தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்தியாவின் எல்லைச்சாமி

1962-ஆம் ஆண்டு நமது இந்திய ராணுவத்திடம் அப்போது போதிய இந்திய ராணுவத் தளவாடங்கள் இல்லை.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 12:30 am

தினமணி


1962-ஆம் ஆண்டு நமது இந்திய ராணுவத்திடம் அப்போது போதிய இந்திய ராணுவத் தளவாடங்கள் இல்லை. அதிலும் மலைப்பகுதிகளில் போதிய ஆள் பலமோ தற்காப்பு உபகரணங்களோ, ஆயுதங்களோ எடுத்துச் செல்ல எந்த விதமான பகுதியோ பாதைகளோ இல்லை. அதிலும் முக்கியமாக நூராணங் என்ற இடத்தில் எல்லைப் பகுதியினை அமைத்து இந்திய ராணுவம் முதன் முதலாக காவலுக்கென அந்த வருடம் கால் பதிந்தது.

புதிய மற்றும் பெரும்பாலும் யாரும் அறியாத பகுதியாக இருந்ததால் மலையின் மீது காவல் காப்பதற்காக 4-ஆவது கார்வால் ரைபிள் பட்டாலியனை அனுப்பியது. முதலில் அந்த பட்டாலியன் "போம்டா' என்ற பகுதியில் இருந்து "மொமன்ட்லா" என்ற பகுதிக்கு அனுப்பி இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ராணுவ வீரரும் ஒரு பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணியாற்ற வேண்டும் என்பது நிபந்தனை. அத்தகைய பகுதிகளில் ஒருவராக பணியாற்ற வந்தவரே ஜஸ்வந்த் சிங் ராவர்த்.

ஜஸ்வந்த் சிங் தனது குடும்ப சூழல் காரணமாகவே ராணவத்தில் பணியாற்ற நுழைந்தார். ஆனால் பின்னாளில் இந்திய ராணுவமே அவரது குடும்பமாகிப் போனது.ஒவ்வொரு நாளும் ரோந்து பணிக்காக ஜஸ்வந்த் சிங் வரும் பொழுது அவர் கண்களை கொள்ளை கொண்டாள் ஷீலா என்ற பெண். அவரது காவல் பணியிடத்தில் காதலும் நுழைந்தது.

1962-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி இந்தியாவிற்கும்-சீனாவிற்கும் போர் ஆரம்ப கட்டத்தினை எட்டியது. சீன படைகள் லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே இருந்த எல்லையை கடந்து தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது. மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றிக் கொண்டிருந்தனர். மேற்கு பகுதியில் சுகல் பள்ளத்தாக்கிலுள்ள ரிசாங்லா கணவாயைக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். மேலும் கிழக்குப் பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் கைபற்றுவதற்காக முன்னேறிக் கொண்டிருந்தனர்.

நமது ராணுவ வீரர்களிடம் ரைஃபிள் துப்பாக்கிகளே இருந்தன. ஆனால் சீன ராணுவத்திடம் உயர் ரக தொழில்நுட்ப துப்பாக்கிகள் இருந்தன. அவர்களின் போர் யுக்திகளைப் பார்க்கும்பொழுது அது திடீர் தாக்குதலாகத் தெரியவில்லை. அக்டோபர் மாதத்திற்கு முன்பே சீனா இந்த தாக்குதலுக்குத் தன்னை தயார் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

நமது எல்லைப்புற மலைப்பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சீனத் துருப்புகளை அங்கு இறக்கி வைத்துவிட்டார்கள். அதுவுமில்லாமல் 7 டன் எடையுள்ள வாகனங்களை தாங்கக்கூடிய சாலைகளையும் ரகசியமாக ஏற்கெனவே அங்கே போட்டு வைத்திருந்தார்கள்.

நமது படைகள் ஒரு பட்டாலியன் முழுவதும் இருந்தும் சீன ராணுவத்தினை சமாளிக்க இயலாது தனித்தனியாக அவர்களின் முன்னேற்றத்தினை அறிந்து பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்து யுத்தம் செய்யத் துவங்கினர். அலையலையாய் எதிர்த்து வந்து கொண்டிருந்த சீன ராணுவத்தினை வெறும் குறைவான ஆயுத பலமும் படை பலமும் கொண்ட நம் வீரர்கள் போரிட்டு தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில்" நீங்கள் அனைவரும் வந்துவிடுங்கள்' என ராணுவ மேஜரிடம் இருந்து தகவல் வந்துவிட அனைவரும் பின் வாங்கத் துவங்கினர். சீன ராணுவம் கேளிக்கையுடன் முன்னோக்கி வரத் துவங்கினர்.

