. 
உயர்ந்து வரும் பெட்ரோல் விலை பற்றிக் கவலைப்படும் நாம் சைக்கிளின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தவிர்க்க முடியாத வாகனமாகச் சைக்கிளே இருந்து வந்தது. பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோரும், பணிக்குச் செல்வோரும் சைக்கிள்களையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாளடைவில் சைக்கிள்களின் பயன்பாட்டைக் குறைத்து மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். 
இதனால் சைக்கிளை ஒரு பொருட்டாகக் கருதாமல், மோட்டார் வாகனங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் ஆண்டுதோறும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 
சைக்கிள்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்த காலகட்டங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது. விபத்துகளும் மிகவும் குறைந்திருந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் மோட்டார் வாகனங்களே, குறிப்பாக இரு சக்கர வாகனங்களே அதிகளவில் சிக்குகின்றன. இதில் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். பலர் நிரந்தரமாக உடல் உறுப்பை இழந்துவிடுகிறார்கள். 
இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை ஒவ்வொருவரும் கணிசமாகக் குறைத்துக்கொண்டால் பெட்ரோலுக்கான தேவை குறையும். அதற்காக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதல்ல. அவசியத் தேவைக்கு மட்டும அவற்றைப் பயன்படுத்தலாம். உலகின் சைக்கிள் தலை
நகரான டென்மார்க்கில் 50 சதவீதம் பேர் சைக்கிள்களையே பயன்படுத்துகின்றனர். சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னையிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் "ஸ்மார்ட் பைக்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
சுற்றுச்சுழல் பாதிக்கவும், புவி வெப்பமடையவும் முக்கியக் காரணமாக இருப்பது வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயுக்களே. இந்நிலையில் இரு சக்கர வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, சைக்கிள்களின் பயன்பாட்டை அதிகரித்தால் வளி மண்டல அடுக்கில் கரியமில வாயுக்கள் கலப்பதை கணிசமாகக் குறைக்கலாம். உலகின் காற்று மாசு நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என ஐ.நா. சபை கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
முன்பெல்லாம் சைக்கிள் பயன்பாட்டின்போது, அதை ஓட்டிச் செல்பவர்களுக்குப் போதிய உடற்பயிற்சியாகவும் விளங்கியது. ஆனால் இரு சக்கர வாகன பயன்பாட்டால், உடல் உழைப்புக்கு வேலையின்றிப் போனதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுத்து வருகிறது. சைக்கிள் பயன்பாட்டைத் தவிர்த்து உடற்பயிற்சிக்காக வீட்டிலும், உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்றும் சைக்கிள் ஓட்டும் பயிற்சியைப் பலர் செய்கின்றனர். இதற்கு மாறாகக் குறிப்பிட்ட பணிக்கு சைக்கிள்களை ஓட்டிச் சென்றால் உடல் நலனுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், உடலிலிருந்து 300 கலோரின் கொழுப்பு எரிக்கப்படுகிறது. சைக்கிள் ஓட்டும்போது கால் பாதத்தில் இருந்து மூளை வரை உடலின் அத்தனை உறுப்புகளும் இயங்கும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதால் ரத்த ஓட்டம் சீராகி, ரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் தடுக்கப்படுகின்றன. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி சர்க்கரை நோயால் வரும் பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது. உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்களுக்குச் சைக்கிள் ஓட்டுவது சிறந்த பயிற்சி ஆகும். 
சைக்கிள்களைப் பயன்படுத்த அரசும், தனியார் நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் ஊக்குவிக்க வேண்டும். சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்தியும் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சைக்கிள் வாங்குவோருக்கு குறிப்பிட்ட சலுகைகளை வழங்கி அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்பது சைக்கிள் ஆர்வலர்களின் கோரிக்கையாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com