சூழலியல் விழிப்புணர்வு... ஒரு தொடர் ஓட்டம்!

இந்த மண்ணின் சொர்க்கம் தூய்மையான சூழலே என்று உரக்கச் சொல்பவர். உலகளாவிய புகழுக்குச் சொந்தக்காரர்.
சூழலியல் விழிப்புணர்வு... ஒரு தொடர் ஓட்டம்!
Updated on
3 min read


இந்த மண்ணின் சொர்க்கம் தூய்மையான சூழலே என்று உரக்கச் சொல்பவர். உலகளாவிய புகழுக்குச் சொந்தக்காரர்.

எளிய வாழ்க்கைச் சூழலிலும் மனம் இருந்தால் பெரும் சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு உதாரணம். இவரது ஆயுதம் நேர்மறைச் சிந்தனை. நம்பிக்கைச் சிந்தனையாளர். சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் இவரது சிந்தனைகள் சமூக மேம்பாட்டுக்குப் பங்களித்துள்ளன. சூழலியல் ஆய்வாளர், களப்பணியாளர், தீவிர செயற்பாட்டாளர் என்று பல முகங்கள் இவருக்கு உண்டு. தன் எண்ணங்களுக்கு ஏற்ப இவர் தான் வாழும் இடத்தை துப்புரவாகவும் பசுமையாகவும் மாற்றியிருக்கிறார். "சுற்றுச்சூழலும் சுகாதாரமும் இருகண்கள்' என கருதும் இவர் "சுற்றுச்சூழல் சூடாமணி' விருது பெற்றவர். திடக்கழிவு மேலாண்மை இவரது மிகப்பெரும் சாதனை என்றே சொல்லலாம்.

வங்கிப் பணியில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், தன் மாறுபட்ட சிந்தனைகளாலும் தீவிர செயல்பாடுகளாலும் படிப்படியாக உயர்ந்தவர்.

எக்ஸ்னோரா நிறுவனத்தின் நிறுவனர் எம்.பி. நிர்மல் தான் இந்தச் சாதனைகளுக்குச் சொந்தக்காரர். கரோனா நோய்த்தொற்று சென்னையில் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த நாளிலும் இவர் உற்சாகத்தோடு தன் செயல்பாடுகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் ஓர் உரையாடல்:

ஏழாம் அறிவு பற்றி சொல்லுங்கள்

"ஏழாம் அறிவு' என்ற ஒரு நிகழ்ச்சியை தொடர் நிகழ்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறேன். மனிதவள மேம்பாடு தொடர்பான கருத்தரங்குகள் சொற்பொழிவுகள் இவற்றை நானே முன்னின்று நடத்துகிறேன். இதனால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுகிறது. இது சுற்றுச்சூழல் தொடர்பானது மட்டுமல்ல, மனிதவளம், பெண்கள் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் என்று பல பரிமாணங்களைக் கொண்டது. "அக்னி ஸ்திரீ' என்று பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறேன்.

இயற்கை ஆர்வலராக எப்போது உங்களை உணர்ந்தீர்கள்?

நேர்மறை சிந்தனை என்னை பல புதிய சிந்தனைகளுக்கு அழைத்துச் செல்கிறது. பருவ நிலை மாற்றம் என்பது இன்றைக்கு மிகப்பெரும் பேசுபொருளாக இருக்கிறது. எங்கள் பசுமை வீட்டில் அன்றாடம் விவசாயியை நாங்கள் வணங்குகிறோம். தாவரங்கள் நம்மை வாழ வைக்கின்றன என்பது மிக எளிய உண்மை. அவை நமக்குப் பிராணவாயுவை தருகின்றன. அவற்றைக் காப்பது, நம்மை நாம் காப்பதற்கு ஒப்பானது. மரங்கள் வெட்டப்படுவதைத் தவிர்க்கவும், தடுக்கவும் முயற்சிக்கிறோம். புதிய மரங்கள் நடுவதையும் பேணி வளர்ப்பதையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். மரங்கள் வளர்ப்பதில் இளம்தலைமுறை ஆர்வம் காட்டுகிறார்கள். எந்த ஒரு சிந்தனையையும் இளம்தலைமுறையிடம் கொண்டு சேர்த்து விட்டால் பெரும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையோடு மரம் வளர்ப்பது தொடர்பாக பல போட்டிகளை கல்லூரிகள் அளவில் நாங்கள் நடத்தி வருகிறோம்.

சர்வசமய பிரார்த்தனை பற்றி சொல்லுங்கள்...

மனநலம் என்பது ஒற்றுமை, ஜீவகாருண்யம் இவற்றினால் ஏற்படுவது. என் வீட்டையே நான் டெம்பிள் ஆஃப் டெம்பிள்ஸ் என்று கூறுகிறேன். என் வீட்டில் ஒரே இடத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் என்று பல சமயத்தவர்களையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழிபாடு நடத்துவதற்கும், பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். ஒரே நேரத்தில் அனைத்து சமயத்தவர்களும் ஒன்றாகக் கூடி அவரவர் முறையில் பிரார்த்தனை செய்கின்றனர். குறிப்பாக இதனைப் பள்ளிக் குழந்தைகள் வழியாகச் செயல்படுத்துகிறோம். அனைத்து உயிர்களிடத்திலும் நேசம் காட்டுவதற்கும் கூடி வாழ்வதற்கான பயிற்சியாகவும் இது அமைகிறது.

