

இன்று பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் பலர் வேலை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நான்கு இளைஞர்கள் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலையில் சுயதொழில் தொடங்கி வெற்றியும் கண்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த நவீன்குமார், கார்த்திக் சுகுமாரன், கார்த்திகேயன் மற்றும் மிதிலேஷ் குமார் ஆகிய நான்கு நண்பர்கள் பொறியியல் முடித்துவிட்டு வெவ்வேறு துறையில் பணியாற்றி வந்தனர்.
நிதி, விளம்பரம், மனிதவளம், என பல்வேறு துறைகளில் தாங்கள் பெற்ற அனுபவத்தை கொண்டு புதிதாக தொழில் தொடங்கி வெற்றியை நோக்கி பயணித்துள்ளனர். இனி நால்வரிடம் பேசியதிலிருந்து:
முதலில் நவீன் பேசத் தொடங்கினார்:
""நாங்கள் நான்கு பேரும் செம்பரபாக்கம் ஸ்ரீசாஸ்தா பொறியியல் கல்லூரியில் தான் படித்தோம். நான் படித்தது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன். மற்ற மூவரும் சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள். படிப்பு முடிந்ததும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி கொண்டு இருந்தோம். பணி முடிந்து நாங்கள் நால்வரும் ஒரு நாள் சந்தித்து கொண்டோம். . அப்போது தான் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. எங்கள் நால்வருடைய பலம் என்ன எதில் குறைபாடு உள்ளது என்பதை அலசி ஆராய்ந்தோம்.
முதலில் ஹவுஸ் கீப்பிங் தொடர்பான பணியில் இறங்கலாம் எனத் திட்டமிட்டோம். அது பாதியிலேயே நின்று விட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை. அடுத்த சந்திப்பில் முடிவு செய்தோம். இன்று நாம் பேசியதை நாளையே செயல்படுத்துகிறோம் என்று திட்டம் போட்டு இறங்கிய தொழில் தான் குல்பி வியாபாரம். குல்பி நாங்கள் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம் என்றால், எப்பவுமே குல்பி என்றால் மாஸ் தான். குல்பி சாப்பிடுவதற்கு நேரம் காலம் எதுவும் கிடையாது. மாநகரங்களில் பெரும்பாலும் இரவில் குல்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகம்.
நான்கு பேரும் பத்தாயிரம் முதலீடு செய்து இந்தத் தொழிலை தொடங்கினோம். "பூசோ குல்பி' ஆர்ர்க்ஷ்ர் ஓன்ப்ச்ண் என்ற பெயரில் நாங்களே குல்பியை தயாரித்தோம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் எங்கு கூட்டம் வருமோ அந்தப் பகுதியை தேர்ந்தெடுத்து நாங்களே குல்பி விற்றோம். வாங்கி சாப்பிடுபவர்களிடமே கருத்து கேட்டோம். அதில் அவர்கள் சொன்ன நிறைகளை வைத்துவிட்டு குறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரி செய்தோம். குறிப்பாக வாடிக்கையாளர்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும். பேக்கிங் பக்காவாக இருக்க வேண்டும் எனப் பல விஷயங்களை எங்களிடம் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து கடைகளுக்கு சென்று விற்பனை செய்யத் தொடங்கினோம். மார்க்கெட்டிங், தயாரிப்பு, நிதி விவகாரம் என எல்லாமே நாங்களே செய்தோம். இதில் வியாபாரம் என்பது சாதாரண விஷயம் இல்லை. அதில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. பால் மற்றும் பால்பொருட்கள் உற்பத்தியில், இந்தியா முன்னிலை வகிப்பதும் முக்கிய காரணம்'' என்கிறார் நவீன்.
""இந்த தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம் என்று யோசித்த போது எங்களுக்கு உதவியவர் சிறு தொழில் நிறுவனங்களின் துணை இயக்குநர் பாலாஜி. அவர் அரசுத்துறையில் வளர்ந்து வரும் தொழில்முனைவர்களுக்கு உள்ள பல்வேறு வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் என்ன என்பதை விளக்கினார்.
அந்தத் தகவலைப் பெற்று, வங்கியை அணுகினோம். அவர்கள் நாங்கள் குல்பி தயாரிக்கும் இடங்களை பார்வையிட்டு விற்பனை செய்யும் முறைகளைப் பற்றி கேட்டறிந்தனர். எங்களிள் ஆர்வம், ஊக்கம் போன்றவற்றை பார்த்துவிட்டு நாங்கள் கேட்ட தொகையை கடனாக கொடுத்தனர்.
அவர்களிடம் பெற்ற தொகையை வைத்து எங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு நகர்த்தினோம். தொழில் என்றால் ஏற்றத் தாழ்வு இருக்கத்தானே செய்யும். அதனை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமே. அதற்கான காலமும் வந்தது. அதாவது பால் விலை உயர்வு. அதனை சமாளித்து வெற்றி பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம். முதலில் குல்பி தயாரித்த நாங்கள் தொடர்ந்து ஃபலூடா, ஐஸ்கிரீம் என எங்கள் சந்தையை விரிவுபடுத்தினோம். வரும் லாபத்தில் ஒரு பங்கை அவசர கால நிதியாக வைக்கும் பழக்கத்தை தாங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். கடனிற்கு பொருள்களை கொடுப்பதில்லை போன்ற தொழில் கொள்கையை கொண்டுள்ளோம்'' என்கிறார் கார்த்திக் சுகுமாரன்.
இன்ஜினியரிங் என்பது படிப்பு மட்டுமே. அதன் மூலம் நாம் மற்றவர்கள் வழியில் செல்லாமல் நாமே புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டும். இப்போதுள்ள இளைஞர்கள் அந்த புதிய வழியில் பயணிக்க முன் வருவதில்லை. அதனால் தான் வேலையில்லா திண்டாட்டம் என்பது அதிகமாகிறது. உங்களால் முடிவது என்ன, என்பதை தெளிவாக அறிந்து அதற்கு ஏற்ப உங்கள் நோக்கங்களை வகுத்துக்கொள்ளுங்கள் அதுவே வெற்றிக்கான வழி என்கிறார்கள் இந்த நான்கு இளைஞர்கள்.
தாங்கள் தொடங்கிய நிறுவனம் மூலம், பால் பொருட்கள் துறையில் பெரிதாக வளரும் முயற்சியில் இறங்கியதோடு மட்டுமல்லாமல் வரும் 2023- ஆம் ஆண்டில், தங்களுக்கான ஒரு தொழிற்சாலை அமைத்து, தங்கள் பொருளை வைத்து விற்பது மட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் அனைவரையும் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.