ஜஸ்வந்த் சிங்கிற்கு கண்கள் இருளத் துவங்கியது. "எனது உயிர் பிரியும் வரை இந்த எல்லையில் சீன ராணுவத்தினை கால்பதிக்க விட்டுவிடக்கூடாது' என்ற வைராக்கியத்துடன் சீனர்களை நோக்கி நகர்ந்தார். அவருடன் இணைந்து கோபால்சிங் மற்றும் திரிலோக் சிங் இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். மலையின் உச்சியில் இருந்து குறி வைத்துக் கொண்டிருந்த சீன ராணுவத்தினரை அந்த மலையின் பின் பக்கமாக ஏறி கைகளில் இருந்த எரிகுண்டுகளை வீசியபடியே பதுங்கிச் சென்றனர். சீன ராணுவத்தினரை திசை திருப்ப கோபால் சிங் முன் பக்கமாகவும் மற்ற இருவரும் பின்னிருந்தும் தாக்கத் துவங்க இந்தியர்களை சுற்றி வளைத்துவிட்டதாக நினைத்த சீன ராணுவத்தினர் அங்கு இருந்து 6 பேரும் ஒரே பக்கமாக தாக்குதல் நடத்த மறுபக்கம் இருந்த ஜஸ்வந்த் சிங் கைகளில் இருந்த எரிகுண்டுகளை வீசி எறிந்தார். அந்தத் தாக்குதலில் சீன ராணுவத்தினர் 6 பேரின் உடல்களும் வெடித்துச் சிதறின.

காலை துவங்கிய போர் மாலையை நெருங்கியது. மலையின் எல்லையினை நோக்கி சீன ராணுவம் சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டிருந்தது. நிலைமையினை யூகித்த ஜஸ்வந்த் சிங், திரிலோக் சிங் இருவரும் தாங்கள் கைப்பற்றி வந்த மெஷின் துப்பாக்கிளை ஒவ்வொரு பதுங்கு குழிக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்ப, அனைத்தினையும் டெலிபோன் வயர் மூலமாக டிகரில் கட்டி ஒரு 30 மீட்டர் தொலைவு ஒரு பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டு ஒரே நெட்டாக பத்து பக்கம், பத்து பக்கமாக முதல் துப்பாக்கி மூலம் சுடுவதும், அடுத்ததாக பத்தாவது துப்பாக்கி மூலம் சுடுவதுமாக மாறி மாறி சுட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சீன ராணுவ அதிகாரிகள் ராணுவத்தை அப்படியே நிறுத்தி அடுத்த ஆலோசனைக்குப் போய் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்திற்கு மேலாக திரிலோக் சிங் பக்கமிருந்து எந்த சப்தமும் கேட்காமல் போகவே அவர் அருகில் சென்ற பார்த்தார் ஜஸ்வந்த் சிங். துப்பாக்கி கையாடலில் வெடித்த வெடி குண்டுகள் சிறிய துகள் திரிலோக் சிங் விலா பகுதியில் தாக்கியுள்ளது. அங்கிருந்து நகர்ந்த வேகத்தில் இருவரும் அதனை கவனிக்கவில்லை. அவரது உடலில் இருந்த மொத்த ரத்தமும் பூமியில் வடியும் வரை திரிலோக் சிங் தனது தாக்குதலை நடத்தியிருப்பது அப்போது தான் தெரிந்தது.

இரவு முழுவதும் ராணுவத்தினரை முன்னேற விடாமல் தனி மனிதனாக போரிட்டுக் கொண்டிருந்தார் ஜஸ்வந்த் சிங் . இரவு முழுவதும் கேட்டுக் கொண்டிருந்த துப்பாக்கி சத்தத்தில் காதலி ஷீலாவிற்கு என்ன நடந்ததோ என துடித்துக் கொண்டிருந்தது. விடிந்ததும் வேலை இருப்பதாக சொல்லி, ஜஸ்வந்த் சிங் காண்பதற்கு காலை உணவினை கைகளில் எடுத்துக் கொண்டு மலை மேல் ஏறி ஒவ்வொரு பதுங்கு குழிகளாக தேடத் துவங்கினாள் ஷீலா. ஒரு வழியாக ஜஸ்வந்த் சிங் இருந்த பதுங்கு குழியினை தேடி அடைந்தாள்.

Story image

தனது நிலையை விளக்கி தன்னை விட்டுச் செல்லுமாறு வலியுறுத்திய போதும்" உங்களோடு தான் இருப்பேன்' என உறுதியாக மறுத்துவிட்டாள் ஷீலா. சீனாவுக்கு எதிரான போரில் ஜஸ்வந்த் சிங்குடன் ஷீலாவும் இணைந்து கொண்டாள். இருவர் சேர்ந்து நடத்திய தாக்குதலில் 300க்கும் அதிகமான சீன ராணுவ வீரர்கள் உயிர்ழந்திருந்தனர்.

இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் நிலைமையை ஒருவாறு யோசித்த தங்கை நூர், ஷீலா அக்காவிற்கும் அவளது காதலருக்கும் சேர்த்து உணவினை எடுத்துக்கொண்டு சென்றாள். மலைவாழ் மக்களை உளவு பார்த்துக் கொண்டிருந்த சீன ராணுவத்தினர் பின் தொடர்ந்தனர். அவளது தந்தையிடம் வழிமறித்து சாதாரணமாக விசாரிக்க "தனது மகள்கள் இருவரையும் அழைப்பதற்காக செல்வதாக ' கூறிய அவரை அந்த இடத்திலேயே அரிவாளால் வெட்டி வீசினர்.

