தினமணியும் நானும்: பக்கபலமாக இருந்த தினமணி!
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயாவுக்கு முதல் ஊதியம் வழங்கியது நமது தினமணி என அறிந்தபோது, ஆனந்த ஆச்சரியம், ராமேஸ்வரத்தில் உயர் கல்வி கற்றபோது, தினமணியை வீடுகள்தோறும்


முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயாவுக்கு முதல் ஊதியம் வழங்கியது நமது தினமணி என அறிந்தபோது, ஆனந்த ஆச்சரியம், ராமேஸ்வரத்தில் உயர் கல்வி கற்றபோது, தினமணியை வீடுகள்தோறும் விநியோகிக்கும் பணி செய்து, அந்த சம்பளத்தில் கல்விச் செலவை ஈடு செய்தவர். அதுமட்டுமா, தினமணியை நாள் தவறாமல் வாசித்ததால், அதில் வந்த இரு கார்ட்டூன்கள், கலாமிடம் பள்ளிப் பருவத்திலேயே சமூக அக்கறையை உருவாக்கியது என்பது பெருமைக்குரிய பெருமிதம் தானே!
கார்ட்டூன் 1: நேரு கொடியேற்றிய முதல் சுதந்திர தினம்.
கார்ட்டூன் 2: காந்திஜியின் நவகாளி யாத்திரை.
தினமணியோடு உறவாடும் எல்லாருமே ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஆகாவிட்டாலும், அதில் ஒரு பங்காவது உயர்ந்திருப்பார்கள் என்பதற்கு நானும், ஒரு சாட்சி.
தினமணியின் இணைப்பிதழாக வந்த அறிவியல், தமிழ்மணி தொகுப்புகள்தான் நான் பி.எட் முடித்து, நேர்முக தேர்விலும் வெற்றியடைந்து, ஆசிரியையாக அஸ்திவாரமானது.
இன்று சமூக அறிவியல் ஆசிரியையாக எனது 25 வருட பணி தொடர பக்கபலமாக, மாணவர்களின் பல ஐயங்களைப் போக்கவும் பாடத்திட்டத்திற்கு ஏற்ப சொல்லித் தரவும், உதவுவது தினமணியின் நடுநிலையான செய்திகள்தான்.
மொத்தமாக தினமணி வாசகி என்பதை பூரிப்போடு சொல்லிக் கொள்வதில் புளகாங்கிதமடைகிறேன்.
- மல்லிகா அன்பழகன், சென்னை.

எனக்கு வயது 69. அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறேன். 1965- ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பள்ளியில் படிக்கும் காலத்திலும், பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலும், தினமும் மாலையில் தவறாமல் அரசு நூலகத்திற்கு செல்வேன். சென்றதும் என்னுடைய கண்கள் தேடுவது தினமணியைத்தான்.
ஆனால், பெரும்பாலும் யாராவது படித்துக் கொண்டு இருப்பார்கள். படிப்பவருக்கு அருகில் இருக்கும் இருக்கையை தேடி அமர்ந்து கொள்வேன். எப்பொழுது அந்த வாசகர் படித்து முடித்து மேஜையில் வைப்பார் என காத்திருப்பேன். அதுவரை என்னுடைய நாட்டம் தினமணியிலும், பார்வை அந்த வாசகர் மீதும்தான் இருக்கும்.
என்னுடைய வாழ்க்கை பயணம், வேலை நிமித்தம் காரணமாக, மைசூர், பங்காருபேட்டை, பெங்களூரு, சென்னை என்று அமைந்தாலும் அன்றும் இன்றும் தினமும் என்னுடன் வருவது தினமணிதான்.
பணிக்காலத்தில் நான் சந்தாதாரர், சென்னை - சேலையூர் இல்லத்திற்கு தினமணி தினமும் வந்துவிடும்.
2012-இல் நான் ஓய்வு பெற்ற பின்னர், ஒரே இடத்தில் இருக்க முடியாத சூழ்நிலை. இருக்கும் இடத்தில், தேடி தினமணியை வாங்கிவிடுகிறேன்.
செய்திகளை படித்ததற்குப் பின்னர், நேரம் ஒதுக்கி நிதானமாக தலையங்கத்தையும், நடுப்பக்க கட்டுரைகளையும் படிப்பேன். சில முக்கிய செய்திகளையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அதில் ஒன்று இந்திராகாந்தி படுகொலையை தாங்கிய 1984 -ஆம் ஆண்டின் அக்டோபர் 31-ஆம் நாள் நாளிதழ். இன்றும் அதை எடுத்து படிக்கும் பொழுது கலங்கிவிடுவேன். அன்று காலை 9.30 மணிக்கு இந்திராகாந்தி சுடப்பட்டார். பகல் 12.30 மணிக்கு தினமணியின் சிறப்பு வெளியீட்டை தாம்பரம் ரயில் நிலையத்தில் வாங்கியது இன்றும் என் நினைவில் உள்ளது. ஆக தினமணி வாசிப்பு 55 ஆண்டுகளாகத் தொடர்கிறது.
- எம். கண்ணையன், சேலையூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...