இவ்வளவு சாதனைகளை கால் நூற்றாண்டு காலத்தில் படைத்திருக்கிறார்கள் இதற்காக நீங்கள் கடந்து வந்த பாதை எப்படியானது?

நான் எப்போதுமே ஒரு நேர்மறை சிந்தனையாளன். எல்லாம் எளிதாகத்தான் இருக்கிறது. சில முயற்சிகள் அந்த நேரத்தில் பலன் தராமல் போயிருக்கின்றன. ஆனால் அந்த முயற்சியே தோல்வி என்று சொல்ல முடியாது. அது வேறு ஒரு சமயத்தில் கை கொடுக்கும். கவுன்சிலர் போன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தலில் தேர்தல் வரும் பொழுது மாறிவிடுகிறார்கள், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் நாங்கள் எடுக்கும் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியைச் சந்திக்கின்றன. அவற்றை நாங்கள் மீண்டும் செயல்படுத்துவதற்கான முனைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஒரே செயல் திட்டத்தை செயல்படுத்த எங்கள் முயற்சியை உழைப்பை செலுத்துகிறோம். மற்றபடி தோல்வி என்று சொல்வதற்கு ஏதுமில்லை. தோல்வி என்று ஒன்று இருப்பதாகவே நாங்கள் நினைக்கவும் இல்லை. சில உடனடியாக பயன்தரும், சில மிகுந்த முயற்சிக்குப் பின் பலன் தரும். அவ்வளவுதான்.

பசு பாதுகாப்பு, கன்றுக்குட்டி வளர்ப்பு இதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

ஜீவகாருண்யம் என்பது உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களையும் நேசிப்பது, அவற்றையும் அரவணைத்துக் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, இதுதான் எங்கள் கொள்கை. உண்மையில் நான் கொசுவைக் கூடக் கொல்வதில்லை. பெண் சிசுக்கொலை என்பதைப்போல பசு என்று வரும்பொழுது பசு காளைக் கன்றை ஈன்றால், அதை அப்போதே கொன்றுவிடும் வழக்கம் இருக்கிறது. அது பயனற்றது என்று கருதுகிறார்கள். பிறந்த சிசு கொல்லப்படுவது எவ்வளவு பாவமோ அதேபோலத்தான் பிறந்தவுடன் கொல்லப்படும் கன்றுகளையும் நினைக்கிறேன். வயது முதிர்ந்த பசுக்கள் உணவுக்காக கொல்லப்படுவதைத் தவிர்க்கவும் எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்கிறோம். வீட்டு காய்கறிக் கழிவுகள் போன்றவற்றை இந்த வயதான பசுக்களுக்கு உணவாகத் தருகிறோம். இதனால் அவை காப்பாற்றப்படுகின்றன. அதே நேரத்தில், அந்தப் பசுக்களின் சாணத்தைக் கொண்டு இயற்கை உரமும் இயற்கை எரிவாயுவும் தயார் செய்கிறோம். அந்தவிதத்தில் இந்தப் பசுக்கள் இறுதிவரை மனிதனுக்கு உதவியாகவும் வாழ்கின்றன. எல்லா ஜீவராசிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த பிரபஞ்சம். இதில் மனிதன் ஒரு பகுதிதான். அதனால் நம்மால் இயன்றவரை உயிர்களைக் கொல்லாமை அவசியம் பின்பற்றப்பட வேண்டியது. என்னைப் பொருத்தவரை நான் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளும் ஓர் உயிரைக் கொன்று உருவானதாக இருக்கக் கூடாது என்று கருதுகிறேன். அதனால்தான் தாவர உணவுப் பழக்கத்தையும் பின்பற்றுகிறேன்.

சூழலியல் தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றி...

தொடர்ந்து மரம் நடுவது, மாடித் தோட்டங்கள் வளர்ப்பது, அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தோட்டங்கள் அமைக்க முடியும் என்ற செயல்முறை விளக்கத்தை முன்வைப்பது என்று எங்கள் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல பிரபலங்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துகிறோம். கல்லூரி மாணவர்களிடம் பள்ளி குழந்தைகளிடம் மரம் வளர்ப்பது பற்றிய பயிற்சி, சவால் என பல வழிகளிலும் நம்மைச் சுற்றி பசுமை அமைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறோம்.

பலரும் எங்களோடு கைகோர்த்து நிகழ்ச்சியை மேலும் மேலும் பல ஊர்களுக்கும் விரிவுபடுத்தி தொடர்ந்து செயல்படுகிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சி தொடர் ஓட்டம். இதில் செயல் என்பது தான் முதன்மையானது. செயல்படுபவர்கள் பயனாளிகளாகவும் மாறுகிறார்கள்.

தமிழக அரசின் விருது முதல் சர்வதேச விருதுகள் வரை உங்கள் சாதனைகளுக்காக பெற்றிருக்கிறீர்கள் இன்னும் என்ன சாதிக்க இருப்பதாக நினைக்கிறீர்கள்?

சாதனைகளுக்கு எல்லையே இல்லை. உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அந்தத் தீர்வை உலகத்தின் முன் எடுத்து வைக்க வேண்டும். உலகம் மாசற்ற உலகமாக இயங்கவேண்டும். விவசாயம் என்பது மனித வாழ்வின் அடிப்படைத் தேவை. அது செழிப்புடன் இருக்க வேண்டும். மனித இனத்தின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இறுதிவரை உழைக்க வேண்டும். எல்லாரும் எல்லா வளமும்

நலமும் பெற்று வாழ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com