வியக்க வைக்கும் விருத்தாசல கலை வண்ணம்!

கைகளில் விளக்கை ஏந்தியபடி காலை மடக்கி வரவேற்கும் அழகுப்பெண் பதுமை... கைகளில் ஏந்தி சூடாக தேநீர் அருந்தும் கோப்பைகள்.... தவழ்ந்து வரும் கிருஷ்ணர், தாவி ஓடும் மான்கள், அருள் பாலிக்கும் விநாயகர்,
வியக்க வைக்கும் விருத்தாசல கலை வண்ணம்!
Updated on
1 min read

கைகளில் விளக்கை ஏந்தியபடி காலை மடக்கி வரவேற்கும் அழகுப்பெண் பதுமை... கைகளில் ஏந்தி சூடாக தேநீர் அருந்தும் கோப்பைகள்.... தவழ்ந்து வரும் கிருஷ்ணர், தாவி ஓடும் மான்கள், அருள் பாலிக்கும் விநாயகர், இருளைப் போக்கும் கார்த்திகை அகல் விளக்குகள் என காண்போரை வியக்க வைக்கின்றன விருத்தாசலக் கலைவண்ணப் பொருள்கள். இவை ராமநாதபுரம் நகர், ஊரகப் பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதையும், அதை வாங்கப் பொது மக்கள் ஆர்வம் காட்டுவதையும் காணலாம்.

கலை வண்ணப் பொருள்களை விற்பனை செய்து வருவோர் அனைவருமே விருத்தாசலம் பகுதி விவசாயக் கூலிகள். ராமநாதபுரம் நகரில் சாலையோரத்தில் கலை வண்ணப் பொருள்களை விற்றுவரும் விருத்தாசலம்-ஆலடி கிராமத்தைச் சேர்ந்த முருகனிடம் பேசினோம்: விருத்தாசலம் பகுதியில் சிறிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியாக உள்ளேன். மண்ணையும், பயிரையும் மட்டுமே நம்பி வாழ்ந்த எங்களுக்கு விவசாயம் குறைந்து வருவதால் மாற்றுத் தொழிலை நாடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விவசாயத்தில் தினமும் கூலியாக ரூ.300 முதல் ரூ.500 வரை கிடைக்கும். அந்த ஊதியத்தைத் தரும் தொழிலாக தற்போது வீட்டு உபயோகத்துக்குப்  பயன்படும் கலைப்பொருள்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். நெய்வேலியில் கிடைக்கும் களிமண்,செம்மண் ஆகியவற்றைக் கொண்டு கலைப் பொருள்கள் தயாரிக்கிறோம். 

ஆந்திர மாநிலத்திலிருந்து அதிகமான கலைப்பொருள்களை வாங்கி வருகிறோம். ரூ.2 மதிப்புள்ள அகல் விளக்கு முதல் ரூ.450 மதிப்பிலான ஊறுகாய் ஜாடி வரையில் விற்பனை செய்து வருகிறோம். வளர்ந்து வரும் நகரங்களில் எங்களது பொருள்களுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது.

சமையலறைப் பொருள்களைக் கூட கலை நயத்துடன் தயாரித்து விற்பதே எங்களது தனித்தன்மையாகும். வீட்டு வரவேற்பறையில் வைக்கும் கலை மான், பசுவும் கன்றும் போன்ற மண் சிற்பங்கள், சத்ய சாய்பாபா, குபேரன், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளையும் விற்றுவருகிறோம். அதேசமயம், உணவுப் பொருள்களை வைக்கும் மண் ஜாடி போன்றவை மக்களின் உடல் நலத்தையும் காக்கிறது என்பதில் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. கலைப்பொருள்கள் விற்பனையில் எனது மனைவி கீதாவும் எனக்கு உதவியாக இருக்கிறார்.

விவசாயக் கூலிகளான நாங்கள் தற்போது மண்ணால் ஆனப் பொருள்கள் மூலம் மக்களது ரசனையையும் வளர்த்து, சுற்றுச்சூழலையும் காக்கிறோம் என்பதே உண்மை!'' என்றார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பனைஓலைப்பொருள்கள், மண்பாண்டப் பொருள்கள், துணி வகைப் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

படம்: ஜெ.முருகேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com