அழகு மிக்க அனந்த வாசுதேவர்

நமது இந்தியத் திருநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலங்களில் ஒடிசா (ஒரிசா) வும் ஒன்று. அதன் தலைநகராக விளங்கும் புவனேசுவர் கோயில் நகரமாக விளங்கும் சிறப்புடையது.
அழகு மிக்க அனந்த வாசுதேவர்
Published on
Updated on
2 min read

நமது இந்தியத் திருநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலங்களில் ஒடிசா (ஒரிசா) வும் ஒன்று. அதன் தலைநகராக விளங்கும் புவனேசுவர் கோயில் நகரமாக விளங்கும் சிறப்புடையது. கலையழகு மிக்க லிங்கராஜா, முக்தேசுவரர், பரசுராமேசுவரர், பிரம்மேசுவரர் ராஜாராணி கோயில், சூரியனார் கோயில் போன்ற பல கோயில்களைக் காணலாம். வழிபாடு சிறப்புமிக்கப் பூரி ஜெகந்நாதர் கோயிலில் நடைபெறும் ரதயாத்திரை மிகவும் சிறப்பானது. 

தமிழ்நாட்டு வரலாற்றோடு குறிப்பாக சோழ மன்னர் வரலாற்றோடு ஒடிசா மிகுந்த தொடர்பு உடையது. கலிங்கம் எனவும் குறிக்கப்படுகிறது. பேரரசர் அசோகர் வாழ்க்கையில் திருப்பம் மாற்றம் ஏற்பட்டது இங்குதான். புகழ்வாய்ந்த அசோக மன்னரின் தெளலி கல்வெட்டுகள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஹாத்திகும்பா- காராவேலன் மன்னர் கல்வெட்டு போன்றவை சிறப்பு மிகுந்த இடங்களாக விளங்குகின்றன.

புவனேசுவர் நகரில் உள்ள திருக்கோயில்களில் பிந்துசாகர் (பிந்துசரஸ்) எனப்படும் பெரிய திருக்குளத்தின் அருகில் அமைந்துள்ள அனந்த வாசுதேவர் கோயில் சிறப்பானதாக விளங்குகிறது.

இக்கோயிலில் நடைபெறும் (அமுது) பிரசாத வழிபாடு சிறப்பானது. 

அனந்தவாசுதேவர் கோயில் அருகே அமைந்துள்ள லிங்கராஜ கோயிலும் பிந்து சாகர் குளம் அருகே அமைந்துள்ளது. சிவபெருமானும், உமாதேவியும் அசுரர்களை அழிப்பதற்காக இங்கு வந்த பொழுது, உமா தேவிக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட, சிவபெருமான் தனது சூலாயுதத்தால் இந்நீர் நிலையை ஏற்படுத்தியதாகப் புராண வரலாறு கூறுகிறது.

அனந்தவாசுதேவர் கோயிலில் கிருஷ்ணன், பலராமர், சுபத்ரா தேவி எழுந்தருளி அருள்புரிகின்றனர். பலராமர் தலைக்கு மேலே ஏழுதலை நாகம் குடைபிடிக்கக் காட்சி தருகிறார். சுபத்ரா தேவி தனது கரங்களில் தாமரை மலர்களைத்தாங்கியும், நகைகள் நிரம்பிய பாத்திரத்தையும் தாங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். அவரது இடது கால் மற்றொரு நகைகள் அடங்கிய பாத்திரத்தின் மீது வைத்த நிலையில் உள்ளது. கிருஷ்ணன் சங்கு-சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றை தனது கரங்களில் தாங்கி காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரில் கருடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
இக்கோயில், கீழைகங்க அரசவம்சத்தைச் சேர்ந்த அனங்கபீமன் என்ற மன்னனின் மகளான சந்திரதேவி என்பவரின் விருப்பத்திற்கு ஏற்ப பானுதேவன் என்ற அரசனால் கி.பி.1278-இல் கட்டப்பட்டதாகும். ஒடிசா கட்டடக்கலை பாணியில் கருவறை, ஜக்மோகன், நடன மண்டபம், போக மண்டபம் என்ற அமைப்புகளுடன், அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் இக்கோயில் காட்சி அளிக்கிறது. இக்கோயிலின் கருவறைக்கு முன் உள்ள ஜக்மோகன் பகுதியில் வராகர், திரிவிக்ரமர் திருமாலின் வடிவங்கள் காணப்படுகின்றன. திருக்கோயிலின் வெளிப்புறச்சுவர் முழுவதும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளும், திக்பாலர், எண்திசை காவலர்களின் சிற்ப வடிவங்களும் திருக்கோயிலை அழகு செய்கின்றன.

அனந்த வாசுதேவர் கோயிலில் பெருமாளுக்குப் படைக்கப்படும் அமுது தயாரிக்கும் முறை சுவையானது. மடைப்பள்ளியில் பிரசாதம் மண்பானையில் செய்யப்படுகிறது. மண்பானையின் வடிவமைப்புத் தனிச்சிறப்பு வாய்ந்தது. கீரை வகைகள், பரங்கிக்காய் போன்றவற்றை வைத்து 10-12 வகையான அமுது செய்கின்றனர். இதனை மகாபிரசாதம் எனச் சிறப்புடன் கூறுகின்றனர். இது பற்றியும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. பிருந்தாவன மக்களை கிருஷ்ணன் கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்து காப்பாற்றிய பொழுது, மக்கள் அவருக்கு ஏழு நாள்கள் 8 முறையாக 56 அமுதுகள் படைத்ததாகக் கூறப்படுகிறது. அதனை நினைவூட்டும் வகையாக மகாபிரசாதம் நாள்தோறும் இக்கோயிலில் பெருமாளுக்கு படைக்கப்படுகிறது. இப்பிரசாதத்தை மக்கள் வாங்கிச் சென்று சாப்பிடுகின்றனர்.

தமிழகத்திலும் இதே போன்று ஸ்ரீரங்கம் கோயிலில் புதிய பானையில் அமுது செய்விக்கப் பெற்று அரங்கநாதப் பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது. மண்பானை "கூண்' என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டிலும் "கூண்' என்ற பெயரே காணப்படுவது சிறப்பானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com