புறநகரில் புதுமையான நூலகம்

சென்னையின் புறநகரான திருவொற்றியூரில் உள்ள கிளை நூலகம் தமிழகத்தின் முன்மாதிரி நூலகமாக விளங்கி வருகிறது. இந்த நூலகம் வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கிறது.
புறநகரில் புதுமையான நூலகம்
Updated on
2 min read

சென்னையின் புறநகரான திருவொற்றியூரில் உள்ள கிளை நூலகம் தமிழகத்தின் முன்மாதிரி நூலகமாக விளங்கி வருகிறது. இந்த நூலகம் வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கிறது.

தமிழக அரசின் பொது நூலகத் துறை, திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ், சென்னை திருவொற்றியூர், சண்முகனார் பூங்கா அருகே 1958-இல் இருந்து கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது.

திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது இட நெருக்கடியால், 2003-இல் 4 லட்ச ரூபாய் செலவில், 760 சதுர அடியில், இந்த நூலகம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

நூலகத்தின் வளர்ச்சிக்கு இந்த இடமும் கட்டடமும் போதாது என்பதால், வாசகர் வட்டத்தினரால் அப்போதைய சட்டபேரவை உறுப்பினர் குப்பனிடம் நூலகத்தை விரிவாக்கம் செய்ய நிதி கோரப்பட்டது. பழைய கட்டடத்தை முழுமையாக இடித்து, 4 தளங்கள் கொண்ட நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகம் பல நவீன வசதிகளுடன் டிஜிட்டல் நூலகமாக மாற்றப்பட்டு, 2015-இல் திறக்கப்பட்டது.

இங்குள்ள நூல்களின் எண்ணிக்கை - 62,493. நூலக உறுப்பினர்கள் 22,130 (தமிழகத்திலேயே முதலிடம்), கொடையாளர்கள் - 109, பெரும் புரவலர்கள் - 58, புரவலர்கள் - 199, ஆக புரவலர் வைப்புத் தொகை ரூ.15 லட்சத்து 79 ஆயிரம். (தமிழகத்திலேயே முதலிடம்)நாள் ஒன்றுக்கு வாசகர் வருகை - 1,250. நூல் இரவல் - 500, நூல் கலந்தறிதல் - 550, மொத்தம் - 2300. உலக புத்தக தினத்தை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி, யோகா, பேரணி போன்ற நிகழ்வுகளும் இந்நூலகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

தேர்வுக்கு பயிற்சி

1. பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவு, 2. நாளிதழ், பருவ இதழ்கள் பிரிவு, 3. மகளிர் பிரிவு, 4. நூல் வழங்கும் பிரிவு, 5. சிறுவர் பிரிவு, 6. குடிமைப்பணி பயிற்சி மைய பிரிவு, 7. இணையதளம், 8. நகலக பிரிவு, 9. சொந்த நூல்கள் படிப்பகம், 10. காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சிறப்பு பிரிவு (தமிழகத்திலேயே முதல் முறையாக) என 10 பிரிவுகள் உள்ளன.

"படித்ததில் பிடித்தது' என்ற தலைப்பில் சிறுவர்கள் பேசுகிறார்கள். குழந்தைகள் பிரிவு மிகவும் சிறப்பாக குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள், இல்லத்தரசிகள் பலர் ஆர்வமுடன் வந்து கம்ப்யூட்டர் பயிற்சி பெறுகிறார்கள். பயிற்சிக்குப் பின் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.

குழந்தைகளுக்கு "கதை சொல்லும் நேரம்' என்ற நிகழ்வு சனி, ஞாயிற்றுகிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் சொல்லி தரப்படுகிறது. நீதி போதனை கதைகள் எடுத்து சொல்லப்படுகிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், ரெயில்வேயில் பணியில் சேருவதற்கான தேர்வு, வங்கி தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மணலி, எண்ணூர், பொன்னேரி என சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வந்து பங்கேற்கிறார்கள். இந்த நூலகத்தில் 12 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இங்கு 1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஞாயிறு தோறும் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 2 மாதத்துக்கு ஒருமுறை இந்த தேர்வு நடைபெறுகிறது. இங்கு பயிற்சி வகுப்பு நடத்தும் பல்வேறு துறை நிபுணர்கள், ஆசிரியர்கள் எந்தவித பிரதிபலனும் பாராமல் எந்த ஊதியமும் இல்லாமல் அர்ப்பணிப்புடன் வந்து பயிற்சி அளிக்கிறார்கள்.

விருதுகள்

2013, 2014-ஆம் ஆண்டுகளில் தமிழகத்திலேயே அதிக புரவலர்கள் சேர்த்ததற்கான விருது 2015 -ஆண்டில் தமிழகத்திலேயே அதிக நன்கொடை பொருட்களை பெற்றதற்கான விருது, 2014, 2016 -2017 -ஆம் ஆண்டுகளில் தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை சேர்த்ததற்கான விருது என விருதுகள் குவித்துள்ளது.

இந்நூலகத்தில் டிஜிட்டல் நூலகம், பார்வையற்றோருக்கான பிரெய்லி நூலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம், பேச்சுப் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கான கணினி பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது என்கிறார் நூலகர் பேனிக் பாண்டியன்.

""கன்னிமாரா நூலகம் செல்ல வேண்டுமானால் இங்கிருந்து தூரம் அதிகம். பஸ், ரயில் எனப் பிடித்து செல்ல வேண்டியிருக்கிறது. அதற்குச் செலவும் ஆகும். எங்கள் பகுதியில் இது போன்ற நூலகம் அமைந்திருப்பது எங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. குறிப்பாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்குப் பல விதங்களில் உதவி செய்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தித் தங்களது எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைத்து கொள்ள வேண்டும்'' என்கிறார் வாசகரான திருவேங்கடம்.

""எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த நூலகத்திற்கு வந்துவிடுவேன். குறிப்பாக ஆங்கில ஆறிவை மேம்படுத்திக்கொள்ள வசதியாக ஆங்கிலத் தினசரிகளை தவறாமல் படித்துவிடுவேன். பல மொழிகளைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது அதற்கு இந்த நூலகம் எனக்கு பெரிதும் உதவியாக உள்ளது'' என்கிறார் கல்லூரி மாணவி சங்கீதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com