ரோஜா மலரே!- 68: எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையால் கோபம்! - குமாரி சச்சு

நான் கடந்த வாரம் சொன்ன, அந்த நடிகர் யார் தெரியுமா? எம்.ஆர்.ஆர்.வாசு.  நான் உடனே அவரிடம், ""அப்படி எல்லாம் செய்யாதீர்கள்.
சித்ராலயா கோபு, நாகேஷ், வி.எஸ். ராகவனுடன் சச்சு.
சித்ராலயா கோபு, நாகேஷ், வி.எஸ். ராகவனுடன் சச்சு.
Updated on
3 min read

நான் கடந்த வாரம் சொன்ன, அந்த நடிகர் யார் தெரியுமா? எம்.ஆர்.ஆர்.வாசு. நான் உடனே அவரிடம், ""அப்படி எல்லாம் செய்யாதீர்கள். ராஜா வேண்டும் என்றே அப்படி செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்'' என்று சொன்னேன். எம்.ஆர்.ஆர். வாசு "சரி' என்று சொன்னார்.

இந்த நேரத்தில் தான் எனக்கொரு யோசனை தோன்றியது. இரு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளோம். தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க, எம்.ஜி.ஆர். அவர்களைப் போய் பார்த்து விட்டு வந்தால், வாய்ப்பு கிடைக்கும் அல்லது ஏதாவது நல்ல யோசனை சொல்லுவார் என்று தோன்றியது.

காரணம் எம்.ஜி.ஆர் "கலையரசி' என்ற படத்தில் நடித்த போது நான் ஏவி.எம். ஒப்பந்தத்தில் இருந்தேன் என்று அவருக்கே தெரியும். அதனால் எம்.ஜி.ஆரைப் பார்த்து விட்டு வரலாம் என்று என் குடும்பத்தினரிடம் கூறினேன். நான் கூறியதில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். ஒரு நாள் பாட்டி-அம்மாவுடன் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று நேரில் சந்தித்தோம். அவரும் எங்களை வரவேற்று விஷயத்தைக் கேட்டு அறிந்து கொண்டார். எம்.ஜி.ஆர். முதல் கேள்வியாக, ""ஏவி.எம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்து விட்டாயா, மற்ற படங்களில் நீ நடிக்கலாமா ?'' என்று கேட்டார்.

அவர் கேட்டதற்கு நான் விவரமாகப் பதில் சொன்னேன். ""இரண்டு ஆண்டுகள் வரை அவர்கள் ஒப்பந்தத்தில் இருந்தேன். இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்தேன். இப்போது ஒப்பந்தம் முடிந்து விட்டது, வெளியே வந்து விட்டேன். கதாநாயகி வேடத்திற்காகக் காத்திருக்கிறேன். நீங்கள் தான் சொல்ல வேண்டும்'', என்று அவரிடம் சொன்னேன். அவர் நான் சொன்னதைக் கேட்டவுடன் தெளிவாக ஒன்றை குறிப்பிட்டார். ""உன்னைப் பார்ப்பதற்குச் சின்னப் பெண்ணாகத் தெரிகிறாய். என்னுடன் நடிப்பதற்கு சிறிது காலம் நீ காத்திருக்க வேண்டும். குழந்தை முகம் மாற ஒரு வருடம் அல்லது இருண்டு வருடம் காத்திருந்தால், நல்ல கதாநாயகி வேடத்தை உனக்குத் தருகிறேன்'' என்று சொன்னார்.

நான் பாட்டியை பார்க்க, அவர் என்னைப் பார்க்க, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவரிடம் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் கோபத்தில் எழுந்து வெளியே வந்து காரில் உட்கார்ந்து கொண்டேன். என் பாட்டி எம்.ஜி.ஆருடன் பேசி விட்டு வந்தவுடன், நான் காரில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து விட்டு, என்னிடம் ""ஏன் எம்.ஜி.ஆரிடம் ஒன்றுமே
சொல்லாமல் வந்து விட்டாய்?'' என்றார்.

""எதை அவரிடம் சொல்ல?, நம்ம குடும்ப சூழ்நிலை பற்றி அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் நடித்தால் தான் குடும்பம் ஓரளவு நன்றாக நடை போட முடியும். இதை எல்லாம் அவரிடம் போய் எப்படி சொல்ல முடியும்? குழப்பமான நிலையில் தான் எழுந்து வந்து விட்டேன்'' என்று பாட்டியிடம் சொன்னேன். பாட்டி என்னிடம் ""நீ அப்படி எழுந்து வந்திருக்கக் கூடாது. அவர் சரியாகத் தானே சொன்னார்'' என்று என்னைக் கடிந்து கொண்டார். நான் செய்தது தவறு என்று தெரிந்து கொண்டேன். உடனேயே மறுபடியும் போய் எம்ஜிஆரைப் பார்த்து மன்னிப்பு கேட்டு விட்டு வந்தேன்.

எப்போதுமே என் பாட்டியோ, அம்மாவோ நான் தவறு செய்தால் கண்டிக்கத் தயங்கியதே இல்லை. அதிலும் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்துள்ளார்கள். அவர்கள் சொல்லிக் கொடுத்த நல்ல விஷயங்களை இன்று வரை நான் கடைப்பிடித்து வருகிறேன்.