நூர் செல்லும் பாதையை பின் தொடர்ந்து அந்த இடத்தின் நிலவரத்தினை துல்லியமாக அறிந்து கொண்டனர். நூரினையும் அந்த இடத்திலேயே வெட்டி வீசினர்.

ஒரு பக்கமாக தாக்கியபடியே மறு பக்கமாக ஏறி வந்து ஜஸ்வந்த் சிங்கை பிடித்துவிட்டனர். ஒருவன் மூன்று நாட்களாக தனது படையின் பாதியை அழித்ததை சீன ராணுவ அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது எதுவும் அறியாது பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கியில் ரவுண்டை மாட்டிவிட்டு வந்து கொண்டிருந்த ஷீலாவை கவனித்து விட்டார் ஜஸ்வந்த் சிங்.

""இவர்களிடம் நீ மாட்டி விடாதே ஓடு'' என ஜஸ்வந்த் சிங் உரக்க கத்த கடைசியாக தனது காதலனை நோக்கி புன்னகைத்துவிட்டு தன்னை நோக்கி ஓடி வந்த சீன ராணுவ வீரரிடம் பிடிபடாமல் இருக்க மலையின் உச்சியில் இருந்து தனது உயிரினை விட்டாள் ஷீலா.

சீன ராணுவ அதிகாரிக்கு கோபம் தலைக்கேறியது. தனது கைகளாலேயே ஜஸ்வந்த் சிங் தலையை வெட்டினார். இவன் தலையை வெட்டியதையே எனக்கு பெரிய வெற்றியாக தோன்றுவதாக கூறி வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினார் அந்த சீன ராணுவ அதிகாரி.

""இத்தகைய மாவீரனை கொன்றதற்காக உங்களது பதவியினை டி கிரேட் செய்கிறேன்'' என்று அந்த அதிகாரி அப்போது வகித்த பதவியினைப் பறித்தனர் சீன ராணுவ அதிகாரிகள்.

போர் முடிவிற்கு வந்த பின்னர் இந்தியாவிடம் இந்த மாவீரரின் கதையினைக் கூறி அவரது உருவச் சிலையினை செய்து ஜஸ்வந்த் சிங்கிற்கு தனது வீர வணக்கத்தினை செலுத்தியது சீன ராணுவம். அதன் பின்னர் நமது இந்திய ராணுவம் அவருக்கு "மகாவீர் சக்ரா' விருதினை வழங்கி கெளரவித்தது.

1962-இல் இந்திய- சீன போருக்குப் பின்னர் இன்றளவும் அந்தப் பகுதி வழியாக எந்த ஒரு தேசத் துரோகியாலும் கடக்க இயன்றது இல்லை. ஜஸ்வந்த் சிங் போரிட்ட அந்த இடத்தில் ஒரு கண்ணாடிப் பேழை அமைத்து அதில் இன்றளவும் அவரது ராணுவ அடையாள அட்டை வைத்து காலை, மாலை, இரவு உணவு பரிமாறப்பட்டு வருகின்றது. தினமும் அவரது "பூட்' துடைத்து வைக்கப்படுகிறது. மறுநாள் "பூட்' முழுவதும் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதுதான் அதிசயம்.

அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நபர்கள் இரவில் கண்ணயர்ந்தால் கன்னத்தில் "பளார்' என்று அறை விழுமாம். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு இன்றளவும் எந்தவொரு ஆபத்தும் வந்ததில்லையாம். அந்தப் பகுதிக்கு புதியதாக வரும் எந்த அதிகாரிகளும் பணியில் சேருவதற்கு முன்னர் ஜஸ்வந்த் சிங் நினைவிடத்திற்கு சென்று முதலில் "ரிப்போர்ட்' அளித்துவிட்ட பின்னரே தமது பணியில் அமர்கின்றனர். மிகச் சிரமமான சூழலில் விடுமுறை கிடைக்கவில்லை என மனது வருந்தி ஜஸ்வந்த் சிங் திருஉருவம் முன் முறையிட உடனே விடுமுறை கிடைப்பதாகவும் அனுபவம் பெற்றவர்கள் மனதாரக் கூறுகின்றனர்.

ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு இன்றளவும் வருடத்திற்கு 2 மாதங்கள் அவரது அடையாள அட்டையை வீட்டிற்கு அனுப்பி அவருக்கென ராணுவத்தில் விடுமுறை அளித்து வருவது ராணுவத்தில் உள்ள அனைவரும் அறிந்த ரகசியம்
1962-இல் துவங்கி தனது வைராக்கிய வரிகளைச் சுமந்து பாதுகாப்புப் பணியில் கண்ணாடிப் பேழையில் நின்றபடி இரவினில் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜஸ்வந்த் சிங் உண்மையில் இந்தியாவின் எல்லைச்சாமிதான்.

(முன்னாள் ராணுவ வீரர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.