
பண்டைய காலத் தமிழர்களின் நாகரீகம்,பண்பாடு,வாழ்வியல் நடைமுறை ஆகியவை குறித்து வெளிப்படுத்தும் பல்வேறு அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்ட கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி குறித்து சீனா பெய்ஜிங் பன்னாட்டுக் கல்வி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீன மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.கீழடி குறித்து பல்வேறு விஷயங்களை விவரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டனர் என்கிறார் மண்ணிவாக்கம் நடேசன் பள்ளித் தாளாளர் என்.ராமசுப்ரமணியன்.
சர்வதேச கலாசார பரிமாற்றம், கல்வி மேம்பாடு திட்டத்தின்கீழ் நடேசன் பள்ளி ஆண்டுதோறும் மாணவர்கள்,ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
அண்மையில் சீனா,மலேசியா ஆகிய நாடுகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்களுடன் சென்று வந்துள்ள நடேசன் பள்ளித் தாளாளர் என். ராமசுப்ரமணியன் மேலும் கூறியது:-
""சர்வதேச கல்வி,கலாசார பரிமாற்றத் திட்டத்தின்கீழ் கடந்த நவம்பர் மாதம் சீனா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு பள்ளியின் முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன் உள்பட 22 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொண்ட கல்விக்குழுவினர் பயணம் மேற்கொண்டனர்.
சீனாவில் பெய்ஜிங் பல்கலைக்கழகம்,பெய்ஜிங் ஜாத்துங் பல்கலைக்கழகம், அந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்த பள்ளி,ஷாங்காய், பெய்ஜிங் பள்ளிகள்,மலேசியாவில் சில பள்ளிகளை அனைவரும் பார்வையிட்டோம்.
பெய்ஜிங் பல்கலைக்கழக சர்வதேச கல்வி மையம் ஒருங்கிணைப்பாளர் ஜெஸ்ஸி அழைப்பின் பேரில் சென்ற நடேசன் பள்ளி கல்விக்குழு மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள், படிப்புகள், கல்வியுடன் மாணவர்களுக்கு அளிக்கப்படும் இதர வசதி வாய்ப்புகள் குறித்துத் தெரிந்து கொண்டனர்.
பெய்ஜிங் பன்னாட்டுப் படிப்புப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சீன மாணவர்கள்,ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு தமிழ்மொழி மற்றும் தமிழர் கலாசாரம் குறித்து ஆராய்ச்சிப்படிப்பை மேற்கொண்டு வரும் சீன மாணவர்கள் பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் குறித்து அறிந்து கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி தொல்பொருள் அகழ்வாராய்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
தற்போது அவர்கள் மேற்கொண்டு வரும் கீழடி ஆராய்ச்சி நடவடிக்கை தொடர்பாக, தமிழ்நாட்டிற்கு நேரில் வர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினர். தமிழ் மொழி மீது கொண்ட பற்றுக் காரணமாக அனைத்து சீன மாணவர்களும் தங்களது சீன பெயர்களுடன் செல்லப் பெயர்களாக ஈஸ்வரி, அதியமான், கயல்விழி பெயரிட்டு வகுப்பில் ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டதும் எங்களை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. சீன மாணவர்களின் வேண்டுகோளின் பேரில் நடேசன் பள்ளி மாணவி பரதநாட்டியம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.
பின்னர் நாங்கள் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர், சியான் நகரச் சுவர், ஷாங்காய் அருங்காட்சியகம், மக்கள் சதுக்கம், வாரியார்ஸ் மியூசியம், ஷாங்காய் கோபுரம், கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள உயிரினங்கள் அருங்காட்சியகம், ஒலிம்பிக் பூங்கா, கோடை மற்றும் குளிர் கால அரண்மனை, மலேசியாவில் உலகின் பழைமையான காட்டுப்பகுதி தமன்நெகாரா, இரட்டைக் கோபுரம்,வாழ்க்கை நதி உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு திரும்பினோம்.
கடந்த 5 ஆண்டுகளில் சர்வதேசக் கல்வி,கலாசார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்து,தைவான்,தென்கொரியா,பெல்ஜியம்,பிரான்ஸ்,ஸ்விட்சர்லாந்து, தர்லாந்து,ஸ்பெயின்,இலங்கை,மாலத்தீவு,லாவோஸ்,கம்போடியா,வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மாணவர்கள்,ஆசிரியர்களை அழைத்துச் சென்று வந்துள்ளோம்'' என்றார் என்.ராமசுப்ரமணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.