

மக்கள் கூட்டம், வாகன நெரிசல், காற்று மாசு என சிக்கி தவிக்கும் சென்னை வாசிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது ஒட்டேரியிலுள்ள மூலிகை பூங்கா. பொதுவாக நடைபயிற்சி மேற்கொள்வதற்கும், குழந்தை விளையாடுவதற்கு தான் பூங்கா என்று இல்லாமல் முழுக்க முழுக்க மக்களின் ஆரோக்கியம் சார்ந்து அமைந்துள்ளது இந்த பூங்கா.
எப்படி இந்த மூலிகை பூங்கா உருவானது?
10.32 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த இடம் ஆரம்பத்தில் குப்பை கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை சென்னை மாநகராட்சியினர் பூங்காவாக மாற்றியதோடு பல்வேறு வகையான மூலிகைச் செடிகளை இங்கு நட்டனர். 96 வகையான மூலிகை செடிகள் இங்கு உள்ளன. குறிப்பாக நொச்சி இலை, ஆடா தொடை, தூதுவளை, முடக்கத்தான், பூனை மீசை மூலிகை, மலை வேம்பு, செம்பருத்தி, வேம்பு, பெரிய நங்கை, சிறியா நங்கை போன்ற மூலிகை செடிகள் சிறந்த முறையில் பாராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அரிய வகையான பூவரசு, நாவல், கதம்பம், பிரம்மம், மதுரம், வேம்பு போன்ற 1000-க்கும் மேற்பட்ட மூலிகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சொட்டு நீர்ப்பாசனம் மூலம் அனைத்து மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. சிறிய காடு போன்று காட்சியளிக்கும் இந்தப்பூங்காவிற்கு பல்வேறு வகையான பறவைகளும் வருகின்றன.
இங்கு நடைபயிற்சி செய்யும் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் பேசிய போது, ""2011-ஆம் ஆண்டு முதல் இந்த பூங்காவை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். உடற்பயிற்சி கூடம், யோகா, குழந்தைகள் விளையாடும் இடம் என அமைக்கப்பட்டுள்ளது. காய்ந்த இலைகளை உரமாக பயன்படுத்துகிறார்கள். வர்தா புயலின் போது ஏராளமான மரங்கள் விழுந்துவிட்டன. அதற்கு பதில் புதிய மரங்களை நட வேண்டும். மக்கள் பயன்படுத்தும் வகையில் இன்னும் நிறைய மூலிகைச் செடிகள் நட வேண்டும்'' என்றார்.
""இந்த பூங்காவில் மாசு என்பதே துளியும் கிடையாது. இங்குள்ள காற்றை சுவாசித்தாலே பெரும்பாலான நோய்கள் தீர்ந்துவிடும். சனி, ஞாயிறு குழந்தைகளுக்கு சிலம்பம், கராத்தே, பாக்ஸிங் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளின் பேச்சாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஞாயிறு தோறும் காலை 7 மணி முதல் 9 வரை திரு.வி.க பேச்சு பயிலரங்கம் நடைபெற்று வருகிறது'' என்கிறார் நடைபயிற்சி செய்யும் சேகர்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வருபவர்கள் கூட இங்கு வந்த சில மாதங்களில் பழைய நிலைக்கு திரும்பி சாதாரணமாக நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். குறிப்பாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து சென்றால் முற்றிலும் அதிலிருந்து விடுபட முடியும்.
வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடிய மூலிகைகள் இங்கு உள்ளன. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக பயன்படும் நொச்சி இலை, நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றி, சுவாசத்திற்கு உறுதுணை புரியும் அற்புதமான மூலிகையான ஆடா தொடை குறிப்பாக தூதுவளை இலையை குடிநீர் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது. இது மட்டுமல்ல காய்ச்சல், சர்க்கரை வியாதி, மூட்டுவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு மூலிகைகளை கேட்டால் நாங்களே பறித்துக்கொடுக்கிறோம். அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மூலிகை பூங்காவை அதிகம் விரும்புகிறார்கள்'' என்கிறார் இங்குள்ள பெண் பணியாளர்.
இங்குள்ள மரம், செடிகளுக்கு தண்ணீர் போதுமானதாக இல்லை என்பதையும், ஆங்காங்கே சிறு சிறு ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் விட்டால் மரங்கள் இன்னும் செழிப்பாக வளரும் என்பதையும், சொட்டு நீர் பாசன குழாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல் ஆங்காங்கே இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், வெட்டு பட்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது. அவைகள் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்றாக இணைத்து விட்டால் முழு பூங்காவிற்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதையும் நேரிடையாக உணர முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.