இப்படி ஒன்றும் புரியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது தான் ஒரு நாள் எனக்கு ஒரு போன் கால் வந்தது. அந்த அழைப்பு தயாரிப்பு நிறுவனமான "சித்ராலயா'வில் இருந்து தான். அவர்கள் சொன்னது ""ஒரு பட விஷயமாக நாங்கள் உங்களுடன் பேசணும். எப்போது உங்களால் அலுவலகம் வர முடியும்?'' என்று கேட்டார்கள். எனது பாட்டி ""எப்போது வரவேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்'' என்று கேட்டார்.. ""நாங்கள் காரை அனுப்புகிறோம். பகல் 12 மணிக்கு வரமுடியுமா?'', என்று கேட்டார்கள். ""சரி அனுப்புங்கள்'', என்று சொன்னோம் சித்ராலயாவுக்கு நானும் எனது பாட்டியும் போய் இறங்கியவுடன், என்னை நேராக ஓர் அறைக்குள் அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கே இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு அமர்ந்து இருந்தனர். இயக்குநர் ஸ்ரீதரை எனக்கு முன்பே தெரியும்.

நான் அவரின் "எதிர்பாராதது' படத்தில் நடித்திருக்கிறேன்.நான் வளர்ந்து பெரிய பெண்ணாக மாறி, கதாநாயகியாக இரு படங்கள் நடித்த பின்பு, நீண்ட நாள்களுக்குப் பிறகு என்னை இயக்குநர் ஸ்ரீதர் பார்க்கிறார். என்னைப் பார்த்த பிறகு கோபு சார், பேச ஆரம்பித்தார். ""நாங்கள் இப்போது எடுக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள். அதில் ஒன்று நகைச்சுவை கலந்த கதாபாத்திரம். எங்கள் கதைப்படி நீங்க தான் "ஓஹோ' புரொடக்ஷன் கதாநாயகி. உங்கள் ஜோடி நாகேஷ்'' என்றார்.

இதை எல்லாம் கேட்ட பிறகு நான் எனது பாட்டியை பார்த்தேன். அதே சமயம் அவரும் என்னைப் பார்த்தார். பிறகு நாங்கள் சொல்கிறோம் என்று சொல்லி விட்டு வந்து விட்டோம்.

"வீரத்திருமகன்' "அன்னை' படங்களில் கதாநாயகியாக நடித்த பின்பு நகைச்சுவை வேடத்தில் நடிப்பதா? என்ற தயக்கம் இருந்தது. இந்த இடைவெளியில் வேறெந்த படங்களும் எனக்குக் கிடைக்கவில்லை.

வீட்டிற்கு வந்தவுடன் அம்மா, பாட்டி மற்றும் அக்கா "மாடி' லட்சுமி மூவரும் கலந்து பேசினோம். இயக்குநர் ஸ்ரீதர் படத்தை ஒத்துக்கொள்ளலாமா? என்று ஆழமாக அலசி ஆராய்ந்தோம். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் இனி தொடர்ந்து நகைச்சுவை வேடங்களாகவே கிடைக்குமே. கதாநாயகியாக நடித்து விட்டு நகைச்சுவை நாயகியாக மாற வேண்டுமா? இல்லை என்றால் எம்.ஜி.ஆர் சொன்னது போல் கொஞ்சம் காலம் காத்திருக்கலாமா? இப்படி பலவாறு ஒவ்வொருத்தரும் யோசனைகள் சொல்ல கடைசியில் ஒருவாறு நாங்கள் எல்லோரும் ஒரு மனதாக முடிவு செய்து சித்ராலயாவுக்கு தொலைபேசி மூலம் எங்கள் முடிவை சொல்லத் தயாரானோம்.

ஆனால் அதற்கு முன்பே "சித்ராலயா" கோபு தொலைபேசியில் அழைத்தார். பாட்டி எங்கள் முடிவை சொன்னார். எம்.ஜி.ஆர். எங்களைக் காத்திருக்கச் சொல்லி இருக்கார். அதனால் சச்சு நகைச்சுவை வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லோரும் முடிவு செய்திருக்கிறோம். ஏன் என்றால் இந்த வயதில் கதாநாயகியாக நடிக்கா விட்டால், அடுத்து எப்போது தான் நடிக்க முடியும். அதனால் நாங்கள் நகைச்சுவை வேடம் ஏற்று நடிக்கிறதாக இல்லை. தயவு செய்து எங்களைத் தப்பாக நினைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டோம். கோபு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால் இரண்டு நாளுக்கு ஒரு முறை எங்களுக்குத் தொலைபேசி அழைப்பு வரும். நாங்களும் முன்பு சொன்னதையே சொல்லுவோம்.

இந்த தொலைபேசி தொடர்பால் ஒன்று எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. "சித்ராலயா' கோபு மற்றும் இயக்குநர் ஸ்ரீதர் இருவரும் நான் தான் அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்துவிட்டார்கள். அதனால் தான் அவர்கள் தொடர்ந்து என்னை அழைத்துக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் மறுத்தாலும் அவர்கள் எங்களை விடுவதாக இல்லை. இப்படியே சில நாள்கள் தொடர்ந்தது. ஒரு நாள் தொலைபேசியில் பேசுவதற்குப் பதிலாக சித்ராலயா கோபு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். அவரைப் பார்த்ததும் என்ன சொல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முதலில் அவரை வரவேற்று வீட்டினுள் உட்கார வைத்தோம். சித்ராலயா கோபு, என்ன பேசினார் தெரியுமா?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com